
உலகில் ஆயிரமாயிரம் மலர்கள் மலர்ந்தாலும் நாகலிங்கப் பூவுக்கு எதுவும் இணையாகாது. மலர்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது. அதிசயம் நிறைந்தது. சிவ பூஜைக்கு மிகவும் உகந்த உன்னத மலர். ஆகையால் இதனை, ‘ஆன்மிகப் புஷ்பம்’ என்றே அழைக்கலாம். இதழ்கள் சுற்றி இருக்க, அதனுள் நாகம் குடைபிடிக்க, அதன் கீழ் சிவலிங்கம் காட்சி தரும் ஒரு அற்புத மலர் இதுவாகும்.
நாம் வாழும் காலத்திலும் நாகலிங்க மரங்கள் இன்றும் ஆங்காங்கே தென்படுவது, நாம் பெற்ற புண்ணியப் பேறு என்றே சொல்ல வேண்டும். தினசரி செய்யும் நாகலிங்க மர தரிசனம் ஒருவரின் நல்ல உள்ளுணர்வை இயங்க வைப்பதாகும். ஆலய பூஜைக்கு நாகலிங்க புஷ்பங்களை கைங்கர்யமாகத் தருவது மிகப் பெரிய புண்ணியச் செயலாகும். இந்த புஷ்பத்தைக் கொண்டு இறைவனுக்குச் செய்யும் வழிபாடு பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களைப் பெற்றுத் தர வல்லது.
நாகலிங்கப் பூவைக் கொண்டு இறைவனை வழிபடுவதன் முழுப் பலனையும் பெற பூஜிக்கப்படும் ஒவ்வொரு புஷ்பத்துக்கும் ஒருவருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்பது நியதி. இயற்கையிலேயே யோக அக்னியைப் பூண்டது நாகலிங்க மரங்கள். ஆகையால்தான் இந்த மரத்திலிருந்து பூவை பறிக்கும்போது இதமான ஒரு உஷ்ணத்தை பறிப்பவரின் கை உணர்வதை அறியலாம். ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடனேயே விளங்கும். இதுவே, ‘யோக புஷ்ப தவச்சூடு’ ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது.
சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியைக் கொண்டே ஒவ்வொரு நாலிங்க பூவும் மலர்கின்றன எனும் அரிய தகவலை நாகசாலி சித்தரும், நாகமாதா சித்தரும் இந்தப் பூவுலகுக்குச் சொல்லிச் சென்றுள்ளனர். நாகலிங்க மரத்தைக் காணும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை தரிசித்து, கண்ணுக்குத் தெரிந்து பூக்கும் ஆன்மிக மலரான நாகலிங்கப் புஷ்பத்தைக் கொண்டு இறைவனை வழிபட்டு வணங்கி அருள் பெறுவோம்.