
கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்க தயாராகும் மாதம்.
ஐயப்பன் மார்கழி மாதம், உத்திர நட்சத்திரம், பஞ்சமி திதி, சனிக்கிழமை, விருச்சிக லக்னத்தில் மகாவிஷ்ணுவான மோகினிக்கும், சிவபெருமானுக்கும் அவதாரம் செய்தார். ஐயப்பன் என்றால் அம்மையும் அப்பனும் ஆனவர் என்று பொருள். சில நூல்களில் ஐயப்பன் பிறந்தநாள் பங்குனி உத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.
புலிப்பாலுக்காக மணிகண்டன் காட்டுக்குச் சென்றபோது, அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், ஒரு மலை உச்சியில் தங்கத்தால் ஒரு கோயில் அமைத்து, ரத்ன சிம்மாசனத்தில் அவரை அமர வைத்து, வேத நெறிப்படி பூஜை செய்தனர். அந்த இடமே பொன்னம்பல மேடு (காந்தமலை) என்று வழங்கப்படுகிறது.
கேரள மாநிலம் ஆரியங்காவு என்ற இடத்தில் ஐயப்பன் இளைஞனாக திருமண கோலத்தில் காட்சி தருகிறார். பரசுராமர் பிரதிஷ்டை செய்தது இக்கோலம்.
குளத்துப்புழையில் ஐயப்பன் குழந்தை வடிவில், காணப்படுகிறார். அதனால் கர்ப்ப கிரகக் கதவு, ஒரு குழந்தை உள்ளே செல்லும் உயரத்தில் உள்ளது. இக்கோவிலும் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.
அச்சன்கோயில் ஐயப்பன் நெற்றியில் திருமண் இட்டு, வலக்கையில் அமுதம் ஏந்தி, யோகப்பட்டை அணிந்து, ராஜகோலத்தில் பூரண புஷ்கலை தேவியருடன், வனராஜாவாக வாளுடன் காட்சி தருகிறார். இக்கோவிலில் விஷமுறிவு தீர்த்தம் என்று கிணறு உள்ளது. விஷப் பூச்சிகளால் கடிபட்டவர்கள், இந்த தீர்த்தத்தை அருந்தினால் விஷம் இறங்கிவிடும்.
ஐயப்ப பக்தர்கள் அவரை குழந்தையாக குளத்து புழையிலும், இளைஞனாக ஆரியங்காவிலும், அரசனாக அச்சன் கோவிலிலும், யோக வடிவமாக சபரிமலையிலும், ஜோதி வடிவமாக காந்தமலை எனும் பொன்னம்பல மேடு தலத்திலும் வழிபடுகிறார்கள்.