
ஒவியம்: பிரபு ராம்
ராமபிரான் பட்டாபிஷேகம் முடிந்த காலகட்டத்தில் ஒரு நாள் நந்தவனத்தில் ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழை அந்தணர் ஒருவர் உதவி கேட்டு வந்தார்.
" வாருங்கள்! பெரியவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? ".
" ராமா! எனக்கு ஒரு பத்து பசு மாடுகள் தானமாக கொடுங்கள். அதைக் கொண்டு என் குடும்பத்தை வளமாக்கிக்கொள்வேன். "
" சரி பெரியவரே! இப்படி வாருங்கள் " என சற்று தூரம் அவரோடு நடந்தான் ராமன். அவர்கள் முன்னே வெட்டவெளியான பசுமையான புல்வெளி பரந்து கிடந்தது.
" பெரியவரே! நீங்கள் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் கைத்தடியால் இப்படி அகல வாட்டில் தூக்கி எறியுங்கள். பின்பு நீள வாட்டில் தூக்கியெறியுங்கள். அந்த நீள அகலத்திற்குள் எத்தனை பசு மாடுகள் அடங்குமோ அவ்வளவையும் தானமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!"
பெரியவர் தன் கைத்தடியால் சுழற்றினார்.
கலகலவென சிரித்தாள் சீதா தேவி. "தேவி... என்ன...? "
" அந்த அந்தணர் எப்படித் தன் குடுமியை இறுக்கமாக முடிந்துகொண்டு அவர் பெரிய தொந்தி குலுங்க கழியை விட்டெறிந்தார். அது கண்டு சிரிப்பு வந்தது!" என்றாள் சீதா தேவி.
"தேவி! உன் சிரித்த அருட்பார்வை அவர் மேல் பட்டு அவர் வறுமை தீரட்டும் என்றுதான் இதைச் செய்தேன்! ".
ஒரு சேவகனை ராமன்அழைத்தார்.
" யார் அங்கே! எவ்வளவு மாடுகள் அவர் கைத்தடியால் விட்டெறிந்த தூரத்திற்குள் வந்திருக்கிறது...? ".
" மகாராஜா! சுமார் நூறு மாடுகள்! "
இதை கேட்டவுடன் பெரியவர் சொன்னார். "ராமா! எனக்கு இப்போது எழுபது வயது. இப்படி நீ இவ்வளவு தாராளமாக தானம் செய்வாய் எனத் தெரிந்திருந்தால், பத்து வருடங்களுக்கு முன்பே வந்து இன்னும் பலமாக கைத்தடியை விட்டெறிந்து ஆயிரக்கணக்கான பசுமாடுகளை வாங்கியிருப்பேன்! ".
" நிச்சயமாக முடியாது. நீங்கள் கேட்ட வெறும் பத்து மாடுகளைத்தான் தந்து இருப்பார்கள். அப்பொழுது நான் காட்டில் இருந்தேன். வனவாசம் முடிந்து வந்த ஆண்டில்தான் எனக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. கிடைத்ததை விட்டுவிட்டு இப்படி இருந்திருக்கலாமே – அப்படி செய்திருக்கலாமே என மனக்கோட்டை கட்டினால், அதை ஆண்டவன் மணல் கோட்டையாகத் தட்டிவிட்டு சிரிக்கத்தான் செய்வார். நமக்கு எவ்வளவு செல்வச் செழிப்பு தரலாம், எந்தத் தருணத்தில் தரலாம் என்பதெல்லாம் இறைவன் போடும் கணக்கு. நம் எண்ணப்படி ஏதும் இல்லை. போதும் என்ற மனமே பொன்மனம். பெரியவரே! தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை" என்றான் ராமன்.
"நன்றாக தெரிந்துகொண்டேன் ராமா!" என்றார் பெரியவர்.