
சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த உத்தாலகன், விஷ்ணு பத்னியான தேவியை ‘ராதா’ என்று பூஜித்து வந்தார்.
ஒருநாள் நதிக்கரையில் இளம்பெண்ணொருத்தி துணி துவைத்துக்கொண்டு இருந்தாள். அந்த வழியே சென்ற வளையல் வியாபாரியை அழைத்து, தான் விரும்பிய வளையல்களை வாங்கிக் கொண்டாள். “நீ வாங்கிய வளையல்களின் விலை மூன்று ரூபாய். ஆனால், உனக்கு இரண்டரை ரூபாய்க்கே தருகிறேன்” என்றான் வளையல்காரன்.
“என் வீடு பக்கத்து கிராமத்தில் இருக்கிறது. என் தந்தையின் பெயர் உத்தாலகன். அவரிடம் வளையல் களுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்” என்றாள் அந்தப் பெண். வளையல்காரன், “அவரிடம் என்ன சொல்லட்டும்?” என்று வினவினான்.
“உங்கள் மகளை நதிக்கரையில் சந்தித்தேன். அவள் தனக்கு இஷ்டமான வளையல்களை என்னிடம் வாங்கிக் கொண்டாள். பூஜையறையில், ராதா தேவி சிலையின் பின்னால் கொஞ்சம் பணம் உள்ளது. அதை உங்களுக்குத் தெரியப்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி அவளேதான் சொன்னாள் என்று சொல்லி அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொள்” என்றாள்.
வளையல் வியாபாரி தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தான். இருப்பினும் சென்று பார்ப்போம் என்றெண்ணி உத்தாலகன் வீட்டை அடைந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத்தைச் சொன்னான். வியந்த உத்தாலகன், “என் வீட்டில் வளையல் அணி வதற்கு யாரும் இல்லையே” என்றார்.
“உங்கள் மகளை நதிக்கரையில் பார்த்தேன். அவள் தனக்கு விருப்பமான வளையல்களை வாங்கிக் கொண்டாள். அதற்கான பணத்தை உங்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளச் சொன்னாள்” என்றான் வியாபாரி மீண்டும்.
“என் மகள் என்றா சொன்னாள்?” என்று மறுபடியும் கேட்டார் உத்தாலகன். “ஆம், சுவாமி!” உத்தாலகனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம்; மறுபக்கம் திகைப்பு!
‘நான் திருமணமே செய்து கொள்ளாமல் சன்னியாசிபோல் வாழ்ந்து வருகிறேன். இதில் எனக்கு மகள் இருப்பது எப்படி சாத்தியம்? ஏன் அந்தப் பெண் அப்படிச் சொன்னாள்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது’ என்றெண்ணினார்.
அவருடைய கலவரத்தைக் கண்ட வியாபாரி, “அவள் இன்னொன்றும் சொன்னாள். பூஜையறையில் ராதையின் விக்கிரகத்துக்குப் பின்னால் பணம் வைத்திருப்பதாகச் சொன்னாள். நீங்கள் தயவு செய்து உள்ளே போய்ப் பாருங்கள்” என்றான்.
“நான் அங்கெல்லாம் பணம் வைப்பது வழக்கமில்லை. ஆனாலும், உங்கள் திருப்திக்காக பார்த்து விடுவோமே” என்றவாறே வியாபாரியுடன் பூஜை அறைக்குப் போனார்.
விக்கிரகத்தின் பின்னே சிறிய பணப்பை இருந்தது. அதைத் திறந்து பார்த்தால், வியாபாரிக்குக் கொடுக்க வேண்டிய இரண்டரை ரூபாய் இருந்தது. உத்தால கனுக்குள் பரவசம்!
‘நான் தினமும் வழிபடும் ராதா தேவியே அந்தப் பெண்ணின் உருவில் வந்து இவனை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்!’ என்று சிலிர்த்தார்.
வளையல் வியாபாரியை வணங்கி, “நான் எத்தனையோ ஆண்டுகளாக ராதா தேவியை ஆராதித்தும் எனக்கு அவளின் தரிசனம் கிடைக்கவில்லை. நீ பாக்கியசாலி! உன்னை வணங்குகிறேன்” என்று சொல்லிப் பணிந்தார்.