இறப்புக்கு யார் காரணம்?

இறப்புக்கு யார் காரணம்?

முன்பொரு காலத்தில், கௌதமி என்கிற பெண்மணி இருந்தாள். அவள் மிகவும் பொறுமைசாலியாகத் திகழ்ந்ததால், காண்பவர்கள் அனைவரும் அவளை, ‘பூமித்தாயை போல அவளுக்குப் பொறுமை அதிகம்’ என்று கூறி வந்தார்கள்.

ஒரு நாள் அவளுடைய மகனை ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதனால் அவன் மாண்டு போனான். மகனின் பிரிவு அவளுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. அந்த ஊரில் அர்ஜுனகா என்கிற வேடன் ஒருவன் இருந்தான். அந்த வேடன், ஒரு பெரிய பாம்பை, ஒரு கயிற்றினால் கட்டி, தூக்கிக்கொண்டு கௌதமியிடம் வந்தான்.

"தாயே இதோ பாருங்கள், இந்தப் பாம்புதான் உங்கள் மகனைத் தீண்டியது. இந்த பாம்பை அவசியம் கொல்ல வேண்டும். ஒரு உயிரை அனாவசியமாக மாய்த்தது அல்லவா? எனக்குக் கட்டளையிடுங்கள். இந்தப் பாம்பை கொன்று விடுகிறேன்" என்று கூறினான்.

"அர்ஜுனகா… ஆத்திரத்தில் மதியை இழக்காதே. பொறுமையுடன்தான் எதையும் கையாள வேண்டும். என் மகனுக்கு இந்த உலக வாழ்க்கை இத்தனை நாட்கள்தான் என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதனால் அவன் இறந்து போனான். அந்தப் பாம்புக்கு இடப்பட்ட கட்டளை, என் மகனைத் தீண்ட வேண்டும் என்பது" என்றாள் கௌதமி.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்த பாம்பு, ஒரு மனிதக் குரலில் பேசத் தொடங்கியது. "அர்ஜுனகா, இந்த மரணத்துக்கு நான் காரணம் அல்ல. ம்ருத்யுவே காரணம். ம்ருத்யுதான் என்னை தன்னுடைய தூதுவனாக இங்கே அனுப்பியது. ம்ருத்யுவின் கட்டளைப்படி நான் எனது சேவையைச் செய்து முடித்தேன். அதனால் இந்த சிறுவனின் மரணத்துக்கு நான் காரணமல்ல. ஆகையால், என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம். என்மேல் கோபப்பட வேண்டாம். என்னை கொல்லவும் வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டது.

அப்பொழுது ம்ருத்யு அங்கே தோன்றியது. "ஏ பாம்பே, நல்ல காரியம் செய்தாய். எதனால் என் மேல் பழியைப் போடுகிறாய்? நான் உன்னை அனுப்பியது உண்மை. ஆனால், இந்த சிறுவனின் மரணத்துக்கு நான் காரணம் அல்ல. காலம்தான் நம் எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. காலத்தின் கட்டளையால் இந்த காரியத்தைச் செய்யும்படி நான் உன்னை இங்கே அனுப்பினேன். ஆகவே, என்னைக் காரணம் காட்டாதே" என்றது.

அடுத்ததாக, கால புருஷன் அங்கே தோன்றினார். "இங்கே பாருங்கள். இந்தச் சிறுவனின் மரணத்துக்கு பாம்போ, ம்ருத்யுவோ, நானோ காரணம் இல்லை. இந்த நிகழ்வு அவன் கர்ம வினையால் வந்த பயன். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கர்ம வினைகளைப் பொறுத்து, அடுத்த ஜன்மத்தில் நல்லதோ கெட்டதோ நிகழ்கிறது. அதனால் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். தீண்டிய பாம்பே, ம்ருத்யுவே, நீங்கள் யாருமே கவலைப்பட வேண்டாம். நானும் கவலைப்படப் போவதில்லை. நாம் மூவருமே காரணம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆகையால் தாயே, உங்கள் மகன் சென்ற பிறவியில் செய்த கர்ம வினைகளின் பலனால் இந்தப் பிறவியில் அகால மரணம் அடைந்திருக்கிறான். நீங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

"ஆம். கால புருஷர் கூறுவதே உண்மை. என் மகன் சென்ற பிறவியில் செய்த கர்ம வினைகளின் பலனைத்தான் இந்தப் பிறவியில் அனுபவித்து விட்டான். நானும் சென்ற பிறவியில் செய்த கர்ம வினைகளால் மகனை இழக்க வேண்டும் என்ற ஒரு சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறேன். நீங்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் யார் மேலும் எனக்குக் கோபம் சிறிதும் இல்லை. நீங்கள் எல்லோரும் சென்று வரலாம்" என்று கூறினாள்.

கௌதமி சமாதானம் அடைந்ததைக் கண்டு வேடன், பாம்பு, ம்ருத்யு, கால புருஷன் எல்லோரும் அவரவர் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.

சரி. இந்தக் கதை யாரால், எப்பொழுது சொல்லப்பட்டது தெரியுமா? குருக்ஷேத்திரப் போரில், பல அரசர்கள் மற்றும் வீரர்கள் மரணம் அடைந்ததைக் கண்ட யுதிஷ்டிரர், 'இந்தப் போர் நிகழாமலே இருந்திருந்தால், இத்தனை உயிர்ச் சேதம் இருந்திருக்காது. இந்த மாதிரி ஒரு சம்பவத்துக்கு நான்தான் காரணம்' என்று மிகவும் மன அமைதி இல்லாமல் புலம்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பிதாமகர் பீஷ்மர் மேற்சொன்ன இந்தக் கதையை யுதிஷ்டரிடம் கூறி, 'யுதிஷ்டிரா இந்த உயிர் இழப்புக்களுக்கெல்லாம் நீயோ, துரியோதனனோ காரணம் இல்லை. அவரவர் செய்த கர்ம வினைதான் காரணம். ஆகையால், கவலைப்படாதே' என்று ஆறுதல் கூறினார்.

இந்தக் கதையைப் படிப்பவர்கள், இதை கதை என்று எடுத்துக்கொள்ளாமல், நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல பாடம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், நல்லது வரும்பொழுது சௌகரியமாகவும் சந்தோஷமாகவும் அனுபவித்துவிட்டு, கெடுதல் வரும்பொழுது, எனக்கு நேரம் சரியில்லை என்று காலத்தையோ அல்லது மற்றவர்களையோ குறை கூறிக் கொண்டு திரிவதைத் தவிர்க்க வேண்டும். எதுவுமே நம் கர்ம வினைப்படிதான் நடக்கிறது என்கிற பக்குவமான மனநிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆன்மிகத் தேடலுக்கு ஆதாரமான படியாக அமைந்து, அந்தப் பக்குவம் நம்மை வாழ்வில் மேலே ஏற்றி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com