துர்வாசரும், துவாதசி பாரணையும்!

துர்வாசரும், துவாதசி பாரணையும்!

காசியப முனிவரின் வம்சத்தில் வந்தவர் நாபாகர். அவர் தர்ம நெறி வழுவாமல் வாழ்ந்து வந்தார். அவர் பல வருடங்கள் குருகுல வாசத்தில் இருந்தபொழுது அவரது சகோதரர்கள் குடும்ப சொத்தினை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு விட்டனர். நாபாகர் திரும்பி வந்தபொழுது அவர் பங்காக அவரது வயதான தந்தையை காண்பித்து, ‘உனக்கு சேர வேண்டிய சொத்து இதுதான்’ என்று கூறி விட்டார்கள்.

அவரது தந்தை மகனை வருத்தப்பட வேண்டாம் என்று கூறி, இரண்டு மந்திரங்களை அவருக்கு உபதேசித்தார். 'முனிவர்கள் கூட அறியாத இந்த மந்திரத்தை நீ கூறும் பொழுது உனக்கு அவர்கள் மிகவும் மரியாதை செய்து, நிறைய செல்வங்களை அளிப்பார்கள்' என்று கூறி ஆசீர்வதித்தார்.

ஒருமுறை நாபாகர், யாகத்துக்கு ஏற்பாடு செய்து பல முனிவர்களை யாகத்துக்கு அழைத்திருந்தார். தந்தை உபதேசித்த மந்திரங்களை அந்த முனிவர்கள் அறியாமல் இருந்ததால், அவர் அதை யாகம் நிகழும் சமயத்தில் மொழிந்தபொழுது, அவர்கள் மிகவும் மகிழ்ந்து நிறைய செல்வங்களை அவருக்கு அளித்தனர். நாபாகரும் மன மகிழ்வுடன் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், நியாயப்படி அவர்கள் அளித்த அந்த செல்வங்கள் ருத்ரனைதான் சேர வேண்டும் என்பது விதி.

யாகம் முடிந்த பின்பு ருத்ரன் அந்த செல்வங்களைப் பெற்றுக்கொள்ள யாகசாலைக்கு வந்தார். ‘முனிவர்கள் கொடுத்த அந்த செல்வங்கள் தன்னையே சேர வேண்டும்’ என்று நாபாகர் கூற, ருத்ரரோ அதை மறுத்து, ‘தன்னையே அது சேர வேண்டும்’ என்று வாதாட, இருவருக்கும் உண்டான பொதுவான நியாயத்தை நாபாகரின் தந்தையிடமே கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை அணுகினார்கள். தர்ம நெறி வழுவாத தந்தை, ‘அந்த செல்வங்கள் அனைத்தும் ருத்ரரைத்தான் சேர வேண்டும்’ என்று தனது முடிவைக் கூறினார். நாபாகர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அனைத்து செல்வங்களையும் ருத்ரரிடம் ஒப்படைத்தார். அதனால் மகிழ்வுற்ற ருத்ரர் அனைத்துச் செல்வங்களையும் நாபாகரிடமே கொடுத்து விட்டு ஆசீர்வதித்துச் சென்றார்.

நாபாகர் காலத்துக்குப் பிறகு, அவருடைய புத்திரனான அம்பரீசன் அனைத்து செல்வங்களுடன் செழிப்பாக வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் மனம் மட்டும் எப்பொழுதும் ஸ்ரீஹரியின் பாதங்களிலேயே லயித்திருந்ததால் பகவானை பக்தி பண்ணுவதிலேயே தனது நேரத்தைச் செலவிட்டார். அம்பரீசரின் பக்தியை மெச்சிய ஸ்ரீ மகாவிஷ்ணு, தன்னுடைய சுதர்சன சக்கரத்தினிடம் எந்நிலையிலும் அம்பரீசருக்கு எந்தவிதமான இன்னலும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று பணித்தார்.

