மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தும் கோயில்!

மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தும் கோயில்!

-எம். முருகேசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி என்ற ஊரில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அம்பாள் பிரம்ம சக்தியுடன், சிவபெருமான், சுயம்பு நாதர் என்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மனநலம் பாதிக்கப் பட்டவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் இங்கு வந்து  41 நாட்கள் சமுத்திரத்தில் நீராடி மண் சுமந்தால் தீராத பிரச்னைகள்யாவும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டிகளில் சுமந்து வந்து கடலின் கரையோரம் போட்டுவிட்டுச் செல்வது இங்கு பின்பற்றப்படும் விசேஷ வழிபாடாகும்.

அதிசயம்

மார்கழி மாதம் சுயம்புநாதர் திருமேனியில் 30 நாட்களும் கதிரவனின் ஒளிபடுகிறது. மற்ற திருக்கோயில்களில்  இரு நாட்கள் அல்லது குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும். ஆனால், இத்தலத்தில்
30 நாட்களும் ஒளிபடுவது அதிசயமாகக் கருதப்படுகிறது.

தல வரலாறு

கூட்டப்பனை என்ற கிராமத்தில் அந்த ஊரைச் சேர்ந்த பால்காரர் ஒருவர் தினமும் பால் விற்பனை செய்ய உவரி வழியாகத்தான் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு சென்று வந்த அவர், ஒரு நாள் தற்போது சுவாமி அமர்ந்திருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விட்டாராம். இதற்கான காரணம் என்ன என்று அவருக்கு விளங்கவில்லை.  அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுத்ததால்தான் கால் இடறுகிறது என்று உணரப்பெற்றார். அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் தொடங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் குருதி பீறிட்டதாம். அதே சமயம், இறைவனும் அசரீரியாக வந்து, அதே இடத்தில் தாம் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம். இறைவனுடைய ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டி, நாளடைவில் அந்தக் கோயில் பெரிய அளவில் உருப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கோயிலின் வெளிப்புறமாக வந்தால் அருகில் கன்னி விநாயகருக்கான தனிக் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறம் பிரம்ம சக்தி அம்மன் சன்னிதியும் உள்ளது.  இச்சன்னிதியிலேயே மாடசாமி, இலச்சியம்மன் ஆகிய தெய்வங்களும் அமைந்து அருள்கின்றனர்.

நேர்த்திக்கடன்

சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக முடிகாணிக்கை செய்யுமிடம் மிகவும் அருகில் அமைக்கப் பட்டுள்ளது. இத்தலத்தில் குழந்தைகளுக்குக் காது குத்துதல் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வேண்டுதல் செய்பவர்கள் சிறிது தொலைவில் உள்ள கடலில் சென்று இதற்காக, பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டிகளில் பக்தர்கள் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இறைவன் பிட்டுக்கு மண் சுமந்ததை நினைவு கூரவே இந்த வேண்டுதல் எனக் கூறுகின்றனர்.

இதனால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் விசாகத்தில் இத்திருக்கோயிலில் விழா களைகட்டத் தொடங்கிவிடும். தமிழகம்  முழுவதுமிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் அனைத்து இனத்தவரும் திருக் கோயிலுக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வெள்ளி

மூன்று நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சி அளிப்பது சிறப்புத் திருவிழாவாகும். ஒவ்வொரு தமிழ் மாதக் கடைசி வெள்ளிக்கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருவாதிரைத் திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவைதவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப் பிறப்பு, பிரதோஷம், தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com