காஞ்சி மகா பெரியவா
காஞ்சி மகா பெரியவா

‘ஶ்ரீ சக்ர பூஜை பண்ணு!’

'சகலமும் காஞ்சி மகாபெரியவாளே' என்று இருக்கும் குடும்பங்களில் ராகவன் குடும்பமும் ஒன்று! அவர்கள் வைஷ்ணவர்கள்தான் என்றாலும், ராகவனின் அப்பா தினமும் ஸ்ரீ சக்ர பூஜை செய்து கொண்டிருந்தார். ஆனால், இது ராகவனின் தாத்தாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

ராகவனின் அப்பா தனது கடைசி காலத்தில், "ஸ்ரீ சக்ர பூஜையை காலம் முழுக்க விடாம பண்ணுவேன்னு சத்தியம் பண்ணு!" என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

ராகவனின் அப்பா காலமானதும், அவனது தாத்தா அந்த ஸ்ரீ சக்ரத்தை எடுத்து பரணில் போட்டுவிட்டார். என்றைக்கு ஸ்ரீ சக்ரம் பரணுக்குப் போனதோ, அன்றிலிருந்து ராகவனின் தாயாருக்கு உடலெல்லாம் ஓயாத எரிச்சல்! காரணம் என்னவென்று புரியவில்லை! இதையறிந்த ராகவனின் அம்மாவழி தாத்தா, "பூஜை பண்ணிண்டிருந்த ஸ்ரீ சக்ரத்தை இப்படி பரண்ல போடுவாளா? பழையபடி எடுத்து பூஜை பண்ணு! எல்லாம் சரியாயிடும்" என்றார்.

உடனே ராகவனும் ஶ்ரீ சக்ரத்தை எடுத்து பூஜை பண்ண ஆரம்பித்தார். அதன் பிறகு அம்மாவின் உடல் எரிச்சல் ஆச்சரியமாக குணமடைந்தது! ஆனால், இதில் அப்பாவழி தாத்தாவுக்கு உடன்பாடு இல்லை.

"இதோ பாரு ராகவா! நீயோ ஊர் ஊரா போய்ண்டிருக்க! அதனால ஒன்னால ஸ்ரீ சக்ரத்துக்கு ஒழுங்கா பூஜை பண்ண முடியாது! பூஜை பண்ணாம இருக்கறதை விட, பேசாம இத ஏதாவது கோயிலுக்குக் கொடுத்துடலாம் அல்லது கடல்ல தூக்கிப் போட்டுடலாம்!" என்றார்.

ஸ்ரீ சக்ரம்
ஸ்ரீ சக்ரம்

ராகவனுக்குக் குழப்பம்! ‘அப்பாவுக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதா? அல்லது தாத்தா சொல்வதைக் கேட்பதா?’ குழப்பத்தின் கடைசியில் தெளிவு பிறந்தது! ஸ்ரீ சக்ரத்தை எடுத்துக் கொண்டு ஓடினார் மகாபெரியவாளிடம்!

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, இவர் எதுவும் சொல்லும் முன்பே, பெரியவா கேட்டார், "என்ன? ஒங்காத்து தெய்வத்தைப் பத்தி கேக்கணுமோ?"

சிலிர்த்துப் போனார் ராகவன். ஸ்ரீ சக்ரத்தை பெரியவா முன் வைத்தார். பெரியவா சற்று நேரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு, "ராகவா! இது ஒங்காத்து தெய்வம்! உனக்கு பெரிய குடும்பமே இருக்கு! பூஜை பண்றதுக்கு ஆத்துல, யாருமே இல்லேன்னாதான், உன்னோட தாத்தா சொல்ற மாதிரி பண்ணலாம். ஆத்துல அம்மா தினமும் விளக்கேத்தி ஸாளக்ராமத்துக்கு அன்னம் நைவேத்யம் பண்றச்சே, இந்த ஸ்ரீ சக்ரத்துக்கும் தீபம் காட்டறதுல ஒண்ணும் சிரமம் இல்லையே?" என்றார்.

"அதெல்லாம் இல்ல பெரியவா! தாத்தாதான்..." என இழுத்தார்.

"யார் என்ன சொன்னாலும் குழப்பிக்காம, கவலைப்படாம போ! அம்பாள் ஸகல க்ஷேமத்தையும் கொடுப்பா!" என்று சொல்லி, தமது திருக்கரத்தால் குங்குமத்தை அள்ளி ஸ்ரீ சக்ரத்தின் மேல் போட்டு, ராகவனிடம் கொடுத்தார். அவருடைய அம்மாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை! பூஜை தொடர்ந்தது!

ராகவன் அடிக்கடி ஊர்களுக்குப் போக வேண்டியிருந்ததால், ஸ்ரீ சக்ர பூஜை பண்ண ஒரு சாஸ்த்ரிகளை ஏற்பாடு பண்ணியிருந்தார்.

கொஞ்ச காலத்தில் அம்மாவுக்கு திடீரென்று புத்தி பேதலித்த மாதிரி அடிக்கடி கத்த ஆரம்பித்தாள். டாக்டர்கள் அதை மனோ வியாதி என்று கூறி, ‘மருத்துவம் செய்ய வேண்டும்’ என்றனர்.

மீண்டும் அம்மாவை அழைத்துக் கொண்டு மகா பெரியவாளிடம் போனார் ராகவன்! ஶ்ரீ மடத்தில் அன்று ஏக கூட்டம்! இவர் முறை வந்தது.

"என்ன ராகவா... அம்பாள் பூஜையெல்லாம் நன்னா நடக்கறதா?" என்றார் மகாபெரியவா.

சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகும் என்ன ஒரு ஞாபக சக்தி!

"பூஜையெல்லாம் பெரியவா அனுக்ரஹத்துல நன்னா நடக்கறது! ஆனா, அம்மாவுக்குத்தான் என்னவோ புத்தி சரியில்லாத மாதிரி அப்பப்போ கத்தறா! பெரியவாதான் அம்மாவைக் காப்பாத்தணும்" என்றார்.

பெரியவாளிடம் இருந்து டக்கென்று பதில் வந்தது... "ஸ்ரீ சக்ரத்துல ஒரு கீறல் விழுந்திருக்கு! ஊருக்குப் போனதும் நீயே இனிமே உன் கையால ஸ்ரீ சக்ர பூஜை பண்ணு! எல்லாம் சரியாயிடும்" என்று கூறி அபயம் அளித்தார்.

"ஶ்ரீ சக்ரத்துல கீறல் எப்படி விழுந்திருக்கும்?" ஊருக்குப் போனதும், சாஸ்த்ரிகளை அழைத்து ஸ்ரீ சக்ரத்தை பரிசோதித்ததில், அதில் ஒரு ஆழமான கீறல் இருந்தது! பிறகு அதை முறைப்படி சரி செய்து, தானே பூஜை செய்ய ஆரம்பித்தார் ராகவன். எங்கோ இருக்கும் பெரியவாளுக்கு இந்தக் கீறல் தெரிந்திருப்பதில் அதிசயம் இல்லையே! ஸ்ரீ சக்ர ரூபமும், அதன் அதிதேவதையும் அவர்தானே!

மகாபெரியவா சொன்னபடி ராகவனே ஸ்ரீ சக்ர பூஜை பண்ண ஆரம்பித்ததும், படிப்படியாக அவருடைய அம்மாவின் மனநிலை முழுவதுமாக குணமானது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com