கெட்டிமேளச் சத்தம் முழங்க வைக்கும் அபூர்வ வழிபாடு!

கெட்டிமேளச் சத்தம் முழங்க வைக்கும் அபூர்வ வழிபாடு!

செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற காரணங்களால் சில குடும்பங்களில் உரிய வயதாகியும் பெண்களுக்குத் திருமணம் தாமதமாகிக் கொண்டே போகும். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன வருத்தம் மற்றும் சஞ்சலத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அப்படித் தாமதமாகும் திருமணம், விரைவில் நடைபெற மஹாலக்ஷ்மி தாயாருக்கு செய்யப்படும் ஒரு வழிபாடு மிகுந்த பலனைக் கொடுக்கவல்லதாக உள்ளது.

தள்ளிப்போய்க்கொண்டே திருமணம் விரைந்து நடைபெற மஹாலக்ஷ்மி தாயாருக்குச் செய்யப்படும் ‘சங்கு கோல வழிபாடு’ அபூர்வமான ஒன்றாகும். அந்த வழிபாட்டைக் காண்போம்.

முதலில் ஒரு பெரிய தாம்பாளத்தில் குங்குமத்தைப் பரப்பி வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு வலம்புரி சங்கு கோலத்தை உங்கள் விரலால் வரைய வேண்டும். அதன்பின் அந்த சங்கு கோலத்தின் உட்புறமாக குண்டு மஞ்சளை வலமிருந்து இடமாக குறைந்தது 11 அல்லது அதற்கு மேல் ஒற்றைப்படை எண்ணில் வைத்து, ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என்கிற சுலோகத்தைச் சொல்லி, மஹாலக்ஷ்மியை அந்தக் கோலத்தில் ஆவாஹனம் செய்து, ஸ்ரீ சூக்தத்தை ஒன்பது முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்றால், உங்கள் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெறும் வரை செய்யலாம். முக்கியமாக, இந்த வழிபாட்டை முதலில் தொடங்கும்போது வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஹோரையில் செய்யத் தொடங்க வேண்டும். பிறகு அடுத்தடுத்த நாட்கள் செய்யும்போது நேரம் பார்க்கத் தேவையில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உங்களால் இந்த வழிபாட்டை செய்ய முடியாது போனால், உங்களது ரத்த சம்பந்தமான உறவுகள், அதாவது உங்களது அம்மா அல்லது அப்பா கூட இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சங்கு கோலம் வரைந்த குங்குமத் தாம்பாளத்தை பூஜை முடியும் வரை எக்காரணத்தைக் கொண்டும் நகர்த்தவே கூடாது என்பதுதான். சரி, இந்த வழிபாட்டின் பலனாக அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதென்றால், பூஜைக்குப் பயன்படுத்திய மஞ்சள், குங்குமத்தை என்ன செய்வது என்று நினைக்கத் தோன்றுகிறதா? முதலில் உங்களுக்கு உறவே இல்லாத சுமங்கலிப் பெண்களுக்கு அந்த குங்குமத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு உங்களது சொந்தக்காரர்களுக்கும் கொடுக்கலாம்.

இந்த பூஜையில் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. அதாவது, நீங்கள் பாராயணம் செய்யும் ஸ்ரீ சூக்தத்தில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்ய வேண்டும். உதாரணமாக, இருபது நாட்கள் நீங்கள் ஸ்ரீ சூக்த பாராயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் 20x9=180 முறை நீங்கள் ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்திருப்பீர்கள். இதில் பத்தில் ஒரு பங்கு என்றால், 18 ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். இந்த பூஜையை பக்திப்பூர்வமாக செய்து மஹாலக்ஷ்மி தாயாரை வழிபட்டு வந்தால் விரைவில் உங்கள் குடும்பத்தில் மங்கல கெட்டிமேளச் சத்தம் கண்டிப்பாகக் கேட்கும்.

இது தவிர,

‘ஓம் ஸ் ரீம் ஹ்ரீம் க்லீம்

மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி

தேஹி தேஹி ஸர்வ சௌபாக்யமே தேஹி ஸ்வாஹா’

எனும் மந்திரத்தை 108 முறை தினமும் பக்தியோடு சொல்லி, தாயாரை வழிபட்டு வந்தால் மிக விரைவில் உங்கள் வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com