முகூர்த்தப் புடைவைகள் சிவப்பு நிறத்தில் எடுக்கப்படுவது ஏன்?

முகூர்த்தப் புடைவைகள் சிவப்பு நிறத்தில் எடுக்கப்படுவது ஏன்?

ந்தியத் திருமணங்கள் பலவற்றிலும் சடங்குகள், வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும், பெரும்பாலான மணப்பெண்கள் முகூர்த்த ஆடை அல்லது கூரைப்புடைவை என்று கூறப்படும் திருமண ஆடையை சிவப்பு நிறத்திலேயே தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி சிவப்பு நிறத்தில் திருமணப் பெண் புடைவை அணிவதற்குப் பின் அர்த்தமுள்ள சில சுவாரஸ்யமான தகவல்களும் உள்ளன!

துர்கை அம்மனாக, சக்தி தேவியாக வழிபடப்படும் அம்மனின் நிறம் சிவப்பு. சிவப்பு நிறம் தைரியம் மற்றும் மன வலிமையைக் குறிக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்து உலகுக்கு அமைதியை வழங்கிய அம்மனின் நிறம் சிவப்பு. எனவே, திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண் தைரியமாகவும், செல்லும் இடத்தில் அனைவருக்கும் நிம்மதியை ஏற்படுத்தும் நபராகவும் இருக்க வேண்டும் என்ற ஐதீகத்தில் சிவப்பு நிறத்தில் முகூர்த்த ஆடை தேர்வு செய்யப்படுகிறது.

ஜோதிட ரீதியாக சிவப்பு என்பது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. ஒரு ஆண் அல்லது பெண் யாருக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்தால்தான் திருமணம் சரியான நேரத்தில் நடைபெறும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, ஆற்றல் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் குறிக்கும் செவ்வாய் கிரகத்தின் நிறத்தில் ஆடையை அணிவது புதிய தம்பதிகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வண்ணங்களும் ஒருசிலவற்றைக் குறிக்கும். இதில் சிவப்பு நிறம் என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. சிவப்பு என்பது புதிய தொடக்கம், பேரார்வம், மேம்பாடு, செல்வ வளம் அதிகரித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. சிவப்பு நிறம் மகிழ்ச்சி மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. திருமணம் மட்டுமல்லாமல், பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடும்பொழுதும் பெண்கள் சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவார்கள்.

சாஸ்திர சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து சிவப்பு என்பது அனைவரையும் ஈர்க்கும் நிறம். சிவப்பு நிறத்தை அணிந்தால் பெரும்பாலும் பலரின் கவனத்தை எளிதாக ஈர்க்கலாம். அதுமட்டுமின்றி, அனைத்து வகையான நிறம் கொண்டவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

சிவப்பு என்பது மங்கலகரமான நிறத்தைக் குறிக்கிறது. வேறு சில நிறங்கள், சுப நிகழ்ச்சிக்குப் பொருந்தாது என்ற கருத்து பரவலாக உள்ளது. உதாரணமாக, வெள்ளை, நீலம் ஆகியவை திருமணத்துக்கு எதிர்மறையான நிறங்கள் என கருதப்படுகிறது. அதேபோல, பச்சை நிறமும் பரவலாக திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. வெளிர் நிறங்களை பெரும்பாலும் பலரும் விரும்புவதில்லை. எனவே, அனைவராலும் விரும்பப்படும் நிறமாக சிவப்பு நிறமே பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com