சைவம் காட்டும் சிவம்!

சைவம் காட்டும் சிவம்!

-வெ. மாரிச்செல்வி

மது மனம், மொழி, மெய்களை சிவ வழிபாட்டில் ஒன்றச் செய்வதால் வினைகள் நீங்கி ஞானம் பெருகும். மனம் முதலிய அகக்கருவிகளையும், மெய், வாய், கண், மூக்கு, செவிகள் ஆகிய அறிகருவிகளையும், கைகால் முதலிய தொழிற் கருவிகளையும், இறைப்பணியில் செலுத்துவது வழிபாடாகும்.

வழிபாட்டினால் நமது உள்ளம் தூய்மையுற்று, தெளிவற்ற நிலை மாறி ஒருவழிப்படும். நமது மனமானது இயங்கிக் கொண்டிருக்கும் இயல்பினை உடையது. நிலையில்லா எண்ணங்களை உடையது. பெரியோர்கள் மனதினை குரங்கோடும், குதிரையோடும் ஒப்பிட்டுக் கூறுவர். குரங்கானது வீணான செயல்களைச் செய்யும் இயல்புடையது. குதிரை ஓடும் இயல்பினது. தாயுமானவர், “மனம் பாதரசம் போல சஞ்சலப்படுதலால் பரமசுக நிட்டை பெறுமோ?” என்று வருந்துகின்றார். மனத்தையும், உடலையும் இறைவன்பால் சேர்க்க வேண்டும்.

இறைவன் திருவருளைப் பெற வழிபாடு சிறந்த சாதனம் ஆகும். சிவத்தை வணங்கும் முறையில் சரியை, கிரியை, யோகம் என மூவகை நிலை உள்ளது.

இறைவனின் உருவத்தை நிர்ணயம் செய்து அதன்கண் தனது பக்தியை செலுத்துவது சரியை நெறியாகும். இதனை தாச மார்க்கம் எனவும் கூறுவர். ஆலயம் சென்று மாலை சாற்றி, புகழ்ந்து பாடி, திருவிளக்கேற்றி தொழுதல் சரியை மார்க்கமாகும். இச்சரியை வழிபாட்டினை நாளும் அன்புடன் செய்து வருதலால் மனம் சிறிது சிறிதாக பக்குவம் அடையும். அதன் காரணமாக மேம்படும் இறையுணர்வினால் உருவமல்லா இறையினை, பரம்பொருளை உணரும் நிலை தோன்றும்.

இந்நிலையில் ஐம்பொறியின் வழி செய்யும் புற தொழிலாலும், மனத்தால் செய்யும் அகத்தொழிலாலும், வழிபடும் இரண்டாம் நிலை கிரியை ஆகும். இதனை, சர்ப் புத்திர மார்க்கம் எனலாம்.

கிரியை வழிபாட்டின் தொடர்ச்சியானது யோகம். வழிபடும் நமது உள்ளத்தில் நுணுக்கமான உணர்வு நிலை எட்டப்படும். உருவ வழிபாடும் நமது மனதின் நுண் உணர்வும் கலந்து பக்குவ நிலையை அடையும். இறைவனை அன்புடன் வழிபடுவது யோகமாகும். இதில் அட்டாங்க யோகமும், குண்டலினி யோகமும் அடங்கும். இந்த யோக நிலை வழிபாட்டினை தோழமை வழி சகமார்க்கம் என்று கூறுவர்.

சரியை, கிரியை, யோகமாகிய மூன்று வழிபாட்டாலும் மனமும், புறக்கருவிகளும் தூய்மை பெறுகின்றன. உள்ளமும் தெளிவடைந்து பக்குவமுதிர்வு நிலையை அடைகிறது. உயிரறிவில் இறையருள் கலந்து பரம்பொருளே நிலைத்த பொருள் என்ற உணர்வினையும் உலகியல் வாழ்வில் இன்பதுன்பம் நிலையற்றது என்பதையும் நமக்குள் தெளிவடையச் செய்கிறது.

சிவத்தின் வழியில் உயிரினைப் போர்த்தியுள்ள அறியாமை இருளும், மாயை கலக்கமும் மறைந்து போகும். ஆன்மாவின் திருவருள் சிவத்தின் மீது பதிந்து உலகியல் பொருட்களை நுகர்வதில் நாட்டம் குறைந்து தெளிவு உண்டாகும். உலகியலில் உவர்ப்பு நிலையும், இறைவனிடத்தில் பேரன்பும், விளையும் இடத்தில் சிவமானது குருமூர்த்தமாக தோன்றும். உயர் தத்துவ ஞானத்தைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com