காயான கதலி கனியான அதிசயம்!

காயான கதலி கனியான அதிசயம்!

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் கோயிலின் ஆதிகோயிலாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தாணு, மால், அயன் என்ற மூவராகவும், ‘தானே ஒருவன்’ என விளங்க, அருள்புரிந்து வழிபடும் இறைவனாகக் காட்சி தருகிறார் கொன்றையடிநாதர். இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் சுதை நந்தியை அடுத்து தென்பகுதியில் மிகவும் புகழ் வாய்ந்த ‘கொன்றையடிநாதர்’ திருக்கோயில் அமைந்துள்ளது.

கொன்றையடிநாதராக விளங்கும் தாணுமாலயன், படைத்தல் தொழில் செய்யும்போது பிரம்மாவாகவும், காத்தல் தொழில் செய்யும்போது மகாவிஷ்ணுவாகவும், அழித்தல் தொழில் புரியும்போது ருத்ரனாகவும் அழைக்கப்படுகின்றான். இப்படித் தென்னாட்டில் மும்மூர்த்திகள் ஒருவராக அமைந்தருளும் அற்புதத் திருக்கோயில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் எனும் கொன்றையடிநாதர் கோயில் ஆகும்!

இந்த மும்மூர்த்திகளும் கொன்றை மரத்தடியில் ‘லிங்கத் திருமேனி’ கொண்டு அருள்பாலிக்கிறார்கள். இத்திருக்கோயிலின் தல விருட்சமே கொன்றை மரம்தான். இந்த மூன்று லிங்கத் திருமேனிகளை நாள்தோறும் அதிகாலை முதல் பத்தரை மணி வரையிலும், அபிஷேகம் மற்றும் பிரதோஷ காலங்களில் பிற்பகல் நாலரை மணி வரையிலும் தரிசிக்கலாம். மற்ற நேரங்களில் இறைவன் மூன்று முகங்களைக் கொண்ட வெள்ளி அங்கியில் காட்சியளிப்பார். இன்றைக்கும் இவ்வாலயத்துக்குள் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் காணலாம். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள அதிசய மாமரம் போல், இங்குள்ள கொன்றை மரமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்று தாவரவியல் வல்லுநர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சுசீந்திரம் நகரில் வில்லிப்பிள்ளை என்றழைக்கப்படும் சுப்பையா பிள்ளை என்ற மிருதங்க வித்துவான் வாழ்ந்து வந்தார். மிருதங்கத்தில் தனி ஆவார்த்தனமாக விதவிதமான 108 தாள வகைகளை வாசிப்பதில் பெரும்புகழ் பெற்று விளங்கினார். சுசீந்திரம் கொன்றையடிநாதர் மீது பெரும் பக்தி கொண்டிருந்த இந்த மிருதங்க இசைவாணர், நாள்தோறும் அவரது சன்னிதிக்கு வந்து இறைவன் முன்னிலையில் மிருதங்க இசை வழங்கி வழிபட்டு வந்தார். இதனால் இவர் பெரும் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சேர மன்னன், சுப்பையா பிள்ளையின் மிருதங்க இசையை அரசவையில் வாசிக்கக் கட்டளையிட்டார். ஆனால், ‘மகாதேவனான கொன்றையடிநாதர் முன்பு மட்டுமே இசைக்கும் இந்த இசையை மானுடனான மன்னர் முன் இசைக்க மாட்டேன்’ எனக் கூறி மறுத்துவிட்டார்.

இதனால் கோபம் கொண்ட சேர மன்னன், இசைவாணரை சோதிக்க எண்ணினான். கொன்றையடிநாதர் கோயிலுக்கு எதிரில் திரையிடப்பட்ட மறைவிடத்தில் அமர்ந்து சுப்பையா பிள்ளை மிருதங்கம் வாசிக்க வேண்டும். அச்சமயம் பசுங்காயாக இருக்கும் 108 காய்கள் அடங்கிய கதலி வாழைத்தாரில் உள்ள காய்கள் அனைத்தும், ஒவ்வொரு தாளம் முடிந்ததும் கனியாகக் கனிந்து தானே உதிர வேண்டும். இப்படி, 108 விதமான தாளகதிக்கு ஏற்ப, 108 காய்களும் கனிந்து உதிர வேண்டும்’ என்று ஆணையிட்டார்.

ரசரின் ஆணையை சிரமேற்கொண்டு வில்லிப்பிள்ளை மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு தாளமாக அவர் வாசிக்க வாசிக்க ஒவ்வொரு கதலி காயும் கனியாக மாறி உதிர்ந்தது. இப்படியாக 108 தாள வகைகளுக்கேற்ப 108 கதலி காய்களும் கனியாக மாறி உதிர்ந்தன. இதைக் கண்டவர்கள் மெய்சிலிர்த்தனர். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் வில்லிப்பிள்ளைக்கு, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ எனப் பட்டம் சூட்டி, பரிசில்கள் பல தந்து பாராட்டினான்.

வரலாற்றில் நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வை, ‘கொன்றை பத்து’ என்ற நூலில் ஒரு புலவர் பெருமான்,

‘கட்டுங் கதலி குலை தாள வீற்றிங் கனியொன்று உதிர்ந்திடவே

வட்டப் புவரிந் திரைக்குள் நின்று வகை சேர்தாளம் நூற்றெட்டும்

விட்டு விளங்க வாஞ்சி நகர் வேந்தன மகழ் வில்லிப்பிள்ளை தன்

கொட்டுக் கிசைந்த கூத்தனை கொன்றை நிழற் கீழ் கண்டேனே!’

என நேரில் கண்டு இப்படிப் பதிவு செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com