உப்பில்லா விரதமிருந்து உவப்பான வாழ்வு பெறுவோம்!

உப்பில்லா விரதமிருந்து உவப்பான வாழ்வு பெறுவோம்!

திருமணம் தாமதப்படும் பெண்கள் தினமும் காலையில் நீராடி, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளை மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு, ஶ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய 'பாதுகா சஹஸ்ரம்' ஸ்தோத்திரத்தில் உள்ள கீழ்க்காணும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.

'சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம்

கண்டேஷு வைகுண்டபதிம் வராணாம்

பத்நாஸி நூநம் மணிபாதர்க்ஷே

மங்கல்யஸுத்ரம் மணிரச்மி ஜாலை:’

மேலும், சனிக்கிழமைகளில் உப்பிலியப்பனுக்கு வேண்டிக்கொண்டு, உப்பில்லாத உணவருந்தி விரதம் இருந்தால், விரைவில் திருமணம் கைகூடி வரும். இதை விளக்கும் அருள்மிகு உப்பிலியப்பன் திருக்கோயில் வரலாற்று சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.

முற்காலத்தில் தாயை இழந்த பெண் குழந்தை ஒன்றுடன் வசித்து வந்தார் ஒருவர். தாயை இழந்ததால் அந்தப் பெண்ணை சீராட்டி பாராட்டி வளர்த்தார். அந்தப் பெண்ணும் திருமண வயதை அடைந்தாள். நல்ல இடத்தில் மகள் வாழ்க்கைப்பட வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்.

ஒரு நாள் சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் அவர்களின் இளம் வயது மகனும் அவருடைய வீட்டுக்கு வந்தனர். அவர்கள், ''நாங்கள் நீண்ட தொலைவு வெயிலில் நடந்து களைத்துப் போய்விட்டோம். தங்கள் வீட்டில் சற்று இளைப்பாறிச் செல்லலாமா?'' என்று கேட்டனர்.

அவரும், ''தாராளமாக இளைப்பாறிச் செல்லுங்கள்'' என்று கூறிவிட்டு, தனது மகளை அழைத்து வந்தவர்களுக்கு மோர் கொடுக்கும்படிக் கூறினார். மோர் கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் அழகும், குணமும் அவர்களுக்குப் பிடித்துப் போனது. எனவே, பிள்ளையின் பெற்றோர் அவரிடம், ''உங்கள் பெண்ணை எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளை எங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதமா?'' என்று கேட்டனர்.

பெண்ணின் தந்தையும், தனது கவலையைப் போக்க தெய்வமே அவர்களை அனுப்பி வைத்ததாக நினைத்து, உடனே சம்மதம் தெரிவித்தார். மேலும், அவர்கள் அன்றிரவு தங்கள் வீட்டில் உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெண்ணை அழைத்து சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார். மகளும் விருந்தினை சமைத்து முடித்தாள். வந்தவர்கள் உண்பதற்கு முன்பு தான் அந்த உணவினை ருசி பார்ப்பது நல்லது என்று எண்ணிய பெண்ணின் தந்தை, உள்ளே சென்று உணவை சுவைத்துப் பார்த்தார். எந்த உணவிலும் உப்பில்லை!

அதற்குள் வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட அமர்ந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் உப்பில்லாத உணவை அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் உண்பதைத் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள், அந்த உணவினை மிகவும் ரசித்து, ருசித்து உண்டதோடு அல்லாமல், “இவளே எங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள்” என்று கூறியும் சென்றனர். இதைக் கேட்ட தந்தையும் மகளும், ஆச்சர்யம் அடைந்தனர்.

அன்றிரவு அப்பெண்ணின் தந்தை கனவில் ஶ்ரீமந் நாராயணன் தோன்றி, ‘அவரது பெண் சாட்சாத் திருமகளின் அவதாரமே என்றும், அவளை மணக்கவே தாம் அவதாரம் எடுத்திருப்பதாகவும், சனிக்கிழமையில் உப்பில்லாத உணவினை உண்டு விரதமிருந்து தன்னை வேண்டினால் சிறப்பான கணவர் அமைவர் என்பதை உணர்த்தவே இந்த லீலையை நிகழ்த்தினோம் என்றும்’ கூறி மறைந்தார்.

திருமணத்தடை உள்ள பெண்கள், சனிக்கிழமைகளில் உப்பில்லாத உணவருந்தி விரதமிருந்து அருள்மிகு உப்பிலியப்பனை மனதார பிரார்த்தித்தால், விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com