‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர்

(நேர்காணல் தொகுப்பு)
‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர்

மக்கு நன்கு அறிமுகமான ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் - அறிவியலிலிருந்து ஆன்மிகம் வந்தவர்; வேதங்களையும் புராணங்களையும் பற்றி இந்தக் காலத்துக்கு ஏற்றபடி, நகைச்சுவை உணர்வைக் கலந்து பேசுபவர்; குழந்தைகள் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை, அவரவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய, பயனடையக் கூடிய வகையில் ஹரி கதை சொல்லும் வித்வத் படைத்தவர்.

கல்கி ஆன்லைனில், நமது ‘தீபம்’ பிரிவில் அவருடனான நேர்காணலைப் பதிவிடுவதில் பெருமிதம் அடைகிறோம். கல்கி ஆன்லைன் YouTube சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து ஒருசில துளிகள் இங்கு தொகுப்பாக... சந்தித்து உரையாடியவர் உஷா ராம்கி.

உஷா: சனாதன தர்மம் என்பது மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்று போதிக்கக்கூடிய ஒரு விஷயம். மனித குலத்துக்குப் பொதுவான கோட்பாடுகளையும், நெறிகளையும் சொல்லக்கூடியது. அப்படி இருக்கையில், கோயில், பூஜை, பக்தி என்று அனைத்திலும் பிரிவினையை உண்டாக்குகிற நிலை இருக்கிறது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பைத் தாக்குவதாக இருக்கிறது. இதில் எங்கே தப்பு நடக்கிறது?

துஷ்யந்த்
துஷ்யந்த்

துஷ்யந்த்: சனாதன தர்மம் உலகத்துக்குத் தந்திருக்கும் மிகப்பெரிய கிரந்தங்கள் பல்வேறு சமூகத்தவரால் அருளப்பட்டது. அதில் பிரிவினையோ பாகுபாடோ இல்லவே இல்லை. இப்போது பிரிவினை வருவதற்கு முக்கியக் காரணம், ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தவரை மட்டமாகவோ அல்லது தன்னை உயர்ந்தவராகவோ காட்டுவதனால் வருவதுதான். இது தவறு; இது சனாதன தர்மத்தில் சொல்லப்படவில்லை.

மேற்கத்திய தேசங்களில் வெள்ளையர்கள், கறுப்பர்கள் என்ற வேற்றுமை இருக்கிறது. இதுபோன்ற வேற்றுமைகள் எல்லாமே நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே தவிர, சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டவை அல்ல.

உஷா: நம் எல்லோர் வீட்டிலேயும் பூஜை அறை இருக்கிறது. அது எப்படி இருக்க வேண்டும்.

துஷ்யந்த்: வீடானாலும் கோயிலானாலும் இறைவன் இருப்பது நம் இருதயத்தில்தான். இது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவரை உணர முடிவதில்லை. அதனால் பூஜை அறை ஒன்றை அமைத்து அதில் இறைவனை வைத்து வழிபடுகிறோம். அதன் மூலம் இறைவனை உணர்கிறோம். பூஜை அறையை முடிந்த வரை சிம்பிளாக வைத்துக்கொள்ளலாம் என்பது என் அபிப்ராயம். நூற்றுக்கணக்கான படங்களை சேர்த்து வைத்தீர்களானால், உங்கள் காலத்துக்குப் பிறகு அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் உங்கள் குழந்தைகள் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டால், நீங்கள் பூஜித்து வைத்திருந்த படங்கள் தெருவில் கிடக்கும். இதைத் தவிர்க்க உங்கள் குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்ற ஒன்றிரண்டை வைத்தாலே போதும். இதுபோன்ற கலர் படங்கள் இல்லாத காலத்தில் நம் மூதாதையர்கள் பூஜிக்கவில்லையா என்ன? தீபம் ஏற்றுதல் ரொம்ப விசேஷமான ஒன்று, அதைக் கட்டாயம் செய்யலாம். இறைவன் ரொம்ப சுலபன், நம்மை கோபிக்க மாட்டார், நம் பக்தியை எப்படியும் ஏற்றுக் கொள்வார்.

உஷா: நல்லதைச் செய்பவர்களுக்கு சோதனைகளும், கஷ்டமும் வரும்போது, ‘இது கர்ம பலன், நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’ என்பது தெரிந்தாலும், நல்லவராகவே இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஒரு உறுதியுடன்  எப்படி வளர்த்துக் கொள்வது?

துஷ்யந்த்: நம் தெற்கு பாரதத்தில் இருந்த மகான்கள்; பக்தியை வளர்த்தவர்கள்; தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் தொண்டாற்றியவர்கள்; சனாதன தர்மத்துக்காகப் போராடியவர்கள் இப்படி நல்லதை மட்டுமே செய்து தொண்டாற்றியவர்களே நிறைய துன்பங்களையும், கஷ்டத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். அவர்களே அதற்கு விதிவிலக்கு இல்லை என்கிறபோது, நாமும் இதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற பக்குவம் வர வேண்டும். அது இறை அருளால் கிடைக்கும்.

