டிராஃபிக்கில் தரிசனம்!

ஸ்ரீ சத்ய சாயி பாபா ஜயந்தி நவம்பர் - 23
டிராஃபிக்கில் தரிசனம்!

புட்டபர்த்தி பஸ் நிலையத்தில் மூட்டி மோதி என் கணவர் டிக்கெட் வாங்கியதும், நான் அவற்றைப் பத்திரமாக என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். அதெப்படி டிக்கெட்ஸ் காணாமல் போகும்? பதைத்துப் போய் தேடினேன்!

“டிக்கெட் வாங்கினீங்களா?”

சந்தேகப் பார்வைகள்... விமர்சனங்கள்...

என் கணவர் வழக்கம்போல, ‘கூல்!’

எனக்குக் கவலை பிடித்துக்கொண்டது. நடுகாட்டிலும், கும்மிருட்டில் நம்மை இறக்கிவிட்டால், என்ன செய்வது? வாகனம் ஏதும் கிடைக்காவிட்டால், பத்து கிலோமீட்டர் நடந்து, மறுபடி புட்டபர்த்திக்குப் போக முடியுமா? ஹோட்டல் அறையையும் காலி செய்துவிட்டோமே!

வேற வழி? “சாமி பாபா! உன் சித்து வேலை எல்லாம் தாங்குற அளவுக்குப் பெரிய ஆளுங்க இல்லைப்பா! ஸாரி பாபா... உன்னை ‘டவுட்’ பண்ணிட்டேன்!” என்று மனசார வேண்டிக்கொண்ட மறுவிநாடி,

”தொரக்கிந்தி... இதுவா பாருங்க...” என்று கடைசி சீட்டிலிருந்து யாரோ ஒருவர் எடுத்துக் கொடுத்தார்.

முன்பக்க இருக்கையில் இருக்கும் எங்களுடைய பயணச்சீட்டுகள், பஸ்ஸின் கடைசி சீட்டுக்குப் போனது எப்படி? கை தவற விட்டாலும், ‘தொப்’ என்று கீழே விழுமே தவிர, உருண்டு போகவோ, பறந்து போகவோ முடியுமா? அதற்கப்புறம் அவர் godfraudஆ என்ற சிந்தனைக் கெல்லாம் நான் ஏன் போகிறேன்?

மறுபடி ஸ்ரீ பாபாவைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்த வருடம் கன்னட, தெலுங்கு புத்தாண்டு தினமான ‘யுகாதி’க்கு பாபா வொயிட் ஃபீல்டில் இருந்தார். சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களை வொயிட் ஃபீல்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞன் ஒருவனை, வொயிட் ஃபீல்டில் கைது செய்த பரபரப்பு நிகழ்ந்திருந்த சமயம் அது. அதனால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நாங்கள் சென்ற வண்டி, ஊர் எல்லையிலேயே நிறுத்தப் பட்டது. கையில் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க வில்லை. நான் பெண்கள் பக்கமாக இருந்த வி.ஐ.பி. வாசல்வழியாக, அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு உள்ளே நுழையும்போது, திடீரென்று ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது. எனக்கு சளி பிடித்தால், மூக்கில் ‘ஙமஙம’க்கும்! அடுத்த அடுக்குத் தும்மல் கிளம்பும்! மூக்கிலிருந்து ஐந்தருவி கொட்டும்!

எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது. கையில் கர்ச்சீப்கூட இல்லை. அது ஹேன்ட்பேக்கில் இருந்தது. திரும்ப வெளியே போகவும் முடியவில்லை. கதவைப் பூட்டிவிட்டார்கள். என்னை அன்பாக அழைத்துப்போய், பிரதான ஹாலில் உட்கார வைத்தார்கள்.

‘ஐயோ... சளி பிடித்துவிட்டதே! போச்சுடா! நமக்கும் வேதனை! மற்றவர்களுக்கும் நியூசென்ஸ்! எப்படியும் பஜனை, பாபா பேச்சு என மூன்று மணி நேரமாவது ஆகும். அதுவரை  எப்படித் தாக்குப்பிடிப்பது? நான் இருப்பு கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன். கர்ச்சீப்... உடனடி தேவை கர்ச்சீப்!”

அப்போது, அழகான இளம் வாலன்டியர் பெண்ணொருத்தி, என்னிடம் வேகமாக வந்து, எனக்கு முன்னால், என் புடைவையைத் தொடும்வண்ணம், ஒரு புத்தம் புதிய மடிப்புக் கலையாத, தூய வெள்ளை நிற கர்ச்சீப்பை குவியலாகப் போட்டுவிட்டுச் சென்றார். அப்போதுகூட நான், “யாரோ வி.ஐ.பி. வர்றாங்க போலிருக்கு! இடம்பிடிச்சு வைக்கிறாங்க!” என்றுதான் நினைத்தேன்.

