சனி பகவான்
சனி பகவான்

சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று வணங்கலாமா?

கோயிலுக்குச் செல்லும் பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், ‘சனி பகவானை நேருக்கு நேர் நின்று தரிசனம் செய்யலாமா?’ என்பதுதான். பொதுவாக, எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. தெய்வத்தின் திருநோக்கு சக்தியை எதிர்கொள்ளும் வலிமை நந்தி, கருடன், சிம்மம் போன்ற வாகன மூர்த்தங்களுக்கு மட்டுமே உண்டு. அதனாலேயே அவற்றை தெய்வத்தை நோக்கி அமைத்து வணங்கினர் நமது முன்னோர்கள்.

பொதுவாக, சனி பகவானின் பார்வை அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால் கோயில் பிராகாரங்களில் அருள்பாலிக்கும் சனி பகவானை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. சனியின் பார்வை ஒருவர் மீது விழுந்தால் என்ன நிகழும் என்பதற்கு புராணம் கூறும் ஒரு நிகழ்வே சாட்சி.

வக்கிரகங்கள் ஒன்பதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் ராவணன். கிரகங்கள் ஒன்பதையும் சிம்மாசனத்துக்குச் ஏறிச் செல்லும் தனது படிக்கட்டுகள் ஒன்பதில் படுக்க வைத்திருந்தான் ராவணன். சூரியன் முதலான எட்டு கிரகங்களை மேலே பார்க்கும்படி படுக்க வைத்து, அவற்றின் மார்பின் மீது காலை வைத்து ஏறிச் சென்ற ராவணன், சனி கிரகத்தை மட்டும் குப்புறப் படுக்க வைத்து அதன் முதுகின் மீது ஏறிச் சென்றான். காரணம், தனது பார்வை ராவணன் மீது பட்டால் அவனுக்கு கெடுதல் உண்டாகும் என்று சனி பகவான் கூறியதால் அவ்வாறு படுக்க வைத்திருந்தான் ராவணன்.

பூலோகத்தில் ராவணனின் கொடுமை அதிகமாவதைக் கவனித்த நாரதர், ஒரு நாள் ராவணனின் சபைக்கு வருகை தந்தார். நவக்கிரகங்களின் அவல நிலையைக் கண்ட நாரதர், அதைக்கொண்டே ஒரு கலகத்தை ஏற்படுத்தி உலக நலன் காண எண்ணினார்.

பைக்கு வந்த ராவணனிடம், “ராவணேஸ்வரா, உனது கட்டளைக்குக் கட்டுப்பட்டு அனைத்து கிரகங்களும் மேல் நோக்கிப் படுத்திருக்க, இந்த சனி கிரகம் மட்டும் உனது சொல்லை மதிக்காமல் குப்புறப்படுத்திருக்கிறது பார். உனது கட்டளைக்கு அது தரும் மரியாதை இதுதானா?’ என்று அவனை தூண்டி விட்டார் நாரதர்.

அதைக் கேட்ட ராவணன், “சனி கிரகமே நீயும் அனைவரையும் போல் மேல் நோக்கிப் படு” என்று கட்டளையிட்டான்.

அதைக்கேட்ட சனி பகவான், ‘ராவணா… எனது பார்வை உன் மீது பட்டால் உனக்குத்தான் கெடுதல்தான் உண்டாகும். அதனால் எனது போக்கிலேயே என்னை விடு” என்று கூறினார். விதி யாரை விட்டது? தனது ஆணையில் உறுதியாக இருந்த ராவணன், சனி பகவானை கட்டாயப்படுத்தி மேல் நோக்கிப் படுக்கச் சொன்னார். ராவணனின் கட்டளைக்கு பணிந்து சனி பகவானும் மேல் நோக்கிப் படுத்தார்.

அதன் பிறகு ராவணன் தனது காலை சனி பகவானின் மார்பின் மீது வைத்து அரியணையில் ஏறினான். ராவணன் தனது காலால் மிதித்ததும் சனியின் குரூர பார்வை அவன் மீது பதிந்தது. நாரதர் கலகமும் நன்மையில் முடிந்தது, அதுமுதல் ராவணனுக்கும் அழிவு காலம் தொடங்கியது என்கிறது புராணம்.

ஆகவே, சனி பகவானின் பார்வை நேருக்கு நேர் நம் மீது படாமல் அவரை வழிபடுவது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com