சாமிக்கு ரூபாய் மாலை சாத்தலாமா?

சாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
சாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கோயில்களில் சுவாமிக்கு பூமாலை, இலை மாலை, தேங்காய் மாலை சாத்துவது வழக்கத்தில் இருப்பதை அறிவோம். ஆனால், சமீப காலங்களில் ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையை பக்தர்கள் சுவாமிக்கு சாத்துவதைக் காண்கிறோம். இது குறித்து அனுபவம் வாய்ந்த சுவாமிஜி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறிய கருத்துக்களைப் பார்ப்போம்.

“தனத்துக்கு அதிபதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி. தாயார் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான தனத்தை பூஜை செய்து வணங்கலாம். ஆனால், தனம் என்பது என்னவென்று ஆராய்ந்தால், எது சுகத்தைத் தருமோ அதுவே தனம் எனப்படும். அதேபோல், வெறும் தனம் மட்டுமே ஒருவருக்கு சுகத்தைத் தராது. ஆனால், சுகத்துக்குக் காரணம் தனம். அதாவது தனமிருந்தால் சுகமிருக்கும்.

தனம் என்பது ஒவ்வொரு காலத்துக்கும் மாறுபடுகிறது. ஒரு காலத்தில் தங்கம், பிறகு வெள்ளிக்காசு, அதன் பின்பு செப்புக்காசு என்று இருந்தது. தற்போது அது நிக்கல் காசுகளாகவும், அச்சிடப்பட்ட பேப்பர் என்பதாகவுமே உள்ளது. இப்படி தனம் என்பது ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபட்டு வருகிறது.

மஹாலட்சுமி பூஜையில் பணம்
மஹாலட்சுமி பூஜையில் பணம்

ந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் தங்கத்தாலோ, வெள்ளியினாலோ, செப்பினாலோ அல்லது இவை மூன்றும் கலந்த காசுகளைக் கொண்டோதான் சுவாமியை பூஜை செய்து வழிபட்டார்கள். ஆனால், தற்காலத்தில் உள்ள நாணயங்கள் தங்கள், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்கள் எதுவும் கலக்காமல் நிக்கல் ஒன்றினால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதேபோல், மரக்கூழுடன் சில கெமிக்கல்களைக் கலந்து அச்சிடப்படும் பேப்பர் ரூபாய் நோட்டுக்கள் பணம் என்று அழைக்கப்படுகின்றன. அதனால், இவற்றையெல்லாம் தனம் என்னும் சொல்லைக் கொண்டு அழைப்பது சரியல்ல.

ஆனாலும், மேற்சொன்ன ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் வைத்திருப்பவனையே தனவான் என்று அழைக்கிறார்கள். அதனால், தற்கால இந்த நாணயங்களையும், பேப்பர் பணத்தையும், ‘வ்யவஹார தனம்’ என்று வேண்டுமானால் அழைக்கலாம். சமூகத்தாலும், மக்களாலும் மதிப்பு மிகுந்ததாகக் கருதப்படும் இந்த பேப்பர் ரூபாய் நோட்டுக்களை சுவாமிக்கு மாலையாகத் தொடுத்து அணிவிப்பதும், பூஜையில் வைத்து வணங்குவதும் அல்லது தாம்பூலத்துடன் சேர்த்து பிறருக்கு மந்திரம் சொல்லி தட்சணையாகத் தருவதும் சாஸ்திரப்படி தவறொன்றுமில்லை. அதேசமயம், ரூபாய் நோட்டு மாலை அணிவிப்பதால் பெரிதாக அணிவிப்பவருக்கு விசேஷ தெய்வக் கடாட்சம் கிடைத்துவிடும் என்றும் சொல்வதற்கில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com