வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக…

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக…

ஸ்ரீ மகாலட்சுமியை, அலைமகள் மலர்மகள், திருமகள் என்றெல்லாம் போற்றி வழிபாடு செய்கின்றோம். இல்லங்களில் ஐஸ்வர்யம் செழிக்க அஷ்ட லட்சுமிகளில், விஷ்ணு ப்ரியையான ஸ்ரீ மகாலட்சுமி தாயாரைப் போற்றி வணங்குகிறோம்.

செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியான ஸ்ரீ லட்சுமி தேவியின் பூரண கிருபை இல்லங்களில் செழித்திருக்க குடும்பத் தலைவிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. கோலம் போடுவது, விளக்கேற்றுவது, சாணத்தினால் மெழுகுவது போன்ற அன்றாட செயல்களைக் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய முக்கியமான செயல் ஒன்று உள்ளது.

விலைவாசி மிகவும் அதிகரித்துக்கொண்டே இருக்கிற இந்தக் காலத்தில் பொருளாதார நிலையும் சீர்கெட்டு வருகிறது. இந்த நிலையில் எந்தவித தடங்கலும் இன்றி, நமக்கு வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றால், குடும்பத் தலைவியானவள், வெள்ளிக்கிழமை அன்று கடையில் புதியதாக தூள் உப்பு அல்லாமல் கல் உப்பு வாங்கி, அன்று அதை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு வாங்க வேண்டும் என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது பொருள் அல்ல. காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலும், மதியம் ஒன்று முதல் இரண்டு மணி வரையிலும், மாலை ஆறு முதல் ஆறரை மணி வரையிலும் மட்டுமே வெள்ளிக்கிழமைகளில் கடையில் கல்லுப்பை வாங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு வாங்குவதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். ஸ்ரீ மகாலட்சுமி ஆனவள் பாற்கடலில் தோன்றியவள் என்பது யாவருமே அறிந்த ஒரு விஷயம்தான். கடலில் இருந்துதான் உப்பும் நமக்குக் கிடைக்கிறது. அதனால் உப்பானது ஸ்ரீ லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. உணவு பரிமாறும்பொழுது இடக்கையால் உப்பு எடுத்து பரிமாறக்கூடாது என்று பெரியோர்கள் கூறி இருப்பதும் அதனால்தான்.

ஸ்ரீ மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்ர வாரம் என்று போற்றப்படும் வெள்ளிக்கிழமை. சுக்ரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி. எனவேதான் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ லட்சுமியின் அம்சமான உப்பை வாங்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவத்தை நிலைநாட்டிய ஸ்ரீ வேதாந்த தேசிகர் தன்னுடைய ஸ்ரீ ஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் மங்களகரத்துக்கு எல்லாம் மங்களமாகத் திகழ்பவள் ஸ்ரீ மகாலட்சுமி என்று வர்ணித்து இருக்கிறார்.

உப்பு பெறாத சமாச்சாரம் என்று ஒதுக்கி விடாமல், வெள்ளிக்கிழமைகளில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் கல் உப்பை வாங்கி, அன்றைய உணவில் சேர்த்து சகல   செல்வங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com