
விருதுநகர் மாவட்டம், சோலைக்கவுண்டன்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில். மூலவர் திருவேங்கடமுடையான் எனும் சீனிவாசப்பெருமாள் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் பெருமாளைச் சுற்றி யோக நரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன், சக்கரத்தாழ்வார் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.
பிராகாரச் சுற்றில் விநாயகப் பெருமான் தனிச்சன்னிதியில் மிக அழகாக காட்சி தருகிறார். மேலும், லட்சுமி, துர்கை மற்றும் லட்சுமி நரசிம்மரும் இக்கோயில் பிராகாரச் சுற்றில் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தமது தேவியருடன் அமர்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலில் இன்னொரு சிறப்பம்சமாகக் கருதப்படுவது ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பதுதான். எனவே, ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள்கூட இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால், அவரவர்களுக்குரிய பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்துக்கு வந்து சேர்ந்து விடும் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக உள்ளது. இப்படி அந்தந்த ராசி, நட்சத்திரத்துக்குரிய பலனை இத்தல பெருமாள் பக்தர்களுக்கு வழங்குவதால் இவர், 'நம்பெருமாள்' என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
திருக்கார்த்திகை, கோகுலாஷ்டமி, மாதந்தோறும் வரும் ஏகாதசி நாள், சித்திரை வருடப் பிறப்பு, ராம நவமி, மார்கழி சிறப்பு பூஜைகள் ஆகியவை இந்தக் கோயிலில் விசேஷமாக அனுசரிக்கப்படுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி ஒன்பது நாட்களும் பெருமாள் புறப்பாடு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிரகக் கோளாறுகளால் திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள், வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள், பதவி உயர்வு பெற நினைப்பவர்கள் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற எண்ணுபவர்கள் இத்தலத்துக்கு வந்து பெருமாளிடமும் நவக்கிரகங்களிடமும் பிரார்த்தனை செய்கின்றனர். எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.