மகாவிஷ்ணுவின் சக்ரத்தைப் பெற்றுத் தந்த விஷ்வக்சேனர்!

மகாவிஷ்ணுவின் சக்ரத்தைப் பெற்றுத் தந்த விஷ்வக்சேனர்!

வைகுண்டத்தில் திருமாலுக்கு இடைவிடாது தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர் மூவர்; அனந்தன், கருடன், விஷ்வக்சேனர். துலா (ஐப்பசி) மாதம் பூராட நட்சத்திரத்தில் பிறந்த விஷ்வக்சேனரின் மனைவி பெயர் சூத்ராவதி. மகாவிஷ்ணுவின் சேனைத் தலைவராக விளங்குவதால் இவர், ‘சேனைமுதலி’ என்றும், ‘சேனாதிபதி ஆழ்வான்’ என்றும் பெயர் பெற்றார். எம்பெருமானின் சேஷ பிரசாதத்தை முதலில் கொள்பவராதலால் இவருக்கு, ‘சேஷாசநர்’ என்ற திருநாமமும் உண்டு. திருமாலிருஞ்சோலையில் விஷ்வக்சேனரை தர்மபத்தினி சூத்ராவதியுடன் சேவிக்கலாம்.

மகாவிஷ்ணு என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர். இவரின் கையில் பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை ஏந்தி தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், மருத கணங்கள், வித்யாதரர்கள், ஆழ்வார்கள் மற்றும் அடியார்கள் என்று மகாவிஷ்ணுவை தரிசிக்க வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவார். நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசர பட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். பராசர பட்டர் தனது விஷ்ணு சஹஸ்ரநாம வியாக்யான ஆரம்ப மங்கள ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதரின் சேனைத் தலைவரான விஷ்வக்சேனரை வணங்குகிறார். அதேபோல, ஸ்ரீ வேதாந்த தேசிகன் யதிராஜ ஸப்ததியில் இவரை வணங்குகிறார். சடகோபர் இவரின் அம்சமாகவே அவதரித்தார். இத்தனை பெருமைக்குரியவர் விஷ்வக்சேனர்.

ருமுறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க மகாவிஷ்ணுவுக்கு ஒரு சக்ராயுதத்தைக் கொடுத்தார் ஈஸ்வரன். அந்த சக்ராயுதத்தை வீரபத்திரர் மீது கோபத்தில் ஏவினார் மகாவிஷ்ணு. வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையாக அணிந்திருப்பார். அதில் ஒரு கபாலம் மகாவிஷ்ணு ஏவிய சக்ராயுதத்தை வாயைத் திறந்து விழுங்கி விட்டது. ‘சக்ராயுதத்தை இந்த வெண் தலை கபாலம் விழுங்கி விட்டதே’ என்று யோசனையில் ஆழ்ந்தார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவின் யோசனை விஷ்வக்சேனருக்குத் தெரிந்து விட்டது. வயிரவரின் சூலத்திலிருந்து ஒரு முறை விஷ்வக்சேனரை மகாவிஷ்ணு அந்த சக்ராயுதத்தை வைத்து காப்பாற்றி இருந்தார். ஆகையால், அந்த சக்ராயுதத்தை மீட்டு மகாவிஷ்ணுவுக்குத் தர வேண்டும் என்று விஷ்வக்சேனர் எண்ணினார்.

வீரபத்திரரிடம் சென்ற விஷ்வக்சேனரை, காவல் காத்துக்கொண்டிருந்த பானு, கம்பன் என்ற காவலாளிகள் உள்ளே விட மறுத்தனர். உடனே விஷ்வக்சேனர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்கத்தையே வீரபத்திரராக நினைத்து வழிபட்டார். இவரது பக்தியில் மகிழ்ந்த வீரபத்திரர், அவர் முன் தோன்றி, “என்ன வேண்டும்’’ என்று கேட்டார். அதற்கு விஷ்வக்சேனர், “மகாவிஷ்ணுவின் சக்ராயுதம் வேண்டும்” என்றார். அதற்கு வீரபத்திரர், “சக்ராயுதம் என்னிடம் இல்லை. என் கழுத்தில் மாலையாக இருக்கும் இந்த வெண் தலை கபாலம் சக்ராயுதத்தை விழுங்கி விட்டது. அது சிறிது குறும்புத்தனம் உடையது. அதனிடம் கேள். அந்த வெண் தலை கபாலம் திருப்பிக் கொடுத்தால் எடுத்துச் செல்” என்றார்.

