பாரம்பரியம் மிக்க முத்துப் பல்லக்கு வழிபாடு!

பாரம்பரியம் மிக்க முத்துப் பல்லக்கு வழிபாடு!

முத்துப் பல்லக்கு இன்றைய தலைமுறை அறிந்திடாத ஒன்று.

கோவில்களில் செய்யப்படும் முத்து பல்லக்கு பாரம்பரியம் மிக்கது. அழகு வாய்ந்தது. கலைஞர்களின் கைவண்ணம் அதில் பிரதிபலித்திருக்கும்.

இப்படிப்பட்ட முத்துப் பல்லக்குகள் பல வகை உண்டு. அதில் முத்து இந்திரவாகனம், முத்து ஓடம், முத்து சூரியபிறை, என இதை அமைக்கக்கூடிய கலைஞர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கின்றனர். அவர்கள் தொழில் எப்படி இருக்கிறதென்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் பதினோராம் நாள் உற்சவம் முத்து பல்லக்கில் சுவாமி வீதி வலம் வருவதற்காக முத்து பல்லுக்கு ஜோடித்துக் கொண்டிருந்த சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் முத்து அவர்களிடம் அவர்கள் வேலை செய்து கொண்டே இருக்க, சில கேள்விகளை முன் வைத்தோம்.

இந்தத் தொழிலை நீங்கள் எத்தனை வருஷமா பார்க்குறீங்க?

நாங்கள் 60 ஆண்டு காலமாக அதாவது மூன்று தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு முத்து பல்லக்கு அலங்கரிக்கும் பாக்கியம் எங்களுக்கு 60 ஆண்டு காலமாக கிடைத்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா திருவிழாவின் போதும் பதினோராவது நாள் உற்சவத்தின் போதும் முத்து பல்லக்கில் சுவாமி வீதி உலா வருவது சிறப்பு. அதற்கு முத்துப் பல்லக்கு ஜோடிக்கும் அலங்கரிக்கும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கு கொடுத்திருப்பதை பெருமையாக நினைக்கிறோம். பாக்கியமாக கருதுகிறோம் என்று தெய்வீகமாக கையெடுத்து கும்பிட்டு கூறினார் ஜெயச்சந்திரன்.

சரிங்க, இந்த தொழில் இப்ப எப்படி இருக்கு?

முன்பு போல் இல்லை சார். முன்பெல்லாம் எந்த கோவில் திருவிழாவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக ஒருநாள் முத்துப் பள்ளத்தில் சுவாமி வீதி உலா வருவார். ஆனால் இப்போதெல்லாம் யாரும் அதை விரும்பவில்லை. அலங்கார விளக்குகள் பூ பல்லக்குகள் என திசை மாறிவிட்டார்கள்.

முத்து பல்லக்கில் இடம்பெறும் அத்தனையும் நாங்கள் ஒவ்வொரு பொருளாக வாங்கி சேர்த்து சேகரித்து எங்கள் கைவண்ணத்தை அந்த முத்து பல்லக்கில் காட்டுவோம். பார்ப்பதற்கும் தெய்வீகமாகவும், அழகாகவும் இருக்கும். சார் நீங்களே பாருங்களேன் என்று பல்லக்கை காண்பித்தார். பார்க்க அவ்வளவு அழகு கால கண் கோடி வேண்டும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் எங்களுக்கான வாய்ப்புகள் குறையவில்லை. நகர்ப்புறங்களில் இருக்கும் கோவில்களில் யாரும் இதை விரும்பவில்லை. பாரம்பரியமாக செய்யப்படும் நடராஜர் ஆலயத்தில் பதினோராம் நாள் முத்து பல்லக்கு உற்சவத்தில் தவறாமல் தொடர்ந்து எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இன்று இந்த பல்லக்கு ஜோடிக்க எங்களுக்கு 24 மணி நேரமாவது பிடிக்கும். சுவாமி வீதி உலா முடிந்தவுடன் அவ்வளவு பொருட்களையும் பத்திரமாக அட்டைப் பெட்டியில் வைத்து நாங்கள் பாதுகாக்க வேண்டும். இது பாரம்பரியமிக்கது. இந்த பாரம்பரியமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருவது மிக வேதனை அளிக்கிறது என்று லேசாக கண்களில் கண்ணீர் தழும்ப சொன்னார். அதை பார்க்கும் பொழுது ஒரு பாரம் பரியத்தைக் கற்க எவ்வளவு முயற்சி செய்கிறார் எவ்வளவு அக்கறை கொள்கிறார் என்ற உணர்வு நம் மனதில் பளிச்சென்று பட்டது.

ந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் மற்றும் தனியார் கோவில்களிலும் இந்த முத்து பல்லக்கு உற்சவத்தை நடத்தினால் பாரம்பரியம் காப்பது மட்டுமல்ல, எங்களைப் போன்ற கிராமத்தில் இதை நம்பி இருக்கும் ஏராளமான கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்ததாகவும் இருக்கும்.

நாங்கள் அலங்கரித்திருக்கும் இந்த முத்துப்பல்லக்கு, சுவாமியை சப்பரத்தில் வைத்து வீதி உலா வரும் பொழுது பாருங்களேன் அவ்வளவு அழகு, அவ்வளவு பாரம்பரியம், அவ்வளவு உயிரோட்டம், என உணர்ச்சி பொங்க கூறினார். அது உண்மைதான்.

நாம் நமது பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களுக்கு முத்து பல்லக்கு அலங்கரிக்கும் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்போம். நம் பாரம்பரியத்தை காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com