நேரம் கடந்தது. அந்த இடத்துக்கு யாரும் வரவில்லை. கர்ச்சீப் போட்ட பெண், குறுக்கும் நெடுக்குமாக இருபது தடவையாவது அலைந்திருப்பாள். அந்த கர்ச்சீப்பை கடைசிவரை யாரும் எடுத்துக்கொள்ளவேயில்லை!

சின்ன காகிதம், பூ, காய்ந்த சருகு என என்ன கீழே கிடந்தாலும் ஓடோடி வந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்த பற்பல வாலண்டியர்கள் கண்களில், அந்த கர்ச்சீப் படாமலா இருந்திருக்கும்?

பஜனை முடிந்து, பாபா வந்தார். அப்போதும் அந்த கர்ச்சீப் என் முன்னாலேயே இருந்தது.

“அடி பொண்ணே! உனக்கு என்ன வேணும்? கர்ச்சீப்தானே! அதுக்குத்தானே தவிச்சே... எடுத்துக்கோ!” என்று சொல்வதுபோல பட்டது.

நானாகவே, அந்த கர்ச்சீப்பை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டு, “தாங்க்ஸ் பாபா!” சொல்லிவிட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே! அந்த கர்ச்சீப்பைப் பயன்படுத்தத் தேவையேயில்லாத வண்ணம், என் அடுக்குத் தும்மலும் நின்றுபோயிருந்தது.

எம். எஸ். அவர்களுக்கு ஆசி...
எம். எஸ். அவர்களுக்கு ஆசி...

ருமுறை ‘கல்கி’ பத்திரிகை வேலை முடிய, இரவு எட்டு மணியாகிவிட்டது. ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போனால், நடுவழியில் கத்திப்பாரா ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல். மின்சாரத் தடை வேறு.

பசி, தலைவலி, உடல் சோர்வுடன் வீட்டுக்குப் போய்ச் சமைக்க வேண்டும், இரவு கண் விழித்து ஃபார்ம் படிக்க வேண்டும், மறுநாள் சமையலுக்குக் காய்கறி நறுக்க வேண்டும்... எல்லாம் சேர்ந்துகொள்ள, எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுவிட்டது.

பொதுவாகவே, நான் உற்சாகமானவள். எதற்கும் அசராதவள். எனக்குச் சோகமாக இருக்கக்கூடத் தெரியாது. ‘ஸ்டார்ட்!’ என்றதும் கண்களில் நீரைத் தேக்கும் பெண்களைப் பார்த்து, நான் அதிசயப்படுவேன். அப்படிப்பட்ட எனக்கே அன்று சுயபச்சாதாபத்தில் அழுகை அழுகையாக வந்தது.

அப்போது திடீரென்று ஓர் எண்ணம்.

“பாபா... ஐயாம் ஸோ டிப்ரெஸ்ட்! ப்ளீஸ்... கன்ஸோல் மீ! உன்னை நான் எங்கேயாவது பார்க்கணும். அதுவும் பத்து எண்ணுவதற்குள்ளே!”

கத்திப்பாரா சந்திப்பில், கரண்ட் போன இருட்டு வேளையில், ஏகப்பட்ட ஹார்ன் சத்தங்களுக்கு இடையில்... பாபாவைப் பார்க்க வேண்டும், அதுவும் 1...10க்குள்! சுவாமிக்கு செமத்தியான டெஸ்ட்! மனசுக்குள் வேகமாக எண்ண ஆரம்பித்தேன். ஒன்று... இரண்டு... ஏழு... ஒன்பது... சரியாக ஒன்பது முடிக்கவும், என் அருகே நின்றிருந்த கார் ஒன்று, ரிவர்ஸில் எடுக்க... அதிலிருந்து வந்த ட்யூன் என்ன தெரியுமா?

“ஓம் ஜெய் ஜகதீஷ ஹரே...” பாபாவின் ஆரத்தியின்போது பாடப்படும் பாடலின் ட்யூன்!

நூற்றுக்கணக்கான வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நின்றுகொண்டிருந்த அந்த இரவு நேரத்தில், அந்த ஒரு கார் மட்டும் பின்புறமாக நகர்ந்து, முழுப் பாடலும் என் காதில் துல்லியமாக விழுந்தது.

“தாங்க்ஸ் பாபா...!”

என் மனம் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை!

“காணாமல் போன டிக்கெட்ஸ் கிடைச்சுதாம். கர்ச்சீப் கொடுத்தாராம். ஏதோ பாட்டு கேட்டுச்சாம். சும்மா... எல்லாம் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்!” என்று நீங்கள் நினைக்கலாம். சரி; எல்லாமே தற்செயலாகவே இருக்கட்டும். சாயி பக்தர்களாக விளங்கும் பெரும்புள்ளிகளும், அவரைக் கடவுளாகவே வணங்கும் வாசகர்களும் பகிர்ந்துகொள்ளும் தெய்விக அனுபவங்களைப் பார்ப்போம். அதற்குப் பிறகு ஸ்ரீபகவான் யார் என்பது ஓரளவுக்குத் தெளிவாகிவிடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com