பக்குவம் வந்தா குழைவு தானா வரும்!

பக்குவம் வந்தா குழைவு தானா வரும்!

ஸ்ரீமடத்தில் மகாபெரியவரின் பரமேஷ்டி குருக்கள் ஆராதனை ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த ஆராதனையில கலந்துகொள்ள வேதவித்துக்கள், வைதீகர்கள், பண்டிதர்கள் என்று பல நூறு பேர் கலந்து கொள்வார்கள். ஆராதனை நடைபெறும் நாட்களில் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் போஜனம் செய்விப்பது வழக்கம். இந்த வைபவம் மட்டுமில்லாமல், ஸ்ரீமடத்தில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும் சமயத்தில் நிறைய பேருக்கு ஒரே சமயத்தில் சமைக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்காகவே விசேஷமாக சிலரை அழைப்பது உண்டு.

இந்த மாதிரி ஸ்ரீமடத்தில் வைபவங்கள், ஆராதனைகள் நடைபெறும் சமயத்தில் எல்லாம் குறிப்பிட்ட ஒரு சமையல்காரரை வழக்கமாகக் கூப்பிடுவார்கள். காரணம், அவரோட கைப்பக்குவம் அலாதியானது. மகாபெரியவரோட பரம பக்தரான அந்த பரிசாரகர் வேறு ஒரு ஊரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும், அந்த முதலாளியிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மடத்துக்கு வந்து சமையல் கைங்கரியத்தை செய்ய ஆரம்பித்து விடுவார்.

அப்படி சமைப்பதற்குக் கூலியாக எதையும் அவர் கேட்கவும் மாட்டார். மகாபெரியவரின் திருக்கரத்தால் ஆசீர்வாதம் செய்து தரப்படுவதை வாங்கிக்கொள்வதில், அவர் சார்பில் ஸ்ரீமடத்தில் நடைபெறும் ஆராதனைகளில் கலந்து கொள்பவர்களுக்கு சமைத்துப் போடுவதில் கிடைக்கும் புண்ணியம், மன சந்தோஷத்துக்காகவுமே அவர் வருவார்.

பல காலம் இப்படியே செய்த வந்த அவருக்கு வயசு அதிகரித்தது. அதன் காரணமாக ஆரம்பத்தில் செய்ததுபோல் பரபரன்னு இல்லாமல், கொஞ்சம் மெதுவாகத்தான் அவரால் சமைக்க முடிந்தது.

மகாபெரியவர் அனுக்கிரஹம் இருக்கும் வரைக்கும் நான் வந்து சமைத்துத் தருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து பல வருடங்கள் இப்படி கலந்து கொண்ட அவருக்கு, ஒரு சமயம் மடத்தில் பரமேஷ்டி குரு ஆராதனை நடந்த சமயத்தில் மடத்தோட காரியதரிசி தகவல் சொல்லவில்லை. அதனால் அவருக்கு விஷயமே தெரியவில்லை. அவர் வராமலே அந்த ஆராதனை முடிந்தது.

அதைத் தொடர்ந்து மறுவாரமும் பரமேஷ்டி குருக்களில் இன்னொரு குருவுக்கு ஆராதனை வந்தது. இந்த நேரத்தில், அங்கே அந்த பக்தருக்கு மனசில் ஏதோ தோண்றி இருக்கிறது. ’வழக்கமா வருஷா வருஷம் இந்த சமயத்துலதானே ஆராதனை நடக்கும். இந்த வருஷம் இன்னும் கூப்பிடவே இல்லையே. ஒருவேளை நமக்கு கடுதாசி எதுவும் போட்டு அது கிடைக்காமப் போயிடுத்தோ என்னவோ தெரியலையே. எதுக்கும் பார்த்துட்டு வருவோம்’னு அவராகவே புறப்பட்டு மடத்துக்கு வந்து விட்டார். வந்தவர், இங்கே ஆராதனைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருப்பதைப் பார்த்ததும் மளமளவென்று வேலையில் இறங்கி விட்டார். மடத்து காரியதரிசிக்கு விஷயம் தெரிந்தது. இருந்தாலும் வழக்கமாக வருபவர் என்பதால் பேசாமல் இருந்து விட்டார்.

பரிசாரகருக்கு வயசாகி விட்டதால், சாதத்தை சரியான பக்குவத்தில் இறக்கி வடிக்க முடியவில்லை. அதனால் சாதம் கொஞ்சம் குழைந்து விட்டது. ‘அடடா… இப்படி ஆயிடுத்தேன்னு அவர் சங்கடப்பட்டுக்கொண்ட இருந்த சமயத்தில் சரியாக அங்கே வந்தார் மடத்தின் காரியதரிசி. "இதுக்குதான் இந்த வருஷத்துலேர்ந்து உங்களைக் கூப்பிட வேண்டாம்னு நினைச்சேன். வயசு ஆயிடுத்து இல்லையா? இனிமே நீங்க ஒதுங்கிக்கறதுதான் நல்லது!" என கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்.

