புரட்டாசி மாத விரதமும் சைவ உணவும் – ஏன்?

புரட்டாசி மாத விரதமும் சைவ உணவும் – ஏன்?

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். புதனை சௌமியன் என்றும் கூறுவார்கள். புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால் அது உப்புசப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் எல்லாம் அதனுடைய உணவு. பெருமாளுக்கும் சைவ உணவுதான். அசைவ உணவுகள் வரவே வராது. காய்கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகள் எல்லாம்தான் புதனுக்கு ஏற்றது. அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகின்றன.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். மேலும், பூமியின் இயக்கத்துப்படி நமக்கு செரிமான குறைவும் வயிறு பிரச்னைகளும் ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து உடம்புக்கும் வயிற்றுக்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க சொன்னார்கள்.

ஏகாதசி விரதம், புரட்டாசி விரதம், சனிக்கிழமை விரதம் என பல தினங்களுக்கு முன்னோர்கள் காரணம் இல்லாமல் விரதம் இருந்ததில்லை. புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு போய் துளசி தீர்த்தம் குடிக்கச் சொல்வார்கள். இதற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நன்மை தரும் பல காரணங்கள் உள்ளன.

மேஷ ராசியில் உச்சம் வரும் சூரியன் துலாம் ராசியில் நீச்சமடைகிறது. கன்னி ராசியில் இருக்கும் சூரியன் படிப்படியாக தனது வலிமையை இழக்க தொடங்குவார். சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். எனவேதான் சாத்வீகமான உணவுகளை சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டால் நமக்கு செரிமான குறைபாடும் வயிறு பிரச்னைகளும் ஏற்படும். கெட்ட கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

புரட்டாசியில் மழை அதிகம் பெய்யும். பூமி குளிரப் பெய்யும். மழையால் வெப்பம் குறையும். அதே நேரம் பூச்சிகள், கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்த மாதத்தில் ஆன்மிக விஷயங்கள் அதிகம் நடைபெறும். பெருமாள் விரதத்தோடு, அம்மனுக்கு உகந்த நவராத்திரி பண்டிகைகளும் கொண்டாடப்படும். பலவகையான சுண்டல்கள் செய்து பிரசாதமாக கொடுத்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வார்கள். அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல்நலத்தை கெடுத்துவிடும். வயிறு சம்பந்தமான பிரச்னை ஏற்படுத்தும். அதனால்தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கிவிட்டு சைவ உணவுகளை சாப்பிட்டு நம் முன்னோர்கள் விரதம் இருந்தனர். அதுமட்டும் இன்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்பமாறுதல் நோய்க்கிருமிகளை உருவாக்கி விடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.

பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். துளசி தெய்வீக மூலிகை. பெருமாளுக்கு பிடித்தமானது. வயிறு தொடர்பான பிரச்னைகள் கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். சாதாரணமாக சைவ உணவு நமது உடலுக்கு எல்லா வகையிலும் உகந்தது. எனவே, அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு விரதம் இருப்பதன் மூலம் இறைவனின் அருளோடு நோயற்ற வாழ்க்கையும் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com