
மும்பையில் கொண்டாடப்படும் விழாக்களுள் அனைவரையும் கவரும் விழா எதுவெனில் ‘விநாயக சதுர்த்தி’ விழாதான். உலகெங்கிலும் இது கொண்டாடப்பட்டாலும், மும்பை மாநகரில் பத்து நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் கோலாகல விழா விநாயக சதுர்த்தி. எங்கு பார்த்தாலும், சிறியதும் பெரியதுமாக அழகான சிலைகள் கண்ணில் தென்படும்.
வீடுகளுக்குள்ளே மட்டும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த இப்பண்டிகை, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பால கங்காதர திலகரால், 1893 ஆம் ஆண்டு புனே நகரில் வெளியேயும் கொண்டாடப்படத் தொடங்கியது. மதக் கலாசார ஒற்றுமைக்கு அன்று மிகவும் உதவியது.
விநாயக சதுர்த்திக்கு முதல்நாளே வீடுகள், சொஸைட்டிகள், மண்டல்கள் ஆகிய அனைத்து இடங்களுக்கும் புது பிள்ளையார் கொண்டு வரப்படுவார். அவரது வருகை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களமாக இருக்கும். எங்கும் ‘கணபதி பப்பா மோரியா!’ கோஷம்தான்!
வருடங்கள் செல்ல செல்ல, ப்ளாஸ்டிக், தெர்மாகோல், ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால், களிமண், எக்கோ ஃப்ரெண்டலி கணபதியென எல்லா இடங்களிலும் ஒரே அசத்தலாக இருக்கும்.
மும்பை கேத்வாடியிலுள்ள 11ஆவது பாதையில் இருக்கும் மண்டலில் வைக்கப்படும் கணபதி 45 அடி உயரமுடையதாகும். இது ‘மும்பைச்சா மகராஜா’ என அழைக்கப்படுகிறது.
லால்பாக்சா ராஜா என்று கூறப்படும் கணபதி சுமார் 20 அடி உயரம் கொண்டது. காம்ப்ளி ஆர்ட்ஸ் ஒர்க்ஷாப்பில் செய்து, பின்னர் வண்ணம் தீட்டப்படும். விழாவிற்கு முதல்நாள் 80 வயதான ரத்னாகர் என்பவர் கணபதி பந்தலுக்கு சென்று, உருவச்சிலையின் கண்களை வரைவார். இதற்கும் பூஜை விதிகள் உண்டு.
மேலும் வடாலா, மாட்டுங்கா, கிர்காம் போன்ற அநேக இடங்களில் விதவிதமாக கணபதி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள், பாடல்கள், ஆராதனைகள் என விமரிசையாக நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்வார்கள். வெள்ளி, தங்கம், வைரம், வைடூரியமென காணிக்கைகள் குவியும்.
அநேக மண்டல்கள் கணபதி விழாவினை பல நூறு கோடி ரூபாய்களுக்கும் மேல் காப்பீடு செய்துகொள்வார்கள். ஜே-ஜேயென பத்து நாட்களும், கணபதியானைக் காண, பக்தர்கள் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து வழிபட்டுச் செல்வார்கள்.
கெளரி வருகை
விநாயகப் பெருமானின் தாயார் மாபார்வதியின் அவதாரம் கெளரியாகும். மகாராஷ்டிராவில் விநாயகரைத் தரிசிக்க வரும் கெளரி, அவரின் சகோதரி எனக் கூறப்படுகிறது. ஒருவரின் வீட்டிற்கு மாகெளரியின் வருகை ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.
விநாயக சதுர்த்தி விழா ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கெளரி சிலை வீட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.
மூன்று நாட்கள் இந்நிகழ்வு கொண்டாடப்படும். வீட்டிற்குள் வரும் கெளரி மாதாவை, மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) மற்றும் பூக்கள் தூவி, “தேவி! எங்களுடன் வந்து தங்குங்கள்” என மராத்தியர்கள் அன்புடன் அழைத்துச் செல்வார்கள். கெளரியை அழகாக அலங்கரிப்பார்கள்.
இரண்டாம் நாள் பூஜை செய்து, உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்தோம்பல் செய்து, மூன்றாம் நாள் கணபதியானுடன் கெளரியையும் சேர்த்து கடலில் கொண்டு சென்று கரைப்பது வழக்கம். இது ‘கெளரி விஸர்ஜன்’ எனப்படும். பல வீடுகளில் கெளரி வருகையை கடைப்பிடிக்கிறார்கள்.
மஞ்சள் – குங்குமம், துளசி, வில்வம், அருகம்புல், தேங்காய், வெற்றிலை – பாக்கு, 5 வகை பழங்களாகிய வாழை, மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா ஆகியவைகளை வைத்து பூஜை செய்து நிவேதனம் செய்வார்கள்,
வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை விளக்கும் வகையில் அனைத்து கணபதி மண்டல்கள், ஸொஸைட்டிகள் ஆகியவைகளின் கலைவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். சிறுவர் முதல் பெரியவர்வரை மத நல்லிணக்கத்துடன் செயல்படுவார்கள்.
“கணபதி பப்பா மோர்யா! மங்கள மூர்த்தி மோர்யா! புட்சா வர்ஷ லெளகர் ஆ! என்கிற கோஷம் கணபதி விஸர்ஜன் சமயம் மட்டுமல்ல; வருடம் முழுவதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.