மதன வேணுகோபாலன்!

மதன வேணுகோபாலன்!

குழலூதுபவனான ஸ்ரீ கிருஷ்ணன் பெரும்பாலும் இரண்டு கரங்களுடனேயே தரிசனமளிப்பான். சில தலங்களில் மட்டுமே நாற்கரத்தினனாக வணங்கு வோம். அபூர்வமாக எட்டு கரத்தினனாக கிருஷ்ணனை நாம் தரிசிப்பது பேளூரில். இது சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்திலுள்ளது.

தலபுராணத் தகவல்:

ஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயம், தீர்த்த யாத்திரையாக இந்த இடத்துக்கு வந்த அர்ஜுனன், சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டான். அருகில் நீர்நிலைகள் எதுவுமில்லை. எனவே, ஆபத்

சகாயனான ஆருயிர்த் தோழன் கண்ணனை வேண்டி னான். கண்ணனும் அவன்முன் தோன்றி, அர்ஜுனன் கையிலிருந்த பிறை வடிவ அம்பினை வடக்கிலுள்ள மலையின் அடிவாரத்தை நோக்கிச் செலுத்துமாறு ஆணையிட்டார். அவ்வாறே அர்ஜுனனும் செய்து முடிக்க, அம்பு தைத்த இடத்திலிருந்து வெள்ளாறு பெருக்கெடுத்தது. அர்ஜுனனும் சிவபூஜையை சிறப்பாகச் செய்து முடித்தான்.

இங்கேயே கண்ணன் கோயில் கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று அர்ஜுனன் வேண்ட, கிருஷ்ணரும் எட்டு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக பாமா ருக்மணி சமேதராய் எழுந்தருளினார். வசிஷ்ட நதியின் தென்கரையில், இயற்கை எழில் சூழ்ந்த சோலைக்கு நடுவில் ஸ்ரீஅஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியாக திருக்கோலம் கொண்டுள்ளார். வசிஷ்டமகரிஷி யாக வேள்வி செய்த தால் இவ்வூருக்கு வேள்வியூர், மகபுரி (மகம் என்றால் யாகம்) என்றழைக்கப்பட்டு பின்னர் வெளியூர் என்றானது. சேக்கிழார் பெருமான் காலத்தில் வேளூர் என குறிப்பிடப்பட்ட இவ்வூர், தற்போது பேளூர் என்றழைக்கப்படுகிறது.  5000 ஆண்டு பழைமையான கோயில். இக்கோயிலில் உள்ள கிருஷ்ணரை வழிபட்டு வசிஷ்ட மகரிஷி பேரருள் பெற்றுள்ளார்.

மூலவர் அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலராக பாமா ருக்மணி சகிதம் சேவை சாதிக்கிறார். எட்டுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏராள சம்பந்தம்... தேவகிக்கும் வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவன்; அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான திதிகளில் எட்டாவதான அஷ்டமியில் தோன்றியவன்; அவதாரக் கணக்கில் அம்சாவதாரமான பலராமனை விட்டு எண்ணினால், எட்டாவது அவதாரம்... அவன் எட்டு கரத்தோடு விளங்குவதும் அழகாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

குழலூதும் நிலையில் நின்றவாறு நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் கண்ணனின் கோலத்தைப் பார்க்கும்போது பெரியாழ்வாரின் பாசுரம்தான்  நினைவுக்கு வருகிறது.

சிறுவிரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண்

கோடச் செய்யவாய் கொப்பளிக்க

குறுவெயர்ப்புருவம் கூடலிப்பக்

கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து

சூழ்ந்து படுகாடு கிடப்ப

கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக்                         

கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.

வேய்ங்குழலினில் தன் சிறுவிரல்களால் தடவி,

சிவந்த தன் அதரங்களை வைத்து, புருவங்கள் அசைய கிருஷ்ணன் குழலை இசைத்தபோது அவன் முகத்தைப் பார்த்தவாறு தம் செவிகளைக் கூட அசைக்காமல் ஆவினங்களும், கூடு துறந்துவந்த பறவையினங்களும் காத்திருக்கின்றனவாம்! அதிலும், ‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க, புருவம் கூடலிப்ப’ என்பவை கிருஷ்ணனின் ஊதும் கோலத்தைக் காட்சிப்படுத்தும் அழகுச் சொற்கள். இதைப் படிக்கும் போது, அந்த ஆனந்த மோகன வேணு கானமதை மீண்டும் இசைக்கச் சொல்லி, நம் மனமும் அலை பாயத்தான் செய்கிறது.   

இன்னொரு கரம் கரும்பை ஏந்தியிருக்கிறது. கரும்பு, மன்மதன் கை வில் அல்லவா! அதை வைத்துக் கொண்டுதானே அண்டசராசரத்திலுள்ள உயிர்கள் அனைத்திலும் அவன் பந்தத்தை ஏற்படுத்துகிறான். ‘மதனன் ஏற்படுத்தும் அந்தக் காமத்தையும் என்னைச் சரணடைபவர்களிடமிருந்து நான் நீக்கிவிடு வேன் என்று சொல்கிறானோ?’ இந்த மதன வேணுகோபாலன்! ‘மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்’ என்ற ஆண்டாளின் திருப்பாவை வரிகளும் நம் நினைவில் வந்து நிழலாடுகின்றன.

திருமணம் ஆகாதவர்கள், மக்கட்பேறு வாய்க்காதவர்கள், தம்பதியருக்குள் ஒற்றுமையின்மை, குடும்ப அமைதி வேண்டுபவர்கள் மற்றும் வியாபார அபி விருத்தியை எதிர்நோக்குபவர்கள் என இன்னபிற தேவைகளையும் வேண்டுவோருக்கு அவற்றைத் தந்து அருள்கிறான்.

பணக் கஷ்டத்தில் உள்ளவர்கள், மரகதவல்லித் தாயாரிடம் வேண்டிக்கொண்டால் அதை தாயார் தீர்த்து வைக்கிறார். கருடாழ்வாரை வழிபட்டால் எதிர்ப்படும் தடைகள், அலர்ஜி தொல்லைகள் மற்றும்  தீராத கடன்கள் தீரும். அர்ஜுனனுக்கு சதுர்புஜராக தரிசனம் தந்த கண்ணன், இங்கே எட்டு கரங்களோடு சேவை சாதிப்பது சிறப்புதான். உள்ளே நுழையுமுன் சற்றே தலைசாய்த்து காட்சிதரும் அனுமனைக் காண்கிறோம். உள்ளே சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் சன்னிதிகளும் உள்ளன.  இந்த எட்டு கரத்தானைத் தரிசித்தால், வாழ்வில் எட்டாதது எது இருக்க முடியும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

செல்லும் வழி: பேளூர் செல்ல, வாழப்பாடியிலிருந்து பஸ் வசதி உண்டு. வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com