ராமாயணச் சிறப்பும் பாராயணப் பயனும்!

ராமாயணச் சிறப்பும் பாராயணப் பயனும்!

ராம+அயணம்=ராமாயணம். இதன் பொருள் ராமனின் வழியில் செல்லுதல் என்பதாகும். ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகள் இதிஹாஸங்கள் என்று போற்றப்படுகின்றன. இதிஹாஸம் – இதி ஹ ஆசம் என்பதின் பொருள் இப்படி நடந்தது; நடந்த ஒரு வாழ்க்கையையை விவரித்துச் சொல்லுவது ராமாயணம்.

மகரிஷி வால்மீகியால் இயற்றப்பட்ட ராமாயண காவியம் ஆறு காண்டங்கள், ஐநூறு ஸர்க்கங்கள், இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் என்று கணக்கிட்டு ராமாயண காவியத்தை இயற்றியதாகக் கூறுவர்.

வால்மீகி ராமாயணத்தின் சிறப்பு

ஸ்ரீஸ்கந்த புராணம் உத்தர காண்டத்தில் நாரத மகரிஷி சனத்குமாரர் இடையே நடக்கின்ற உரையாடலில் வால்மீகி ராமாயணத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. “நாஸ்தி ராமாயணத் பரம்” என்று முடிகின்றன இந்த ஸ்லோகங்கள்.

நாஸ்தி கங்காஸமம் தீர்தம் நாஸ்தி மாத்ருஸ்மோ குரு:

நாஸ்தி விஷ்ணுஸ்மோ தேவோ நாஸ்தி ராமாயணாத் பரம்.

கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தம் இல்லை. தாய்க்கு நிகரான குரு இல்லை. விஷ்ணுவிற்கு நிகரான தெய்வம் இல்லை. ராமாயணத்தைக் காட்டிலும் உயர்ந்த நூல் எதுவுமில்லை. (அத்யாயம் 5, ஸ்லோகம் 21)

நாஸ்தி வேதஸமம் ஷாஸ்த்ரம் நாஸ்தி ஷாந்திஸமம் சுகம்

நாஸ்தி ஷாந்திபரம் ஜ்யோதி: நாஸ்தி ராமாயணாத் பரம்

மறைகளுக்கு நிகரான சாத்திரங்கள் இல்லை. மன அமைதிக்கு நிகரான சுகம் இல்லை. சாந்தியைக் காட்டிலும் மேலான ஒளி இல்லை. ராமாயணத்தைக் காட்டிலும் உயர்வான காவியம் இல்லை. (அத்யாயம் 5, ஸ்லோகம் 22)

நாஸ்தி க்ஷமாஸமம் ஸாரம் நாஸ்தி கீர்திஸமம் தநம்

நாஸ்தி க்ஞாநஸமோ லாபோ நாஸ்தி ராமாயணாத் பரம்

பொறுமைக்கு நிகரான பலம் இல்லை. புகழுக்கு நிகரான செல்வம் இல்லை. மெய்ஞானத்திற்கு நிகராகப் பெறத்தக்கது இல்லை. இராமயணத்திற்கு மேலாக வேறொரு பொருள் இல்லை. (அத்யாயம் 5, ஸ்லோகம் 23)

ராமாயணத்தை எப்போது கேட்க வேண்டும்

சைத்ரே மாகே கார்திகே ச ஸிதே பக்ஷே ச வாசயேத்

நவாஹஸ்ஸூ மஹாபுண்யம் ஷ்ரோதவ்யம் ச ப்ரயத்நத:

சித்திரை, மாசி, கார்த்திகை மாத வளர்பிறையில் ஒன்பது நாட்கள் கேட்பது என்ற முறைப்படி, மிகவும் ஆர்வத்துடன் கதையைக் கேட்க வேண்டும். (அத்யாயம் 1, ஸ்லோகம் 34)

ராமாயணம் கேட்பதின் பலன்

நவாஹ்நா கில ஷ்ரோதவ்யம் ராமாயண கதாம்ருதம்

பக்தி பாவேந தர்மாத்மந் ஜந்மம்ருத்யு ஜராபஹம்

ராமாயண கதையை பக்திபூர்வமாக ஒன்பது தினங்கள் கேட்டாலே, அது அவனுடைய மறுபிறவி, வயோதிகம், மரணம் ஆகியவற்றை அழித்து விடும். (அத்யாயம் 3, ஸ்லோகம் 57)

ராமப்ரஸாதஜநகம் ராம பக்திவிவர்தநம்

ஸர்வபாபக்ஷயகரம் ஸர்வஸம்பத் விவர்த்தநம்

ராமாயண காவியம், ராமனுடைய பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது. ராம பக்தியை வளர்ப்பது. எல்லாப் பாவங்களையும் அழிப்பது. எல்லாச் செல்வங்களையும் வளர்ப்பது. (அத்யாயம் 5, ஸ்லோகம் 68)

யஸ்யவேதத் ஷ்ருணுயாத், வாபி படேத் வா ஸூஸமாஹித:

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி

எவனொருவன், மன ஒருமைப்பாட்டுடன் ராமாயணத்தைக் கேட்கவோ, படிக்கவோ செய்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகத்தைச் சென்றடைகிறான். (அத்யாயம் 5, ஸ்லோகம் 69)

ஏததாக்யாநமாயுஷ்யம் படந் ராமாயணம் நர:

ஸபுத்ரபௌத்ர: ஸகண: ப்ரேத்ய ஸ்வர்கே மஹீயதே

ராமாயணம் என்ற இந்த காவியத்தைப் படிப்பவருக்கு மகன்கள், பேரன்கள் மற்றும் உறவினர்கள் கூட சேர்ந்திருக்கும் நீண்ட ஆயுள் கிட்டுகிறது. (உயிர் துறந்த பின்) அவர் சுவர்க்கத்திற்குச் சென்று நிலையாகத் தங்கிவிடுவார். (வால்மீகி ராமாயணம், பால காண்டம், ஸர்க்கம் 1, ஸ்லோகம் 99)

இந்த அமரகாவியம் எப்போதும் நிலைத்திருக்கும்

யாவத்ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஷ்ச மஹீதலே

தாவத்ராமாயணகதா லோகேஷூ ப்ரசரிஷ்யதி

மண்ணுலகில் எந்தக் காலம் வரையிலும் மலைகளும், ஆறுகளும் நிலைத்திருக்குமோ, அந்தக் காலம் வரை ராமாயணக் காவியம் மக்களிடையே மதிப்புடன் விளங்கும்.

(பால காண்டம், ஸர்க்கம் 2, ஸ்லோகம் 36)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com