நேற்று தங்கைக்கு தேர். இன்று அண்ணனுக்கு தேர். ஆமாம். நேற்று செவ்வாய்க்கிழமை சமயபுரம் மாரியம்மனுக்கு திருத்தேர். இன்று சித்திரை மாதம் 06 ஆம் நாள், 19.04.2023 புதன்கிழமை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப் பெருமானுக்கு சித்திரை திருத்தேர்.
அண்ணன் ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள். தங்கை சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்.
ஏதோ பேச்சுவாக்கில்தான் அண்ணன் - தங்கை என நினைத்து விடாதீர்கள். அதனை நிரூபிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தைப்பூசத்தன்று தங்கைக்கு சீர் வரிசை மரியாதை செய்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்று உள்ளே அந்த வைபவம் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கொள்ளிடத்தில் எழுந்தருளுவார். அதே நாளில் சமயபுரத்தில் இருந்து ஸ்ரீ மாரியம்மன், புறப்பாடாகி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து விடுவார். அண்ணனிடம் சீர் வரிசை பெற்றுக் கொண்டு சந்தோசமாக சமயபுரம் சென்றடைவார் ஸ்ரீ மாரியம்மன்.
இருவருக்குமான அண்ணன் - தங்கை உறவினைச் சுட்டிக் காட்டவே, அதன் வரலாற்றினை சுருக்கமாகச் சொல்லியுள்ளோம். பொதுவாகவே சமயபுரம் தேர் என்பது, சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று. ஸ்ரீரங்கம் தேர் என்பது, சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று. இது ஏதோ அபூர்வமாக ஏதேனும் சில ஆண்டுகளில் மட்டுமே தான் சமயபுரம் தேரும் ஸ்ரீரங்கம் தேரும் அடுத்தடுத்த நாட்களில் அமையும். இந்த 2023 ஆண்டில் அவ்விதமாக அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று தேர்கள். தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று தைத்தேர். பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தன்று பங்குனி தேர். சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று சித்திரை தேர். நம்பெருமாள் நட்சத்திரம் ரேவதி. அன்று தான் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு சித்திரை தேர். சித்திரை மாத திருத்தேர் உற்சவத்துக்கு "விருப்பன் திருநாள்" என்கிற சிறப்பும் உண்டு. அதனை இறுதியில் தெரிந்து கொள்வோம்.
ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதியில் வெள்ளை கோபுரத்துக்கு எதிரேதான், சித்திரைத் தேரின் நிலை ஆகும். ரேவதி நட்சத்திரத்தன்று, அதிகாலை நேரத்தில் நம்பெருமாள் அலங்கார ரூபனாக தேரில் எழுந்தருளுவார். அந்த அலங்காரம் அத்தனை அழகு. வைர வைடூரியக் கற்கள் பளீரிட, நம்பெருமாள் அணிந்திருக்கும் பாண்டியன் தலைக் கொண்டை அத்தனை வசீகரம். அத்தனைப் பேரழகு.
கிளி மாலைகள் சூடி, சுந்தர வதன முகத்துடன் ஸ்ரீரங்கம் நம்பெருமாள், எல்லையில்லா பேரழகனாக சித்திரை திருத்தேர் பீடத்தில் கருணையே வடிவமாக எழுந்தருளியிருக்கிறார்.
19.04.2023 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு, வெள்ளமெனத் திரண்டு வந்து சூழ்ந்து நிற்கின்ற பக்தர்களின் மன எழுச்சியுடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து, திருத்தேர் உலா தொடங்கப்பட்டது. கீழச் சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேலச் சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி வழியாக திருத்தேர் உலா வந்து கொண்டே இருக்க... ஆயிரக்கணக்கான பக்தர்கள். ரெங்கா... ரெங்கா... கோஷமிட்டபடி பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
இறுதியாக மீண்டும் கீழச் சித்திரை வழியாக வந்து காலை 9.15 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்து விட்டது. தேரோடி வந்த நான்கு சித்திரை வீதிகளின் மொத்த நீளம் சுமார் இரண்டு கி.மீ. தூரம் ஆகும்.
"ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர் இந்த ஆண்டில், 640வது சித்திரைத் தேர் திருவிழா ஆகும். விஜயநகரப் பேரரசின் விருப்பன்ன உடையார், 17,000 பொற்காசுகளையும் 52 கிராமங்களையும் தானமாகத் தந்து சித்திரைத் தேர் உற்சவத்துக்காக எழுதி வைத்துள்ளார் என கோயிலொழுகு கூறுகிறது.
விருப்பன்ன உடையார்தான் 1383இல் முதன் முதலாக ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர் உற்சவத்தினை தொடங்கி வைத்திருக்கிறார். நம்பெருமாளின் ரேவதி நட்சத்திரம் அன்று, சித்திரை திருத் தேரோட்டத்தினையும் விஜயநகரப் பேரரசின் விருப்பன்ன உடையாரே தொடங்கி வைத்துள்ளார். அதன் காரணமாகத்தான் ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர் உற்சவத்துக்கு "விருப்பன் திருநாள்" என்கிற சிறப்பும் உண்டு." என்கிறார் ஸ்ரீரங்க நம்பெருமாளின் பக்த ஆர்வலர் சேது அரவிந்த்.