நாபாகர் ஏகாதசி நாட்களில் கடுமையாக விரதத்தை அனுசரித்து, மறுநாள் துவாதசி பாரணையையும் அனுசரித்து வந்தார். ஒரு முறை ஏகாதசி விரதத்தை அனுசரித்த பிறகு பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று, துவாதசி அன்று விரதத்தை முடிக்க எண்ணினார். அப்பொழுது துர்வாச முனிவர் அங்கு வந்தார். அம்பரீசர் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உணவு உபசரிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஆனால், துர்வாச முனிவர் யமுனை நதிக்குச் சென்று நீராடி விட்டு வருவதாகவும், பிறகு வந்து உணவு அருந்துவதாகவும் சொல்லிச் சென்றார். வெகு நேரம் ஆகியும் முனிவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பவில்லை. சுபவேளை நெருங்குவதால் அதிதியான முனிவருக்கு ஆகாரம் அளிக்காமல் தான் உண்ணுவது சரியல்ல என்று கருதிய அம்பரீசர், சிறிது நீரை மட்டும் பருகி விட்டு விரதத்தை முடித்துக் கொண்டார்.

முனை ஸ்நானத்தை முடித்துக்கொண்டு திரும்பிய துர்வாச முனிவர், அம்பரீசர் நீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டதை கேள்விப்பட்டு மிகவும் சினம் கொண்டார். அம்பரீசரைத் தாக்க தனது சக்தியினால் ஒரு அரக்கனைத் தோற்றுவித்தார். அம்பரீசர், ஸ்ரீஹரி நாமத்தை ஜபித்த வண்ணம் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். நிலைமையை உணர்ந்த சுதர்சன சக்கரம் தனக்கு இட்ட பணியை நிறைவேற்றத் தொடங்கியது.  துர்வாச முனிவரைத் தாக்க அவரை துரத்தியது. அவர் பாதாள லோகம், பூலோகம், மேல் லோகம் என்று எல்லா இடங்களிலும் ஓடியும் அவரைத் துரத்துவதை அது நிறுத்தவில்லை.

பிரம்மா, சிவன் என இருவரிடமும் முனிவர் தஞ்சம் புகுந்தும், இருவரும் தங்களால் ஆகக்கூடிய காரியம் எதுவும் இல்லை என்று கூறி, மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுமாறு கூறிவிட்டார்கள். மகாவிஷ்ணுவோ, ‘தன்னுடைய உண்மையான பக்தனைக் காப்பதைத் தவிர, தனக்கு மேலான கடமை எதுவுமில்லை’ என்று கூறி, பக்தனிடமே மன்னிப்பு கேட்கும்படி சொல்லி அனுப்பி விட்டார்.

தனது கால்களைப் பற்றிய வண்ணம் மன்னிப்பு கேட்ட முனிவரைக் கண்ட அம்பரீசர் திடுக்கிட்டார். ஒரு முனிவர் தனது காலில் விழுவதா என்று மருகிப்போனார். சுதர்சன சக்கரத்திடம், ‘முனிவரை எதுவும் செய்ய வேண்டாம்’ என்று மன்றாடியதோடல்லாமல், திரும்பி விடும்படியும் வேண்டிக் கொண்டார்.

அம்பரீசரின் சொல்லை ஏற்று, சுதர்சன சக்கரமும் வந்த வழியே திரும்பிச் சென்றது. தான் அபவாதம் செய்தும் தனக்கு நல்லது செய்ய எண்ணிய அம்பரீசரை கண்டு முனிவர் மிகவும் மகிழ்வுற்றார். பக்தனின் பெருமையை உணர்ந்தார். அம்பரீசரின் பணிவான நமஸ்காரங்களையும் வார்த்தைகளையும் ஏற்றுக்கொண்ட முனிவர், அம்பரீசர் பரிமாறிய உணவை மகிழ்வுடன் உண்டார். முனிவர் உண்டபின், அம்பரீசரும் ஆகாரம் எடுத்துக் கொண்டார். துர்வாச முனிவரையும் மகிழ்வித்து, துவாதசி பாரணையையும் நல்லபடியாக முடித்துக் கொண்டார் அம்பரீசர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com