ஸ்ரீ அனந்த பத்மநாபர்
ஸ்ரீ அனந்த பத்மநாபர்

ஸ்ரீ அனந்த பத்மநாபர் கோயிலில் புதிய முதலை தோன்றுமா?

ன்மிகத் தலங்கள் சிலவற்றில் அத்தல இறைவனின் பழைய கோயில் மற்றும் புதிய கோயில் என இரண்டையும் அருகருகே தரிசிக்கலாம். ஆனால், தற்போது பிரபலமாகத் திகழும் ஒரு கோயிலின் மூல (பழைய) கோயில் 556 கி.மீ. தொலைவு தாண்டியுள்ளது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. அது கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயில்தான். இதில் வியப்பு என்னவென்றால் பழைய (மூல) கோயில் கேரள மாநிலத்தின் வடகோடியில் உள்ளது. புதிய கோயில் கேரளாவின் தென்கோடியான திருவனந்தபுரத்தில் உள்ளது.

சமீபத்தில் இந்தக் கோயில் ஏரியில் வசித்த, பாபியா எனும் ஒரு முதலை குறித்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கேரள மாநிலத்தில் ஒரு ஏரியில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுதான். இந்த ஏரியில் கடந்த எழுபது வருடங்களாக இந்த முதலை வசித்து வந்தது. அந்த ஏரியில் ஏராளமான மீன்கள் துள்ளித் திரிந்தாலும் அவற்றை அந்த முதலை சாப்பிடுவதில்லை. அதற்கு மாறாக, கோயில் பூசாரி காலை, பிற்பகல் என தரும் கோயில் நிவேதனமான சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அது மட்டுமின்றி, அங்கு வரும் மனிதர்கள் யாரையும் அது எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. ஆள் நடமாட்டம் குறைவான நேரங்களில் கோயிலுக்குக் கூட சாதாரணமாகச் சென்று வருமாம் அந்த முதலை.

ஸ்ரீ அனந்த பத்மநாபர் கோயில்
ஸ்ரீ அனந்த பத்மநாபர் கோயில்

சமீபத்தில் இந்த பாபியா முதலை, வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டது. ஊர் மக்கள் அந்த முதலை வைதீக முறைப்படி அடக்கம் செய்தனர். அந்த ஏரியில் தோன்றிய மூன்றாவது முதலை இதுவென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நான்காவதாக புதிய முதலை விரைவில் அந்த ஏரியில் தோன்றி பக்தர்களுக்கு தரிசனம் தர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் இந்த ஊர் மக்கள். ஏற்கெனவே இதுபோன்றுதான் நிகழ்ந்துள்ளதாம்.

இந்த ஏரியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஏரியின் கிழக்கு முனையில் ஒரு குகை உள்ளது. இந்தக் குகை வழியாகச் சென்றுதான்
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி புதுக்கோயிலை அடைந்ததாக அக்கோயில் தல வரலாறு கூறுகிறது. அந்தத் தல வரலாறை சற்று சுருக்கமாகக் காண்போமா?

முதலையோடு பக்தர்
முதலையோடு பக்தர்

ந்த ஏரிக்கரையில் வில்வமங்கலம் என்ற முனிவர் ஒருவர் கடும் தவம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் முன்பு ஒரு சிறுவன் வந்து நின்றான். அவனைக் கண்ட முனிவர், “யார் நீ?” என்றார்.

அதற்கு அந்தச் சிறுவன், “நான் ஒரு அனாதை” என்றான்.

“அப்படியானால் நீ என்னுடனேயே இரு” என்றார் முனிவர்.

“சரி, ஆனால் என்னைக் கடிந்து பேசினால் நான் உங்களை விட்டுச் சென்று விடுவேன்” என்றான் சிறுவன்.

அதற்கு ஒப்புக்கொண்டார் முனிவர்.

மக்கள் பார்வைக்காக இறந்த முதலை
மக்கள் பார்வைக்காக இறந்த முதலை

சில காலம் முனிவருடன் இருந்தான் சிறுவன். அடிக்கடி அவன் முனிவரை தனது செயல்களின் மூலம் கோபப்படுத்தி வந்தான். ஆனால், அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு இருந்தார் முனிவர்.

ஒரு நாள் ஆத்திரம் தாங்காமல் அந்த சிறுவனை கோபித்துக்கொண்டார் முனிவர். உடன் அந்தச் சிறுவன், “ஒப்பந்தத்தை நீங்கள் மீறி விட்டீர்கள். ஆகவே, நான் உங்களை விட்டுச் செல்கிறேன்! மீண்டும் என்னைக் காண வேண்டுமானால் நீர் ஆனந்தா என்ற பாம்பு கடவுள் வசிக்கும் காட்டுக்குதான் வர வேண்டும்” என்று கூறிவிட்டு ஏரியின் கிழக்கு முனைக்குச் சென்று மாயமாய் மறைந்துவிட்டான்.

அப்போதுதான் தம்மோடு இருந்தது சாதாரண சிறுவன் இல்லை என்பதை முனிவர் உணர்ந்தார். உடனே அவரும் அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து சென்றார். ஏரியின் முனையில் இருந்த குகைக்குள் சிறுவன் செல்ல, முனிவரும் அவனைத் தொடர, அது நீண்டு கொண்டே சென்று இறுதியில் கடலில் கலந்தது. கடலிலிருந்து கரையேறிய அந்தச் சிறுவன் ஒரு காட்டினில் நுழைந்தான். முனிவரும் அவனைப் பின் தொடர்ந்தார்.

அந்தக் காட்டில் இருந்த ஒரு இலுப்ப மரத்தில் புகுந்த அந்தச் சிறுவன் திடீரென மாயமானான். உடனே அந்த மரம் பிளக்க, அங்கு ஆயிரம் தலைகொண்ட நாகத்தின் மீது மகாவிஷ்ணு அனந்தசயனம் கொண்டிருப்பதைக் கண்டார் முனிவர். பிற்காலத்தில் அங்குதான் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயில் எழுந்தது.

காசர்கோடில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, அமர்ந்த கோலத்தில் அனந்தரை தரிசிக்கலாம். இக்கோயிலில் ஏற்கெனவே இருந்த பழைய அனந்தர் விக்ரஹம் எழுபது மூலிகை பொருட்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன், அதற்கு மாற்றாக சிலை ஒன்றைச் செய்து காஞ்சி ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்தார். இடது காலை மடித்து, அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தரும் பெருமாளுக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்கி்ன்றனர். ஆஞ்சனேயர், கருடனும் உடன் உண்டு. கருவறையைச் சுற்றி சிறிய பிராகாரம் உள்ளது. கோயிலில் நுழைந்தால் முதலில் நமஸ்கார மண்டபம்! அடுத்து சிறு முன் மண்டபம். அர்த்த மண்டபத்தில் ஏராளமான மரச் சித்திரங்களைப் பார்க்கலாம். ஆக, காசர்கோடு கோயில் முதலைக்கு மட்டுமல்ல, ஆதி ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கும் பிரபலம் என இப்போது தெரிந்திருக்கும்!

இத்தலம் கண்ணனூரிலிருந்து 123 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீ அனந்தபுரம் ஏரி கோயிலில் வசித்த பாபியா முதலை, உண்மையான விஷ்ணு பக்தனாக,
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பாதத்தை அடைந்து விட்டது என இவ்வூர் மக்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகின்றனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com