எது உண்மையான பக்தி?

எது உண்மையான பக்தி?

ர்ஜுனனின் புத்திரன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு நாள், முனிவர் ஒருவர் வந்திருந்தார். அன்று அபிமன்யு வீட்டில் இல்லை. அபிமன்யுவின் மனைவி, உத்திரை மட்டுமே இருந்தாள். வந்த முனிவர் அவர்களுக்கு ஒரு பரிசு கொண்டுவந்து இருப்பதாகக் கூறி, ஒரு கண்ணாடியைக் கொடுத்தார். அது ஒரு மாயக்கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் பார்த்தால், பார்ப்பவரின் ரூபம் தெரியாது. பார்ப்பவரின் மனதில் யார் இருக்கிறாரோ அவர் மட்டுமே தெரிவார். அதாவது மனதில் உள்ளதைப் பிரதிபலிக்கும் வகையான கண்ணாடி. ஆவலுடன் அதை வாங்கிய உத்திரை, அந்தக் கண்ணாடியின் முன் நின்றாள். அப்பொழுது அபிமன்யுவின் உருவம் அந்தக் கண்ணாடியில் தெரிந்தது. ஆம், அவள் மனத்தில் எப்பொழுதுமே அபிமன்யுவையே நினைத்துக் கொண்டிருப்பவள் ஆதலால் அவ்வாறு அது பிரதிபலித்தது.

சற்று நேரத்தில் அபிமன்யு வந்தான். முனிவரும் உத்திரையும் கண்ணாடி பற்றி சம்பாஷித்துக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகக் கேட்டான். "என்ன இருவரும் கண்ணாடியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றான். 

உத்திரை, முனிவர் மாயக்கண்ணாடியை பரிசளித்ததை அவனிடம் கூறி, அபிமன்யுவை கண்ணாடிக்கு முன்னால் நிற்கச் சொன்னாள். அபிமன்யு நின்றவுடன், கண்ணாடியில் உத்திரையின் உருவம் தெரிந்தது. இருவருக்கும் பரஸ்பரம் மற்றொருவரின் உருவம் தெரிந்ததால் தங்களின் ஆழமான அன்பு எத்தனை சிறந்தது என்று அவர்கள் வியக்காவிட்டாலும் முனிவர் வியந்து அவர்களை ஆசீர்வதித்தார்.

அந்தச் சமயம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அங்கு வந்தார். எல்லோருமாகச் சேர்ந்து, கிருஷ்ணரை அந்தக் கண்ணாடி முன் நிற்கச் சொன்னார்கள். ஏனென்றால், அவர் யாரை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால், ருக்மிணியாய் இருந்தால் பாமாவிடமும், பாமாவாக இருந்தால் ருக்மிணியிடமும் கூறி கலகப்படுத்தலாம் என்கிற ஒரு சின்ன சந்தோஷம் அவர்களுக்குள் இருந்தது.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீ கிருஷ்ணர் கண்ணாடியின் முன் நின்றார். அதில் யாருடைய உருவம் தெரிந்தது தெரியுமா? சாட்சாத் சகுனியின் உருவம்தான். எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ’என்னது பரம வைரியான சகுனியின் உருவம் தெரிகிறது என்றால், கிருஷ்ணரின் மனத்தில் சகுனி இடம் பிடித்து விட்டானா? எப்படி சாத்தியம்?’ என்று ஒருவருக்கொருவர் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டார்கள். குழப்ப மிகுதியால் கிருஷ்ணரிடமே அதைக் கேட்டு விட்டார்கள்.

அதற்கு பகவான் கூறிய விளக்கம் என்ன தெரியுமா? "என்னை ஒருவர் வேண்டிக் கொள்கிறார் என்றால் என்னால் அவர்களுக்கு ஏதோ ஒரு சகாயம் ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. ஆத்மார்த்தமாக என்னை நினைப்பவர்கள் மட்டுமே என் நெஞ்சிலும் இடம் பிடிக்கிறார்கள். சகுனி என்னை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தில் சதா என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் அவ்வாறு நினைப்பதினால் அவரை நானும் நினைக்கிறேன். என் மனதிலும் சதா சர்வ காலமும் சகுனிதான் இருந்து வருகிறார். இப்பொழுது புரிகிறதா எதனால் சகுனி என் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்று" கூறிவிட்டுச் சிரித்தார்.

உண்மைதானே. ஆத்திகர்கள் மட்டுமே பகவான் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பது கிடையாது. நாத்திகர்களாக இருந்தாலும் பகவானின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம் இல்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com