
2022ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரஹணம் இன்று (25.10.2022) செவ்வாய்க்கிழமை மாலை 5.17 முதல் 6.24 மணி வரை நிகழ உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, சூரியனை, சந்திரன் மறைப்பதையே சூரிய கிரஹணம் என்கிறோம். கிரஹண சமயத்தில் நாம் செய்யும் ஜபம், பூஜை, தானங்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் அதிகம். கிரஹண நேரத்தில் சமைப்பதோ, சாப்பிடுவதோ கூடாது. குழந்தைகள், முதியோர், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் தவிர, அனைவரும் இன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்து, மறுநாள் காலை சூரியனை தரிசனம் செய்த பிறகே சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அல்லது அன்று மாலை 7 மணிக்குப் பின்னர் சாப்பிடலாம். அதேபோல், கிரஹணத்துக்கு முன் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது. பால், தயிர், நெய், தேன், ஊறுகாய் போன்றவற்றை தர்பை போட்டுவைத்து, பிறகு உபயோகப்படுத்தலாம்.
கிரஹணம் முடிந்ததும் காவிரி போன்ற புண்ணிய நதிகளிலோ அல்லது வீட்டிலேயோ நீராட வேண்டும். அதன் பின்னரே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல், பஞ்சாட்சரம், ஸ்ரீ காயத்ரி போன்ற மந்திரங்களை ஜபம் செய்தல், தானம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம். குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் திதி ஐப்பசி அமாவாசையாக இருக்கும்பட்சத்தில் அன்று செய்ய வேண்டிய திவசத்தை அடுத்த நாள் செய்ய வேண்டும்.
இந்த சூரிய கிரஹணம் துலாம் ராசியில் நிகழ்வதால் அந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷப் பரிகாரம் செய்துகொள்வது அவசியம். சிவாலயங்களில் உள்ள நவக்கிரகங்களில் சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, கோதுமை பொங்கல், சர்க்கரை பொங்கல், நிவேதனம் படைத்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும். ஐப்பசி மாத அமாவாசை நாளில் பகலில் நிகழும் இந்த சூரிய கிரஹணத்தை நாடு முழுவதும் பார்க்கலாம்.