தீபாவளிக்கு மட்டும் திறக்கும் கோயில்!

மாத்ரிகேஸ்வரர் ஆலயம்
மாத்ரிகேஸ்வரர் ஆலயம்

நேப்பாள் தலைநகர் காத்மாண்டுவின் தொழிற்பேட்டைக்கு அருகில், 400 சதுர மீட்டரில், ‘ராணி போக்காரி’ என்ற ஒரு குளம் உள்ளது. இந்தக் குளத்தின் நடுவில் ஒரு சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவபெருமானுக்கு, ‘மாத்ரிகேஸ்வரர் மகாதேவ்’ எனப் பெயர். இந்த சிவன் கோயில் வருடத்தின் தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம் இந்த ஈசனை தரிசிக்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்!

நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனை திகார் (Tikar) என அழைக்கின்றனர் இந்த ஊர் மக்கள். விழா சமயத்தில் நம் ஊரைப் போலவே வீட்டில் பெரிய பெரிய கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, இனிப்பு, காரணம் என பட்சணங்களும் பதார்த்தங்களும் செய்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

காக் திகார்
காக் திகார்

முதல் நாள், ‘காக் திகார்’ என அழைக்கப்படுகிறது. இன்று காக்கைகள் வணங்கப்படுகின்றன. மூதாதையர்கள் காக்கை வடிவில் இன்று வருகை தருவதாக ஐதீகம். அதனால், இன்று காக்கைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. முன்னோர்களுக்குப் படைக்க செய்யப்படும் பதார்த்தங்களை காக்கையை அழைத்து சாப்பிடத் தருகின்றனர். இதனால் குடும்பக் கஷ்டங்களிலிருந்து  மூதாதையர் நம்மைக் காப்பர் என்பது நம்பிக்கை.

குகுர் திகார்
குகுர் திகார்

ரண்டாம் நாள், ‘குகுர் திகார்’ ஆகும். ‘குகுர்’ என்றால் நாய் எனப் பொருள்! இன்று நாய்கள் வணங்கப்படுகின்றன. இன்றைய தினத்தில் நாய்களுக்கு மாலை போட்டு, நெற்றியில் பொட்டிட்டு, அதற்குப் பிடித்தமான உணவுகளைத் தந்து சாப்பிட வைப்பர்! மனிதர்களைப் போன்றே, நாய்களும் வீட்டைக் காக்க உதவுகின்றன. நாய்கள் பைரவரின் வாகனம். பைரவர் சிவபெருமானின் ஒரு அம்சம். ஆக, இன்று நாய்களைக் கொண்டாடும் விழா!

காய் திகார்
காய் திகார்

மூன்றாம் நாள், ‘காய் திகார்’ மற்றும் லட்சுமி பூஜை அனுசரிக்கப்படுகிறது. கோ மாதாவை வணங்க உகந்த நாள். இன்று பசுவைக் குளிப்பாட்டி, மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, அவற்றுக்கு உணவளிக்கும் விழா. இந்த வைபவம் காலையில் நடைபெறுகிறது.

இன்று மாலை லட்சுமி பூஜையை அனுசரிக்க வேண்டும். இதனை குடும்பப் பெண்கள் செய்கின்றனர். இன்று சிவப்பு மண்ணை எடுத்து வந்து, அதில் தீபாவளி பட்சணங்களை உருவாக்கி, வாசல் பக்கம் வைப்பர். கிருஷ்ண ஜயந்தியின்போது,
குழந்தை கிருஷ்ணனின் வருகையைக் குறிக்க அவனது கால்களை போடுவது போல் லட்சுமியின் வருகையை வரவேற்க, வாசல் முதல் பூஜை அறை வரை லட்சுமியின் கால்களைப் வரையப்படுகின்றன. பூஜை அறையில் நிஜ பட்சணங்கள் நிறைந்திருக்கும். இன்று அலுவலகங்கள், தொழிலகங்களிலும் கூட சிறப்பு லட்சுமி பூஜை நடைபெறும்.

நான்காம் நாள், ‘கோரு திகார்’ எனப்படும். இன்று நாள் முழுவதும் மூன்று பூஜைகள் செய்யப்படுகின்றன. முதல் பூஜையில் எருதுகள் வழிபடப்படுகின்றன. கோ பூஜை போன்றே எருதுகளுக்கும் பூஜையின் முடிவில் உணவு தந்து வழிபடப்படுகிறது. நேப்பாளத்தின் முக்கியத் தொழிலான விவசாயத்துக்கு பெரிதாக உதவுவது எருதுகளே என்பதால் அவற்றை வழிபடும் விழா இன்று!

இரண்டாவதாக, கோவர்த்தன் பூஜை செய்யப்படுகிறது. நேப்பாளத்தில் வைணவர்கள் அதிகம் என்பதால் இங்கு கிருஷ்ண பக்தியும் அதிகம். யாதவர்கள் அதிகமாக வாழ்ந்த இந்த பூமியில் வருடா வருடம் இந்திர விழா நடைபெறுவது வழக்கம். உழவுத் தொழிலுக்கு பெரிதும் உதவுபவன் மழைக்கு அதிபதி இந்திரன். அவனுக்கு விழா எடுத்தால்தான் மழை நன்றாகப் பொழியும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால், ‘இந்திரனுக்கு விழா எடுக்கத் தேவையில்லை’ என கிருஷ்ணன் கூறி விடுகிறார். இதனால் கோபமான இந்திரன், இங்கே கடும் மழை வெள்ளத்தை உருவாக்குகிறான். இதனால் மக்கள் செய்வதறியாது திகைக்க, கோவர்த்தன மலையை தனது சுண்டு விரலால் தூக்கி யாதவ மக்களைக் காக்கின்றான் ஸ்ரீ கிருஷ்ணன். இதன் காரணமாகவே, வருடா வருடம் கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது.

