பறக்கும் சக்தி!

பறக்கும் சக்தி!

காசியில் வாழ்ந்து வந்த பரத முனிவர் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். சிந்து நதிக்கரையில் இரு அழகிய மங்கையர் அவர் பாதம் பணிந்தனர்.

“பெண்களே! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று வினவினார் முனிவர்.

“ஸ்வாமி! நாங்கள் இந்திர சபையில் நடனமாடும் அப்சரஸ்கள். கோதாவரி நதிக்கரையில்  சத்ய தபஸ்யர் என்ற ரிஷி தவம் புரிந்து கொண்டிருந்தார். அவர் தவத்தைக் கலைக்குமாறு எங்களை அனுப்பினான்  இந்திரன். எங்களால் தவம் கலைந்த முனிவர், கங்கைக் கரையில் இலந்தை மரங்களாகும்படி சபித்து விட்டார். அவரிடம் சாப விமோசனம் கோரினோம்.

“பரத மகரிஷி உங்கள் நிழலில் படுத்து கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பாராயணம் செய்வார். அதைக்கேட்ட சில நாட்களில் ஒரு செல்வந்தருக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறப்பீர்கள். மீண்டும் பரத முனிவரைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். அதன்பின் அமரலோகம் திரும்புவீர்கள் என்றருளி னார். அதன்படி இலந்தை மரங்களாயிருந்த எங்கள் வேரில் தலையையும் காலையும் வைத்து இளைப் பாறியபடியே பகவத் கீதையின் நான்காம் அத்தி யாயத்தைப் பாராயணம் செய்தீர்கள். அதில் 36வது ஸ்லோகமான,

அபிசேதஸி பாபேப்ய:  ஸர்வேப்ய: பாப க்ருத்தம:

ஸர்வம் ஞானப்லவேனைவ வ்ருஜினம் ஸந்தரிக்ஷ்யஸி

என்ற வரிகள் எங்கள் மனதில் பதிந்தன. சதா அதை நினைத்துக்கொண்டே பாப விமோசனம் பெற்றோம்” என்றனர். அதைக் கேட்ட பரதமுனிவர்,

“உங்களுக்கு சுதீட்சண முனிவரைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டாலே விண்ணுலகம் செல்லும் சக்தி உங்களுக்கு வரும்” என்று கூறத் தொடங்கினார்.

“அகத்தியரின் சீடன் சுதீட்சணன்.  க்ஷேத்ராடனம் போகும்போது சாளக்கிராமப் பெட்டியை அவனிடம் ஒப்படைத்து, ‘தினமும் நீ குளித்த பிறகு சாளக்கிரா மத்துக்கு அபிஷேகம் செய்’ என்று அகத்தியர் உத்தர விட்டிருந்தார். அவனும் அதைக் கடைபிடித்தான். ஒரு நாள் வழியில் சில சிறுவர்கள் கற்களால் நாகப் பழங்களை அடித்துச் சாப்பிடுவதைப் பார்த்தான். அவனுக்கும் பழம் சாப்பிடும் ஆசை ஏற்பட்டது. அவன் பார்வைக்குச் சிறுகற்களே தென்படவில்லை.

பூஜைப் பெட்டியிலிருந்து ஒரு சாளக்கிராமத்தை எடுத்து அடித்தான். ஒரு கொத்து நாகக் கனிகள் விழுந்தன. ஆனால், சாளக்கிராமம் விழுந்த இடம் தெரியவில்லை! தேடித் தேடிக்களைத்தான். ஒரு கெட்டியான நாகப் பழத்தை மற்ற சாளக்கிராமங்களோடு வைத்து பூஜை செய்து வந்தான்.

அகத்தியர் திரும்பினார். ‘ஒரு சாளக்கிராமம் கொள கொளப்பாக இருக்கிறதே எப்படி?’ என்று சீடனை விசாரித்தார். ‘குருநாதரே! நித்தமும் நான் பக்தியுடன் திருமஞ்சனமாட்டியதால் பெருமாள் இளகியிருக்கலாம்’ என்றான் சிறுவன்.

 ‘சுதீட்சணா! கல்லே உருகுமளவு பக்தி கொண்ட நீ அழைத்தால் திருமால் வருவாரா?’ என்று கேட் டார் அகத்தியர். ‘கட்டாயம் வருவார்’ என்றான் சீடன். ‘அப்படியானால் ஸ்ரீமந் நாராயணரோடுதான் நீ பர்ணசாலைக்கு வரவேண்டும்’ என்றார் தீர்மானமாக. சுதீட்சணனும் ஒரு அரச மரத்தின் கீழ் ஸ்ரீமகா விஷ்ணுவை மனதில் இருத்திக் கடும் தவமிருந்தான். காலங்கள் உருண்டோடின. ஸ்ரீராமபிரான்  வனவாசம் வந்து சுதீட்சணருக்குக் காட்சியளித்து அவர் பின்னால் சென்று அகத்தியரைச் சந்தித்தார்” என்றார் பரதமுனி.

ராம நாமம் கேட்டதும் நாட்டிய நங்கையருக்குப் பறக்கும் சக்தி வந்து, பரத முனிவரை வணங்கி விண்ணுலகம் சென்றனர். அனுமனுக்கும் பறக்கும் சக்தி தந்த நாமமல்லவா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com