தீய சக்தியை விரட்டும் கல்லுப்பும்; பச்சை கற்பூரமும்!

தீய சக்தியை விரட்டும் கல்லுப்பும்; பச்சை கற்பூரமும்!

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்டால் மட்டும் ஆனதல்ல. நமக்கான நிம்மதியையும், பாதுகாப்பையும் தரக்கூடியதுதான் வீடு. அந்த வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி மற்றும் கெட்ட சக்திகள் போன்றவற்றை விரட்டியடிக்க ஆன்மிக ரீதியாக எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் சில பரிகாரங்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால், அதன் மூலம் முழுமையாக பலன் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் பலன் தரக்கூடியது கல்லுப்பு மற்றும் பச்சை கற்பூர பரிகாரமாகும்.

பொதுவாகவே, குடும்பத்தில் கஷ்டம் என்றால் முதலில் செய்ய வேண்டிய விஷயம் குலதெய்வ வழிபாடு. இந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கு முன்பு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள். இல்லையென்றால் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து, குலதெய்வ படத்துக்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்து வழிபடுங்கள். பின்னர், ஒரு எச்சில் படாத தட்டில் கல்லுப்பை பரப்பி வைத்து, அதன் மேலே ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து இறைவனை மனதார வேண்டி கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.

பச்சை கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் தட்டை சுட்டுக்கொள்ளாமல் அப்படியே தூக்கி கையில் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூரம் எரியும்போது மனதை ஒருநிலைப்படுத்தி, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி எல்லாம் விலகிச் செல்ல வேண்டும் என மனதை அலைபாய விடாமல் பிரார்த்தனை செய்யவும். பச்சை கற்பூரம் எரியும் வரை இந்த பிரார்த்தனையை செய்தால் போதும். கற்பூரம் அணைந்த பின்பு தட்டில் இருக்கும் உப்பை தண்ணீர் இருக்கும் ஜக்கில் அல்லது பக்கெட்டில் கொட்டி விடவும். சிறிது நேரத்தில் அந்த உப்பு கரைந்து விடும். பின்பு அந்தத் தண்ணீரை தொடாமல் அப்படியே வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுங்கள்.

வாரத்துக்கு ஒரு நாள் என தொடர்ந்து மூன்று வாரங்கள் இந்தப் பரிகாரத்தை செய்து வர வேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையை தவிர, மற்ற நாட்களில் இந்தப் பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்தப் பரிகாரத்தை இந்த வாரம் எந்தக் கிழமையில் செய்கிறீர்களோ, அடுத்து இரண்டு வாரமும் அதே கிழமையில்தான் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது வீட்டில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் நீங்கிவிடும். இழந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் திரும்பவும் பெறுவதற்கு இந்தப் பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கு கல்லுப்பைத் தவிர, சிறந்த வேறு ஒரு பொருள் நிச்சயம் கிடையாது. கெட்ட சக்தி, கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கு பச்சை கற்பூரமும் பயன்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com