இன்று பசுஞ்சாணத்தால் மலை போன்று செய்து அதில் குட்டி கிருஷ்ணனை வைத்து பூஜிக்கின்றனர். பூஜையில் இனிப்பு, கார பண்டங்களை வைத்து நைவேத்தியம் செய்கின்றனர். மேலும், இந்த ஊர் வைணவக் கோயில்களில் நம் ஊரைப் போன்றே, ‘அன்னகூட்’ வைபவமும் நடைபெறும். தவிர, நேவார் இன மக்களுக்கு இன்றே புது வருடம் பிறக்கிறது! இன்று மாலை வீடுகளில் நடைபெறும் பூஜையில் பெரிய அளவில் விருந்துகளும் நடைபெறும். இந்த நிகழ்வை, ‘ஷகுன்’ என அழைக்கின்றனர். இன்று உணவுகளில் பொறித்த முட்டை, மீன், மாமிசம், இனிப்புகள் என பலவும் இடம் பெற்றிருக்கும்.

பாய் திகார்
பாய் திகார்

ந்தாம் நாள், ‘பாய் திகார்’ ஆகும். இது, சகோதரி-சகோதரன் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் நாள். இன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு அவர்களின் வாழ்த்தைப் பெறுவர். மேலும், இந்நாள் யமுனாவை பெருமைப்படுத்தும் விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது. காலதேவன் யமனின் தங்கை யமுனா. பொதுவாக, தீபாவளி ஐந்து நாள் நிகழ்வை யமன்–யமுனாவுடன் இணைத்தே பேசுவர்.

அண்ணன் யமனை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறாள் யமுனா. ஆனால், ஓய்வறியாது கடமையை செய்து வந்த யமனால் அவளது வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. சகோதரன் யமனை விருந்துக்கு அழைக்க முதல் நாள் காக்கையையும், இரண்டாம் நாள் நாயையும், மூன்றாம் நாள் பசுவையும், நான்காம் நாள் எருதையும் தூதாக அனுப்புகிறாள் யமுனா. அப்படியும் சகோதரி வீட்டுக்கு யமனால் விருந்துக்குச் செல்ல முடியவில்லை. இதனால் யமுனாவே விருந்து பட்சணங்களை எடுத்துக்கொண்டு யமனின் வீட்டுக்குச் சென்று, அவனது நெற்றியில் திலகமிட்டு, விருந்து படைக்கிறாள். இந்த விருந்தினால் மகிழ்ந்த யமன், தனது சகோதரி யமுனாவை ஆசிர்வதிக்கிறான். மேலும், ‘‘இன்று... இதேபோல், சகோதரனை அழைத்து திலகமிட்டு, விருந்து அளிக்கும் சகோதரி, சகோதரர்கள் யம பயம் இல்லாது நீண்ட நாள் வாழ ஆசீர்வாதம் செய்கிறேன்” என்கிறான்!

மற்றொரு புராணக் கதையின்படி, ஓய்வறியாது கடமையைச் செய்யும் யமனுக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தந்து அருளுகின்றார் மகாவிஷ்ணு. அந்த ஓய்வு நாளில் தனது சகோதரி யமுனா வீட்டுக்கு வருகிறான் யமன்! அவனை வரவேற்று, திலகமிட்டு விதவிதமாக விருந்து அளிக்கிறாள் யமுனா! விருந்தில் மகிழ்ந்த யமன், அவளை ஆசீர்வதிப்பதுடன், இன்று இதேபோல் நடந்துகொள்ளும் சகோதர, சகோதரியர் நீண்ட நாட்கள் யம பயம் இல்லாமல் வாழ வரம் தந்துவிட்டுச் செல்கிறான். இப்படியாக, நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

அழகிய வெள்ளை யானை சிற்பம்
அழகிய வெள்ளை யானை சிற்பம்

இனி, தீபாவளி பண்டிகையின் ஐந்தாம் நாளான இன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் மாத்ரிகேஸ்வரர் கோயிலுக்கு வருவோம். குளத்தின் நடுவில் உள்ள கோயிலுக்குச் செல்ல ஏதுவாய் ஒரு பாலம் கட்டி, அதற்கு அழகாக வெள்ளை வண்ணமும் அடித்துள்ளனர். அதன் வழியாக நடந்து செல்லும்போது, கோயில் வாசலில் வெள்ளை யானை சிற்பம் நம்மை வரவேற்கிறது. சிறிய கோயில் கோபுரம், நேப்பாளத்துக்கே உரிய இரண்டு அடுக்கு மாடத்துடன் அழகாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு சகோதரி இல்லாத சகோதரர்கள் வந்தால், சகோதரி சார்பாக அவர்களுக்குத் திலகமிட்டு வாழ்த்துகிறார் கோயில் அர்ச்சகர். இதேபோல், சகோதரர் இல்லாத சகோதரிகள் வந்தால், சுவாமியை வழிபட வந்த ஒருவரை அந்தப் பெண்ணுக்கு சகோதரனாக்கி அவனுக்கு திலகமிட்டு அந்தப் பெண்ணை வாழ்த்தச் செய்கிறார்.

இன்று இந்தக் கோயிலில் சிறப்பு நைவேத்தியமாக ஏராளமான இனிப்புகள் படைக்கப்படுகின்றன. பூஜைக்குப் பிறகு அவற்றை சகோதர, சகோதரிகளுக்கு வழங்குகிறார் அர்ச்சகர். இன்று இரவே கோயில் நடை சாத்தப்படுகிறது. இனி, அடுத்த வருடம் தீபாவளியின் ஐந்தாவது நாள் மட்டுமே அந்தக் கோயில் திறக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com