விஷ்வக்சேனர் யோசனை செய்தார். ‘சண்டையிட்டோ, பிடுங்கியோ அந்த வெண் தலை கபாலத்திடமிருந்து சக்ராயுதத்தை வாங்க முடியாது. ஆகையால், அதன் வழியிலேயே நாமும் குறும்புத்தனம் செய்வோம். அப்போது அது திரும்பிக் கொடுத்து விடும்’ என்று எண்ணினார். உடனே தனது உடம்பை அஷ்ட கோணலாக மாற்றினார். அதைப் பார்த்த மற்ற கபாலங்கள் எல்லாம் திகைத்துப் பார்த்து சிரித்தன. விஷ்வக்சேனர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்பதை அறிந்த அந்த வெண் தலை கபாலம் அமைதியாக இருந்தது. திரும்பவும் கை, காலை முறுக்கி உடம்பை அஷ்டகோணலாக்கி ஆடி நின்றார். அப்போதும் வெண் தலை கபாலத்திடம் லேசான சிரிப்பு மட்டும் வந்ததே தவிர, சக்ராயுதத்தைக் கொடுக்காமல் அமைதியாக இருந்தது. மற்ற கபாலங்கள் எல்லாம் சிரித்துக்கொண்டே இருந்தன. மூன்றாவது முறையாக விஷ்வக்சேனர் தனது முகத்தை அஷ்ட கோணலாக்கி கண், வாய், மூக்கு அனைத்தையும் அங்கேயும் இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார். உடனே ஒரு பெரும் சிரிப்புச் சத்தத்துடன் தன்னை மறந்த அந்த வெண் தலை கபாலம் தனது வாயில் வைத்திருந்த சக்ராயுதத்தை வெளியே நழுவ விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த விஷ்வக்சேனர் உடனே அந்த சக்ராயுதத்தை எடுக்க விரைந்தார்.

ஆனால், அப்போது விநாயகர் அங்கே விரைவாக வந்து அதனை எடுத்துக் கொண்டார். விநாயகரிடம் சக்ராயுதம் சென்றதைப் பார்த்த விஷ்வக்சேனர், ‘இது என்ன சோதனை’ என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது விநாயகர், “இதேபோல் எனக்காக மீண்டும் ஒரு முறை விகடக் கூத்தாடு. அப்போதுதான் இந்த சக்ராயுதத்தை தருவேன்” என்றார். விநாயகருக்காக ஒரு முறை தனது உடம்பு, கை, கால், முகம், கண், வாய் அனைத்தையும் அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார் விஷ்வக்சேனர். கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர், அந்த சக்ராயுதத்தை விஷ்வக்சேனரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு வந்து மகாவிஷ்ணுவிடம் சமர்ப்பித்தார் விஷ்வக்சேனர். இதில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, விஷ்வக்சேனரை சேனாதிபதியாக்கி அவரைத் தன் தலைமைத் தளபதியாக நியமித்தார்.

‘விஷ்வக்’ என்றால், ‘எல்லா இடமும்’ என்று பொருள். ‘எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லக்கூடிய படைகளை உடையவர்’ என்றும் பொருள். ‘குரு’ என்றாலே நவக்கிரகத்தில் ஒன்றான குருவை மட்டுமே நாம் நினைக்கிறோம். வைணவ குரு பரம்பரையில் திருமால், திருமகளுக்கு அடுத்தபடியாக விஷ்வக்சேனர் குரு நிலையில் வைத்துப் போற்றப்படுகிறார். சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபடுவது போல், பெருமாள் கோயில்களில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். பெருமாள் கோயில் உத்ஸவ காலங்களில் இவரது புறப்பாடுதான் முதலில் நடைபெறும். இவரையும் துவாரபாலகர்களையும் முதலில் சேவித்துவிட்டுதான் பெருமாளை சேவிப்பது முறை.

‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்’ (வெள்ளை ஆடை அணிந்திருக்கும் விஷ்ணு) எனத் தொடங்கும் ஸ்லோகம், ‘சர்வ விக்ன உப சாந்தயே!’ (எல்லாத் தடைகளும் தீர்வதற்கு விஷ்ணுவை வணங்குகிறேன்) என முடிகிறது. பிறகு, 'யஸ்ய த்விரத வக்த்ராத்யா’ என வரும். இதற்குப் பொருள், 'நம்முடைய தடைகளைப் போக்கி அருளும் விஷ்வக்சேனரை வணங்குகிறேன்’ என்பதாகும். இதிலிருந்தே, விஷ்வக்சேனரின் பெருமையை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com