ரெடிமேட் இழைக் கோலமாவு!

ரெடிமேட் இழைக் கோலமாவு!

ஹாளய பக்ஷம் முடிந்தவுடன் நவராத்திரி ஆரம்பமாகிறது. அடுத்த பண்டிகை தீபாவளி. பிறகு கார்த்திகை. புது வருஷம் பிறந்தால் பொங்கல் பண்டிகை வந்துவிடும். எல்லாம் சரிதான். அதற்கு ஏன் இத்தனை பீடிகை என்றுதானே கேட்கிறீர்கள். 

பண்டிகை என்றவுடன் முதலில் ப்ரதான இடம் பிடிப்பது கோலங்கள் தான். அதுவும் சாதாரண பொடிக்கோலம் இல்லை. பச்சரிசி மாவை ஊற வைத்து அரைத்த இழைக்கோல மாவு. நாள் கிழமைகளில் அரிசியை ஊற வைத்து அரைத்து ஈர இழைக்கோல மாவை ரெடி பண்ண வேண்டும்.

அன்றன்றைக்கு அரிசியை ஊற வைத்து அரைத்து மாக்கோலத்திற்கு ரெடி செய்ய வேண்டும் என்றால் சில சமயம் மறந்து கூட போய்விடும். அப்படியே ஞாபகமாக மாவு அரைத்து வைத்துக் கொண்டாலும் கோலம் போட்ட பின்பு சில சமயங்களில் ஈரமாவு மீந்துவிடும். இந்த மாவை மறுநாள் உபயோகம் பண்ணலாம் என்றால் சில சமயங்களில் புளித்தும்ப்போய் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடும். இதையெல்லாம் தவிர்க்க அப்போதைக்கப்பொழுது மாவு எடுத்து உபயோகம் செய்வதற்காக ஒரு வழி இருக்கிறது.

கடைகளில் மாவு பச்சரிசி அல்லது பலகாரப் பச்சரிசி என்று கேட்டு அரை கிலோ வாங்கவும். அரிசியை எடுத்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். ஊற வைப்பதற்கு முன்பே இரண்டு மூன்று தடவை நன்றாக களைந்து விடவும்.  அரிசியை நன்றாக மைய கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு தாம்பாளத்தில் காட்டன் துணியை விரிக்கவும். அதன் மேல் அரைத்த அரிசி மாவை பரத்தி வைக்கவும். மாவில் இருக்கும் அதிகப்படியான நீரை காட்டன் துணி இழுத்துக் கொண்டு விடும். தாம்பாளத்தை வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். மாவு அரைக்காய்ச்சல் காய்ந்திருக்கும் பொழுதே, மாவை சின்ன சின்ன வில்லைகளாகப் போடவும். நன்றாகக் காய்ந்த பிறகு டப்பாவில் எடுத்து வைக்கவும். 

நாள் கிழமைகளில் ஒரு வில்லையை எடுத்துப் போட்டுக் கொண்டு, சிறிது நீர் விட்டு கரைத்து, இழைக்கோலம் போடலாம். சின்ன வில்லைகளாகப் போட்டிருந்தால் தேவைக்கு மேற்கொண்டு எடுத்து கரைத்துக் கொள்ளலாம். பொருள் வீணாகாமல் இருக்கும். மாவு பச்சரிசி ஒன்றுதான் நல்ல வெண்மை நிறம் கொடுக்கும். சாப்பாட்டு அரிசி இருந்தாலும் இம்மாதிரி செய்து கொள்ளலாம் ஆனால் வெளுப்பு சற்று குறைவாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com