கட்டபொம்மன் பயன்படுத்திய கோயில் கோட்டை!

கட்டபொம்மன் பயன்படுத்திய கோயில் கோட்டை!

நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான ‘ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்’ தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது இந்த புண்ணியத் தலம்.

நவதிருப்பதி என்று அழைக்கப்படும் வைணவச் க்ஷேத்திரங்கள் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை. அதாவது, இந்தத் தலங்களில் பெருமாள் நவக்கிரகங்களாகவும் இருந்து அருள் பாலிக்கிறார். நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம், சூரியனுக்குரிய தலம். சூரியன் நவக்கிரகங்களின் தலைவராகப் பூஜிக்கப்படுகிறார். சூரியனை, சூரிய நாராயணர் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இந்தக் கோயிலின் மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன். ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆதிசேஷன், நின்ற கோலத்தில் இருக்கும் விஷ்ணுவிற்கு குடைபிடிக்கும் ஒரே கோயில் ஸ்ரீவைகுண்டம். 108 திவ்ய தேசங்களில், பெருமாள் 60 தலங்களில் நின்ற கோலத்திலும், 21ல் இருந்த கோலத்திலும், 27ல் கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

கருவறையில் உள்ள மூலவர் சிலை சாலிக்கிராம சிலை. இங்கு மூலவருக்கு பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவருடன் தாயார் கிடையாது. இந்தக் கோயிலின் உற்சவர், ஸ்ரீசோரநாதர்(கள்ளபிரான்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். தாயார் வைகுந்தவல்லி. உற்சவர் ஸ்ரீசோரநாயகி. இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னதிகள்.. அர்த்த மண்டபத்தில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விஷ்ணுவின் சிலையும், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் உள்ளன. தசாவதாரத்திற்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டிற்கு இருமுறை சித்திரை, மற்றும் ஐப்பசி ஆறாம் தேதி சூரிய ஒளி, பெருமாளின் பாதத்தை தரிசித்துச் செல்கிறது. இதற்காக, கொடி மரம் சற்று தெற்கே விலகி அமைக்கப்பட்டுள்ளது. 

ஸோமகன் என்ற அசுரன், நான்முகனிடமிருந்து வேதங்களைத் திருடிச் செல்ல, பிரம்மன் இத்தலத்திற்கு வந்து விஷ்ணுவை வேண்டி நீண்ட தவமிருந்து, பகவானின் உதவியால் வேதங்களைத் திரும்பப் பெற்றார். தனக்கு காட்சியளித்த நின்ற கோலத்திலேயே வைகுண்டநாதனாக எழுந்தருள வேண்டும் என்று நான்முகன் வேண்டிக் கொள்ள, திருமால் அதற்கு  சம்மதித்தார்.

காலதூஷகன், என்ற திருடன், திருடுவதற்குச் செல்லும் முன்னால், பெருமாளை வணங்கிச் செல்வான். திருடிய பொருள்களின் பாதியை, பெருமாளுக்கு சமர்ப்பித்து விடுவான். ஒரு முறை, அரண்மனையில் திருடச் சென்ற போது, காலதூஷகனுடன் சென்ற திருடர்கள் காவலர்களிடம் பிடிபட்டனர். காலதூஷகன் பெருமாளைத் தியானம் செய்ய, பக்தனுக்கு உதவ, பெருமாளோ திருடன் காலதூஷகன் வடிவில் அரண்மனை சென்று அரசனுக்குத் தத்துவங்கள் உபதேசித்தார். பெருமாள் கள்வன் வேடத்தில் அரசனுக்கு காட்சி அளித்ததால், கள்ளபிரான் என்ற திருநாமம் பெற்றார்.

ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலை கலை பொக்கிஷம் என்று சொல்லலாம். இறைவன் சன்னதி மற்றும் மண்டபங்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகளையும், வண்ண ஓவியங்களையும் காணலாம். மண்டபத்தின் தூண்களில் சிங்கம், யாளி, யானை, குரங்கு, அணில், கிளி சிற்பங்களையும், சன்னதிகளில், 108 திவ்யதேசம் பற்றிய ஓவியங்கள், ஸ்ரீராமனின் முடிசூட்டு விழா ஓவியங்கள் ஆகியவற்றையும் காணலாம்.

கோயிலின் பரப்பளவு 5 ஏக்கர். 580 அடி(180 மீட்டர்), நீளமும், 396அடி (121 மீட்டர்) அகலமும் கொண்ட மதில் சுவரானது, கோயிலையும், இரண்டு நீர் நிலைகளையும் சூழ்ந்து கட்டப்படுள்ளது. 110 அடி(34 மீட்டர்) உயரம் உள்ள இராஜ கோபுரம், ஒன்பது அடுக்குகளைக் கொண்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில், வீரபாண்டிய கட்டபொம்மன், ஸ்ரீவைகுண்டம் கோயிலை கோட்டையாகப் பயன்படுத்தினார் என்பது சிறப்பு.

தரிசன நேரம் – காலை 7.30 முதல் 12.00 மணி வரை. மாலை 5.00 முதல் 8.00 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com