அடர்ந்த காட்டில் அமாவாசை வழிபாடு!

அடர்ந்த காட்டில் அமாவாசை வழிபாடு!

கோயில் என்றால் வருடம் முழுவதும்தானே திறந்திருக்கும்? ஆனால், அமாவாசை அன்று மட்டும் திறந்து வழிபடும் கோயில் ஒன்று உள்ளது. தர்மபுரி மாவட்டம், நெருப்பூர் வட்டத்தில் அமைந்துள்ள முத்தையன் கோயில்தான் அது. அன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்தக் கோயில் இங்கு அமைந்ததற்கான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. இரணியனை வதம் செய்த பிறகும் நரசிம்மர் தனது சீற்றம் தணியாமல் இங்குள்ள காட்டில் அலைந்து திரிந்தார். அவரது சீற்றத்தைத் தணிக்க அருகிலுள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து சிவபெருமான் சரபேஸ்வரராக உருமாறி இங்கு வந்தார். அப்போது சரபேஸ்வரருக்கும் நரசிம்மருக்கும் கடும் சண்டை மூண்டது. சண்டையின் முடிவில் நரசிம்மரின் சினத்தைத் தணிவித்தார் சரபேஸ்வரர். நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது, நரசிம்மருக்கு ஆதரவாக நெருப்பூருக்கு அருகில் உள்ள நாகமலையிலிருந்து (நாகம் உறைகின்ற ஊர்) ஆதிசேஷனும் வந்து சரபேஸ்வரரை எதிர்த்தது. அப்போது சரபேஸ்வரராக வந்த சிவபெருமான் ஆதிசேஷனுக்கும் தனது சுயரூபத்தைக் காட்டி அருளினார்.

கோபம் தணிந்த நரசிம்மர் இங்குள்ள குகை ஒன்றில் தவத்தில் அமர்ந்து விட்டார். இன்றும் அந்தக் குகையில் நரசிம்மரின் சிலா ரூபத்தை தரிசிக்கலாம். மாதேஸ்வரன் மலை மீதும் முத்தரையர் கோயில் அருகிலுள்ள மாலை மீதும் சரபேஸ்வரராக வந்த சிவனாரின் திருப்பாதம் பதிந்த பாறைகளை இன்றும் தரிசிக்கலாம். இந்தக் கோயிலுக்கு அருகே வருடம் முழுவதும் வற்றாத சுனை நீர் ஓடுகிறது. இச்சுனை நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இன்று வரை எவராலும் அறிய முடியவில்லை. நாக தோஷம் மற்றும் திருமணத்தடைகளால் அவதிப்படுவோர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அடர்ந்த காடு, மலைகள், நீரோடை என இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் அமைந்த இக்கோயிலுக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தது வழிபட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, தை மாத அமாவாசை தினத்தன்று ஸ்வாமி உலா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பிறவிப் பிணிகள் நீக்கி, வாழ்வில் அனைத்து மங்கலமும் தருபவராக நரசிம்ம பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com