கர்ம யோகம்!

கர்ம யோகம்!

ன்றைய அவசர உலகில், ஒருசிலர் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ள வேண்டிய கடமைகளைக் கூட மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்று உரைத்த இறைவனின் அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தனது கடமையை எவ்வாறு ஒழுங்குடன் செய்தார் என்பதை படிப்பினையாகக் கொள்ள வேண்டியது அவசியம்.

மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. போரில் அர்ஜுனனுக்கு சாரதியாக அவனுடைய தேரை ஒட்டி சேவை புரிந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். ஒவ்வொரு நாள் போருக்குப் பிறகும் மாலையில் வீரர்கள் தமது இருப்பிடம் திரும்புவது வழக்கம். அதன்படியே, சாரதி ஸ்ரீ கிருஷ்ணனும், வில்லாளி அர்ஜுனனும் மாலையில் போர் நிறுத்தம் அறிவித்தவுடன் தத்தமது கூடாரத்துக்குத் திரும்புவார்கள். அர்ஜுனன் நேராகத் தமது கூடாத்துக்குள் சென்று ஓய்வெடுப்பான். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரோ, அப்படிப் போக மாட்டார். தேரிலிருந்து முதலில் குதிரைகளை அவிழ்த்து விடுவார். தேரை அதனுடைய இருப்பிடத்துக்குத் தள்ளிச் சென்று நிறுத்துவார். அதன் பின்பு குதிரைகளிடம் வந்து, அன்புடன் அவற்றை வருடிக் கொடுப்பார். பிறகு குதிரைகளைக் குளிப்பாட்டி விட்டு, அவற்றுக்குத் தீனி எடுத்து வைப்பார். குதிரைகள் ஆவலுடன் அவற்றை உண்பதை பாசத்துடன் உடன் இருந்து கவனிப்பார். அவை பசியாறியதும், அவற்றுக்குத் தண்ணீர் எடுத்து வைப்பார். குதிரைகள் தண்ணீர் குடித்து, நிம்மதியாகப் பெருமூச்சு விட்ட பிறகே, தனது இருப்பிடத்துக்கு வந்து தனது உடலை சுத்தப்படுத்திக் கொள்வார்.

அவருடைய இந்த தினசரி அலுவல்களைப் பார்த்த அர்ஜுனன், “நீ ஏன் கிருஷ்ணா இவ்வளவு சிரமப்படுகிறாய்? இந்த வேலைகளைச் செய்யத்தான் நம்மிடம் நிறைய வேலையாட்கள் இருக்கிறார்களே. அவர்களிடம் சொல்லக்கூடாதா?” என்று கேட்பான்.

அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, “அர்ஜுனா, இப்போது நான் ஒரு தேரோட்டி. இந்த வேலைகளையெல்லாம் ஒரு தேரோட்டிதான் செய்ய வேண்டும். நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். இவ்வாறு அவரவர் தங்கள் கடமைகளை அவரவரே செய்வதைத்தான், ‘கர்ம யோகம்’ என்பர். நான் அதைத்தான் செய்தேன்” என்பார்.

பகவானே ஆனாலும், தான் ஏற்றக் கடமையை முழுமையாக நிறைவேற்றுவதுதான் ஒருவரின் கர்ம யோகம் என்பதை அர்ஜுனன் புரிந்துகொண்டான்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com