‘சிதம்பரத்தை விட அற்புத நடராஜர் சிலை எங்கிருக்கு தெரியுமா?’

‘சிதம்பரத்தை விட அற்புத நடராஜர் சிலை எங்கிருக்கு தெரியுமா?’

புதுதில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும், நெஞ்சத்துக்கும் விருந்து. 'கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு? திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப்பட்டவர்? தில்லை நடராஜர் திருமேனியின் தனித்தன்மை என்ன? உலகிலேயே பெரிய நடராஜர் சிலை நெய்வேலியின்தான் இருக்கிறது' என்பது போன்ற ஏராளமான தகவல்களை அவர் அள்ளி வீசுவார். ஆடிக்கொண்டேயிருக்கும் அந்த தெய்வத்திடம் ஆராத பக்தி கொண்ட சுந்தரேசனுக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகா பெரியவாளிடமும் அசைக்க முடியாத பக்தி. ஒரு சமயம் மகாசுவாமிகள் முன், கைகட்டி நின்றார் சுந்தரேசன்.

"நீ மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?” திடீரென்று வந்து தாக்கியது மகாபெரியவாளின் கேள்விக்கணை அவரை!

‘நடராஜரிடம் எனக்கு மிகுந்த ஈடுபாடு என்று நான், பெரியவாளிடம் சொன்னதில்லையே? பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அவர் யோசித்தார்.

சற்று சமாளித்தவாறே, "இல்லை..." என்று சொன்னார் சுந்தரேசன்.

"பனங்குடிக்குப் பக்கத்திலே இருக்கு மகிழஞ்சேரி. அந்த கிராமத்திலே என்ன விசேஷம் தெரியுமோ? பெருமாள் கோயில்லே நித்யவாசம் பண்ணிண்டிருக்கார், நடராஜ சிவம்! சிதம்பரத்தைக் காட்டிலும் அற்புதமான விக்ரஹம். போய்ப்பார். பார்த்துட்டு வந்து என்ன ஸ்பெஷல்னு சொல்லு..." என்றார்.

றுநாளே மகிழஞ்சேரிக்குப் போன சுந்தரேசன், பட்டாச்சாரியாரை அழைத்துக்கொண்டு பெருமாள் கோயிலுக்குப் போனார்.

'பெரியவாள் உத்திரவு' என்ற சொல்லைக் கேட்டதும், சுந்தரேசனை நடராஜரோடு ஐக்கியப்படுத்தி விட்டார் அவர். ஒவ்வொரு அங்குலமாக… திருவாசி, விரிந்த சடை, உடுக்கு ஏந்திய கை, அனல் பறக்கும் திருக்கரம், ஆனந்தப் புன்னகை நெளிந்தோடும் அழகு முகம், துடி இடை, தூக்கிய திருவடி, தரையில் பதிந்த பாதம் என்று அங்குலம் அங்குலமாகப் பார்த்தார் சுந்தரேசன்.

‘பார்த்துட்டு வந்து என்ன ஸ்பெஷல்னு சொல்லு’ என்றல்லவா உத்திரவு? பெரியவாளிடம் சொல்லணுமே? ஓ! அந்த ஊமத்தம்பூ! அதுதான், சிலையின் தலைப்பகுதியில் தலைகீழாகக் கிடக்கிறது? அது நேராக இருப்பதுதானே நியாயம்? முன்னுச்சியைத் தொடுகிறாப்போல் சரிந்து காணப்படுகிறதே? ஏன்? பத்து அடி தள்ளி நின்று பார்த்தார் சுந்தரேசன். பின்புறம் சென்று, பின்னழகைக் கண்டு சொக்கிப் போனார். ஆனந்தத் தாண்டவத்தின் மெய்மறந்த நிலையை உணர்த்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

“ஆகா!” என வியந்த சுந்தரேசன், உடனே பெரியவாள் முன் வந்து நின்றார்.

வரிடம் மகாபெரியவாள், "மகிழஞ்சேரி நடராஜர் மெய்மறந்து தாண்டவம் ஆடுகிற மாதிரி இல்லை?" என்றார்.

"ஆமாம்… தலையில் ஊமத்தம்பூ கூட நழுவி விழுகிறாப்போல தத்ரூபமாக இருக்கு" என்றார் சுந்தரேசன்.

"பேஷ்! நன்னா கவனிச்சிருக்கே! நடராஜர் ஒவ்வொரு க்ஷேத்ரத்திலும் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடியிருக்கிறார். மகிழஞ்சேரியில் 'உன்மத்த நடனம்' என்ற அபூர்வமான நடனம்!" என்று அந்த நடராஜர் விக்ரஹம் குறித்த செய்திகளைக் கூற ஆரம்பித்தார் மகாபெரியவா.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்பர்கள் மெய்மறந்து போனார்கள். ஆனால், பெரியவாள் மெய் உணர்ந்து, சிவானந்தப் பெருவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com