ஷீரடி சாயிபாபாவின் கருணை; அவர் அருளே துணை!

ஷீரடி சாயிபாபாவின் கருணை; அவர் அருளே துணை!

ஷீரடி சாயிபாபா என் வாழ்வில் பல அற்புதங்களைப் புரிந்துள்ளார். இது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் இறந்து பிறந்தன. இடையில் இரண்டு அபார்ஷன் வேறு. என் மருத்துவர், நான் அடுத்த முறை கருவுற்றவுடனே மருத்தவமனையில் சேர வேண்டும் என்று கூறினார்.

நான் கருவுற்று மூன்று மாதங்கள் ஆனவுடன் மருத்துவமனையில் சேருவதற்கு தயாரான போது திடீரென ஒரு நாள் உதிரப் போக்கு ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரித்தது. நான் நம்பிக்கையிழந்தேன். ஆனால் என் கணவர் உடனே பாபாவின் உதியை (விபூதி) தண்ணீரில் கரைத்து “பாபா இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்” என்று சொல்லி எனக்குக் கொடுத்தார்.
என்னே பாபாவின் அற்புதம்! சிறிது நேரத்தில் உதிரப் போக்கு நின்று விட்டது. என் மருத்துவரிடம் தெரிவித்தபோது உடனே ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சொல்லி ஊசி மருந்து ஒன்றையும் பரிந்துரைத்தார். அந்த மருந்தின் பெயர் “லைஃப்”  பின் ஸ்கேன் செய்த ரிப்போர்டைப் பார்த்த மருத்துவர்,  குழந்தைக்கு உயிர் இருக்கிறது என்று கூறி உடனே மருத்துவ மனையில் என்னை சேரும்படி சொல்லி விட்டார்.  உதியின் மூலம் கருவில் இருந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார் கருணா மூர்த்தி பாபா.

மருத்தவமனையில் நான் இருந்த அறையின் ஒரு மூலையில் ஷீர்டி சாயிபாபாவின் திரு உருவப் படத்தை வைத்து “பாபா  இங்கு என்னோடு இருந்து காத்தருள வேண்டும் எனப் பிரார்த்தித்து தினமும் சாயி சத் சரிதத்தைப் படித்து வந்தேன். பாபாவின் கருணையால் பிரச்னைகள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் மின் இணைப்பு பழுதடைந்ததால் நான் இருந்த அறையில் மின்சாரம் தடைபட்டது. மின்சாரக் கோளாறு சரியாக சில நாட்கள் ஆகுமெனத் தெரிந்தது. மருத்துவர் என்னை வேறொரு அறைக்கு மாற்றினார்.                             நான் புது அறைக்கு வந்ததிலிருந்து என் இரத்த அழுத்தம் அதிகரிக்க  தொடங்கி விட்டது . மருத்துவர் மருந்துக்களை மாற்றிக் கொடுத்தும் பலனில்லை.

அப்போது நான் வணங்கும் பாபா, நான்  முன்பிருந்த  அறையில் இருப்பதாக ஒரு உணர்வு வர மருத்தவரிடம் “மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை நான் இருந்த பழைய அறைக்கே மாற்றுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டேன். காரணத்தையும்  அவரிடம் கூறினேன். “இது உன் மனப்பிரமையே “ என்று சொன்னவர் என்னை மீண்டும் நான் பாபாவை பூஜித்து வந்த பழைய அறைக்கு மாற்றினார்.

என்ன ஆச்சரியம்! உயர் இரத்த அழுத்தம் குறையத் தொடங்கி ஓரே நாளில் சாதாரண நிலைக்கு வந்து விட்டது. மருத்துவராலும் நம்ப முடியவல்லை. பாபா அங்கிருப்பதை மெய்ப்பிப்பது போல இருந்தது. மானுடர்களாகிய நமக்கு மஹான்களின் செயல்களுக் கான காரணங்களை அறிவது எளிதல்ல.  கருணைக் கடலான பாபாவின் அருளால் நல்லபடியாக  குழந்தை பிறந்தது..

இப்படி எத்தனையோ அற்புதங்களை என் வாழ்வில் நிகழ்த்திய சாயிநாதன் இன்றும் உறுதுணையாக இருந்து அருள் புரிந்து வருகிறார்.

ஜெய் சாயிராம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com