லோனார் ஏரி அருகே உள்ள சயன கோல அனுமான் பற்றி தெரியுமா?

லோனார் ஏரி அருகே உள்ள சயன கோல அனுமான் பற்றி தெரியுமா?

காராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற இடத்தில் ஒரே கல்லினால் ஆன சயனகோலா ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு லோனார் பகுதியில் விண்கல் ஒன்று விழுந்ததாகவும் அது விழுந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த பெரிய பள்ளத்தில் ஏரி காணப்படுகிறது. இதனை லோனார் ஏரி என்று அழைக்கிறார்கள். இந்த ஏரியின் அருகில்தான் மோதா மாருதி ஆலயம் அமைந்துள்ளது. ராவணனுடனான போர் முடிந்து, ராமரின் பட்டாபி ஷேகத்திற்கு கலந்துகொண்ட அனுமன் சில காலம் ஓய்வெடுப்பதற்காக இந்த இடத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்லுகிறது. அதனால் இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் சரிவான ஒரு படுக்கையின் மீது சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். லோனார் ஏரி இருக்கும் பள்ளத்தில் விழுந்த விண்கல்லின் ஒரு பிளவு பகுதியை கொண்டு இந்த ஆஞ்சநேயர் சிலை வடிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர் 9.3 அடி நீளம் கொண்டவர். வலது காலை நீட்டிய நிலையில் சயனித்திற்கும் அனுமனின் இடது கால் சற்றே மடங்கிய நிலையில் இருக்கிறது. அவரது இடது பாதத்தின் கீழ் சனி பகவானின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. சனி பகவானால் பிடிக்க முடியாத தெய்வங்களாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் புராணங்கள் போற்றுகின்றன. ஒரு முறை ஆஞ்சநேயரை பிடித்து வந்த சனி பகவானை அவர் தன்னுடைய காலடியில் வைத்து அழுத்தினார் என்றும்,  இதை அடுத்து சனி பகவான் ஆஞ்சநேயரை பிடிப்பது இல்லை என்றும் ராம நாமம் உச்சரிப்பவர்களுக்கு கடுமையான துன்பங்கள் அளிப்பதில்லை என்றும் உத்தரவாதம் தந்ததாக புராணம் சொல்லுகிறது. அந்த அடிப்படையில்தான் தன்னுடைய காலடியில் சனி பகவானை அழுத்திய நிலையில் இந்த தல ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்தால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாமச்சனி  போன்றவற்றின் பாதிப்பு குறையும் என்கிறார்கள். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை கடந்த பல வருடங்களாக முழுவதும் செந்தூரத்தால் பூசப்பட்டு ஆஞ்சநேயரின் உருவமே தெரியாதபடி இருந்தது. ஆனால், அந்த செந்தூரம் சில ஆண்டுகளுக்கு முன்பாக அகற்றப்பட்டு ஆஞ்சநேயரின் முழுமையான உருவத்தை தரிசிக்கும் பாக்கியம் பக்தர்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com