மஞ்சள் கொடுத்து மாங்கல்ய பாக்கியம் தந்த தாயார்!

மஞ்சள் கொடுத்து மாங்கல்ய பாக்கியம் தந்த தாயார்!

ன் தோழி அவளின் மகளுக்கு தீவிரமாக வரன் தேடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு நாள் மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோயிலில் அம்பாளை தரிசிப்பதற்காக பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்பொழுது அவர்கள் அருகில் வந்து அமர்ந்த ஒரு பெண், இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘பெண்ணுக்கு வரன் பார்க்கிறாயா?’ என்று கேட்டிருக்கிறார். தோழி, ‘ஆமாம்’ என்று கூற, அந்தப் பெண் பையில் இருந்த ஒரு கொம்பு மஞ்சளை எடுத்துக் கொடுத்து, “இதை முதலாக வைத்து இதேபோல் இன்னும் 47 மஞ்சள்கள் வாங்கி, அதனுடன் ஒத்த ரூபாய் காயினையும் வைத்து தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடு. 48 நாட்கள் ஆவதற்குள் கட்டாயம் உனது மகளுக்கு வரன் கிடைத்துவிடும். பிறகு இதை இஞ்சிமேட்டில் அருள்பாலிக்கும் தாயாருக்கு சாத்திவிடு” என்று கூறிவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கோயிலுக்குச் சென்று வீட்டுக்கு வந்த எனது தோழிக்கு மனதில் ஒருவித பயம் கலந்த குழப்பம் தோன்றியிருக்கிறது. ‘யாரோ ஒரு பெண்மணி கொடுத்த மஞ்சளை கை நீட்டி வாங்கி விட்டோமே, இது சரிதானா? இதை வைத்து வழிபட்டால் வேண்டுவது கட்டாயம் நடக்குமா? இல்லை, மஞ்சளில் ஏதாவது மந்திரம் செய்து நம் கையில் திணித்துவிட்டு சென்று விட்டாரா? அதை நாம் வாங்கி இருக்கக் கூடாதோ?’ என்று தோன்றி இருக்கிறது. அதோடு, இஞ்சிமேடு என்று ஒரு ஊரா? இதைக் கேள்விப்பட்டது கூட கிடையாதே. யாரும் சொல்லிக் கேட்டதும் கிடையாது. எப்படிப் போவது. உண்மையிலேயே அங்கு இப்படி ஒரு தாயார் சன்னிதி இருக்கிறதா’ என்று பல்வேறு குழப்பம் அவளுக்கு.

பின்னர், வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த அவளது தாயாரிடம் இதைப் பற்றிக் கூறியிருக்கிறாள். இதைக் கேட்ட அவளின் தாயார், "கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் சாட்சாத் அந்தத் தாயாரே வந்து உனக்கு அருள் வழங்கி இருக்கிறாள். தெய்வம் நேராக வந்தா நான் இருக்கிறேன் என்று சொல்லும்? ஏதோ ஒரு உருவத்தில் வந்து உதவுவது சகஜம்தானே. அதனால் நீ பயப்படாமல் அந்தப் பெண்மணி சொன்னது போல் இன்று சாயந்திரமே பிரார்த்தனையைத் தொடங்கு. எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று கூற, அன்றிலிருந்து அந்தப் புது மஞ்சளை வைத்து, அதனுடன் காயினையும் வைத்து வழிபடத் தொடங்கி இருக்கிறாள்.

முப்பதாவது நாளே அவளது மகளுக்கு நல்ல வரன் அமைந்து விட்டது. பிறகு திருமண ஏற்பாட்டோடு பிரார்த்தனையையும் தொடர்ந்து செய்து முடித்திருக்கிறாள். அதோடு, இஞ்சிமேடு எங்கிருக்கிறது என்ற விபரத்தை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு, திருமணம் நன்றாக முடிந்த பிறகு, அந்த 48 மஞ்சளையும் ஒன்றாகச் சேர்த்து மாலையாகக் கட்டி, அதனுடன் 48 காயினை எடுத்துச் சென்று, தம்பதி சமேதராக மணமக்களையும் அழைத்துச் சென்று, இஞ்சிமேட்டில் இருக்கும் ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு சாத்திவிட்டு, காணிக்கையாக காயினையும் தாயாருக்கு செலுத்தி விட்டு, அங்கு விற்கும் அகல் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றி வழிபட்டு நேர்த்திக்கடனை முடித்துவிட்டு வந்திருக்கிறாள்.

எனது தோழி, அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அம்பாளை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது நீண்ட நாள் வழக்கம். அன்றும் அவள் சென்றது வெங்கிளி அம்மனை வழிபடத்தான். ஆனால், இஞ்சிமேட்டில் அருளும் ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு இவள் மேல் எப்படி கருணை வந்தது என்றுதான் புரியவில்லை. அவளுக்குத்தானே தெரியும், யாரை எப்பொழுது ஆட்கொள்ள வேண்டும் என்பது. தாயாரைப் பணிவோம்! தலை நிமிர்ந்து வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com