திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்!

சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 4:00 மணி முதல் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருளினார். இன்று காலை பக்தர்களால் தேர் வடம் பிடிக்க,தேரோட்டம் நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சிறப்பு வாய்ந்த தலம். மே 4 ஆம் தேதி இந்த சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஷேச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் என சாமி வீதி உலா நடைபெற்றது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தேர் சங்கிலியை பிடித்து தேரை கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் இழுத்து செல்கின்றனர்.

செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து வழிபடுகின்றனர். இப்படி செய்வதால் நமது கஷ்டங்களும் நசுங்கிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்பு நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி செல்கின்றனர். பெருமாளின் திருவருளை பெற திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிக சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com