நம் பாரத தேசத்தில், சனாதன தர்மம் வேறூன்றி நல்லதை நிலைநாட்டியதற்கு காரணம், நல்லவற்றைக் காதால் கேட்டு, வாயால் பாடி, மனதால் சிந்திக்கப் பழகியதால்தான். கஷ்டம் குறைய பல மைல் தூரம் சென்று பரிகாரம் செய்ய முயல்வதை விட, சுலபமானது வீட்டிலிருந்தபடியே எவ்வளவுக்கெவ்வளவு நல்லவற்றைக் கேட்க முடியுமோ அதைச் செய்யலாம். அதுவும் இந்த யுட்யூப் காலத்தில், நிறைய பேர் நல்லவற்றை சொல்லியிருப்பதைக் கேட்க முடியுமே. அதைச் செய்யும்போது, கஷ்டத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமையும், பக்குவமும் கிடைக்கிறது.

உஷா: ஆன்மிகத்தையும், நல்ல விஷயத்தையும் கேட்க, படிக்க ரிடையர் ஆன பிறகுதானே நேரம் கிடைக்கும். அப்போது செய்யத் தொடங்குவது சரியாக இருக்குமா?

துஷ்யந்த்: ஒரு வேலைக்குச் சேரும்போது, பிராவிடன்ட் ஃபண்ட் பிடிக்க ஆரம்பிப்பார்கள். அது ஓய்வு பெறும்வரை சேர்ந்துகொண்டே வரும். இறுதியில் அதற்கான பலன் கிடைக்கும். அதுபோல, ஆன்மிக பலத்தை சிறிய வயதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். அறுபது வயதுக்கு மேல் திடீரென்று, நான் உடம்புக்கு வந்து கஷ்டப்படக் கூடாது, எனது மரணம் இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைக்கத் தொடங்குவதற்கு பதிலாக, இளம் வயதிலேயே தினமும் இதற்கு ஐந்து நிமிடம் ஒதுக்கினால், அது ஓய்வு பெறும் காலத்தில் நமக்கு நல்ல பலன் தரும். சனாதன தர்ம வழி வந்தவராக இருந்தால் ஒரு பகவத் கீதை படிக்கலாம்; இஸ்லாமியர் குரான் படிக்கலாம்; கிறித்தவர் பைபிள் படிக்கலாம். 24 மணி நேரத்தில் தினமும் ஐந்து நிமிடம் படித்துக் கொண்டே வந்தால், அறுபது வயதில், இறைவன் நமக்கு எதைத் தந்தாலும், நமது கர்மபலன் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுவோம்.

துஷ்யந்த்
துஷ்யந்த்

உஷா: கடவுளை நாம் பார்க்க முடியாது என்பதால்தான் குரு என்பவர் இருக்கிறார். அவரிடம் போய் நம் கஷ்டத்தைச் சொல்லி, அதற்குத் தீர்வு கேட்கிறோம். ஆனால், நாம் தேடிப்போவது ஒரு மஹான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் எப்படிப்பட்டவர் என்பதை எப்படி அறிவது?

துஷ்யந்த்: ‘நாயகன்’ படத்தில் வருவது போல், ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது. வேதாந்த தேசிகர் ஒரு ஆச்சாரியரின் லட்சணங்கள் என்றே சிலவற்றைக் குறிப்பிடுகிறார். ஆசாரியர் துறவியாக இருக்கவேண்டிய அவசியமில்லை, துறவி ஆசாரியராய் இருப்பார் என்று சொல்ல முடியாது. நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மஹாபெரியவர் என்று சொல்லக்கூடிய பரமாச்சாரியாள் போன்று சம்பிரதாயத்தில், பாரம்பர்யமாக வந்த பல ஆசாரியர்களைப் பின்பற்றுவது நல்லது.

ஆனால், இது பிரச்னைகளுக்கு விரைவான விடை காணும் காலமாக இருக்கிறது. ‘யார் எனக்கு உடனே இதற்கு உதவி செய்வார்’ என்பதே முக்கியமாகப் போகிறது. நமக்கு அதிசயம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஒருவரிடம் செல்லும்போது, அவர் வேறு ஒரு அதிசயத்தைச் செய்துவிட்டு காணாமல்கூட போய் விடுகிறார். மதத்தை ஆதாரமாக வைத்து ஏமாற்றுபவர்களுக்கு, சனாதன தர்மத்தில் இடம் கிடையாது.

உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பாவித்துக் கேட்டால், ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அற்புதம் (MIRACLE) நடக்க வேண்டும் என்று நம்பாதீர்கள்; ஞானத்தை நம்புங்கள்.

துஷ்யந்த் ஸ்ரீதர் உடனான நேர்காணல் கல்கி ஆன்லைன் YouTube Channelல் பார்த்துப் பயன் பெற:

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com