அவ்வளவுதான் கண் கலங்கிவிட்டது அந்த பக்தருக்கு. "தப்புதான் கொஞ்சம் அசந்துட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல, அவாள்ளாம் சாப்பிட வரதுக்குள்ள பொலபொலன்னு பூ மாதிரி சாதம் வடிச்சு வைச்சுடறேன்!" என்று தழுதழுப்பா சொன்னவர், அதேமாதிரி சீக்கிரமே சாதம் வடிச்சும் வைத்துவிட்டார்.

ஆராதனைக்கு இடையில் எல்லோரும் போஜனம் பண்ணும் நேரம் வந்தது. வேத வித்துக்கள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் வந்து பந்தியில் உட்கார்ந்தார்கள். எல்லோருக்கும் தலைவாழை இலை போட்டு காய்கறியெல்லாம் பரிமாறிட்டு, அன்னம் பரிமாறத் தயாரானார்கள் மடத்துத் தொண்டர்கள். அப்போதான் அங்கே ஒரு அதிசயம் நடந்தது. யாருமே எதிர்பார்க்காதபடி திடீர்னு அங்கே வந்தார் மகாபெரியவர்.

சாப்பிட உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாரும் மரியாதைக்காக எழுந்திருக்க முயல, வேண்டாம்னு சைகையாலேயே தடுத்தார் ஆசார்யா. "எல்லாரும் திருப்தியா போஜனம் பண்ணுங்கோ"ன்னு சொன்ன மகாபெரியவர், எல்லாருக்கும் பரிமாறத் தயாரா அன்னப் பாத்திரத்தை வைச்சுண்ட இருந்த தொண்டரைப் பார்த்தவர், "என்ன இது, பண்டிதர்களுக்கு இப்படியா அன்னம் சமைக்கறது? ஒருத்தர் இலைல பரிமாறின சாதத்துல ஒரு பருக்கை மத்தவா இலைல விழறது கூட தப்பாச்சே. கொஞ்சம் குழைஞ்சுன்னா இருக்கணும்?" என்று சொன்ன மகாபெரியவர், மடத்தின் காரியதரிசியைப் பார்த்தார். "ஏன் நீ வழக்கமா வர்ற பரிசாரகருக்கு சொல்லலையோ?" தெரிஞ்சும் தெரியாதவர் மாதிரி கேட்டார்.

"இல்லை பெரியவா, அவர் பக்குவம் பண்ணின அன்னம் குழைஞ்சுடுத்துன்னு..." என்று முடிக்காமல் இழுத்தார் காரியதரிசி.

"ஓஹோ... அவருக்கு சாதம் வடிக்கற பக்குவம் தெரியாதுன்னு நீ சொல்லிக் குடுத்தியோ?" மகாபெரியவர் கேட்டதுல கொஞ்சம் எள்ளல் தொனிச்சுது. அப்புறம் என்ன, தொண்டர்கள் உக்ராண அறைக்கு ஓடிப்போய், பக்தர் முதல்ல வடிச்ச குழஞ்ச சாதத்தை எடுத்துண்டு வந்து பரிமாறினார்கள்.

"சாதம்னா கொஞ்சம் குழைஞ்சு இருக்கணும். அப்போதான் அது குழம்பு, ரசம்னு எல்லாத்தோடயும் பூரணமா சேரும். அதோட, இப்படிக் குழைஞ்சு இருந்தாத்தான் வயத்துக்கும் ஹிதம் புரிஞ்சுதா? இதெல்லாம் வழக்கமா பண்றவருக்குத்தான் தெரியும். நீ புதுசா பக்குவம் சொல்ல வேண்டாம்!" என்றார்.

உக்ராண அறையில் ஓரமா நின்றுகொண்டு இருந்த அந்த வயசான பரிசாரகருக்கு, பெரியவர் பேசினது எல்லாமும் தெளிவா காதுல விழுந்தது. இப்போது இரண்டாவது முறையாக அவரது கண்களில் நீர் நிரம்பியது. இது ஆனந்தத்தால் நிறைஞ்சதுன்னு சொல்லணுமா என்ன?

ஆராதனையெல்லாம் முடிஞ்சு அந்த பக்தர் புறப்படும்போது மகாபெரியவர் விசேஷமா ஒரு சால்வை போத்தச் சொல்லி, கொஞ்சம் கனிகளும் தாராளமான தட்சணையும் குடுத்து ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கு அப்புறமும் பலகாலம் மடத்துக்கு வந்து தொண்டு செய்தார் அந்த பக்தர்.

பக்குவம் வந்தா தானா குழைவு வரும். குழைஞ்சா வாழ்க்கைல எல்லாத்தோடயும் சகஜமா ஒத்துப் போயிடலாம். இது சாதத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் சாரத்துக்கும் இதுதான் அடிப்படை!

மகாபெரியவா இந்த அற்புதத்தை நடத்தி சொல்லாமல் சொன்ன இந்தத் தத்துவம் காரியதரிசிக்கு மட்டுமல்லாமல் அங்கே இருந்த வேதவித்துகள் எல்லாருக்குமே தெளிவாகப் புரிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com