அற்புதங்கள் செய்யும் அட்சய திருதியை!

அற்புதங்கள் செய்யும் அட்சய திருதியை!

ட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள். திருதியை என்றால் மூன்றாம் நாள்.   சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை. அள்ள அள்ளக் குறையாதது அட்சயம். இந்த நாளில் தொடங்கும் யாவும் வளரும். வாங்கும் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களைத் தரும். அதனால்தான் ஒரு ஆண்டில் வரும் 24 திருயை திதிகளில் அட்சய திருதியை மிக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை திருநாளின் விசேஷங்களை, 'பவிஷ்யோத்திர புராணம்'  விளக்குகிறது.

1. கிருத யுகம் பிறந்தது இந்த அட்சய திருதியை நாளில்தான்.

2. குபேரனுக்கு மஹா சம்பத்து கிடைத்து செல்வங்களின் அதிபதியாகியது இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்.

3. சிவன் பிட்சாடனராக வந்து அன்னபூரணி கையால் அன்னம் இடப் பெற்றது அட்சய திருதியை அன்றுதான்.

4. குசேலன் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு பிடி அவல் கொடுத்து குபேர யோகம் பெற்றது அட்சய திருதியை அன்றுதான்.

5. ஸ்ரீ கணபதி மகாபாரதம் எழுதத் தொடங்கியதும் இந்த நாளில்தான்.

6. பாஞ்சாலியின் மானம் காக்க ஸ்ரீ கிருஷ்ணர், 'அட்சய' என்று சொல்லி அவள் புடைவை வளர்ந்ததும் இந்த நாளில்தான் என்று கூறப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது என்பது சமீப காலங்களில் பிரபலமாகி வரும் ஒன்று.  அன்று தங்கம், வெள்ளி மற்றும் வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம். ஆனால், அன்று தங்கம் வாங்குவதை விட தானம் செய்வதே மிகச் சிறந்த புண்ணியம் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அன்று செய்யும் தான, தர்மங்கள் நமக்கு ஒப்பற்ற புண்ணியங்களைக் கொடுக்க வல்லது. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இவ்வுலகில் இல்லாமையை நீக்குவதற்காகவே அட்சய திருதியை அன்று தான, தர்மங்கள் செய்யப்படுகின்றன.

கையளவு நெல் விதைகள்தான் பல மூட்டை நெல் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. அதேபோல அட்சய திருதியை அன்று செய்யும் தானங்கள் பல ஆயிரம் மடங்காக ஆகி நமக்கு நற்பலன்களை விளைவிக்கும். அன்ன தானம், வஸ்திர தானம், போன்றவை நம் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமியை அழைத்து வரும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயார் பாற்கடலில் வாசம் செய்கிறாள். அதனால் உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை நிறமுள்ள பொருட்களை அன்று தானம் கொடுப்பது நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கும். நம் வீட்டுக்கும் கல் உப்பு, கற்பூரம் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கலாம். அட்சய திருதியை மங்கலகரமான நாளாததால் அன்று   புதிதாக தொழிலை ஆரம்பிக்கலாம். புதிதாக கலைகளை கற்க ஆரம்பிக்கலாம். புது வீடு மனை, வாகனங்கள் வாங்கலாம்.

அட்சய திருதியை நாளில் பெருமாளையும் மகாலட்சுமி  தாயாரையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. வெள்ளை நிறத்தில் பால் பாயசம், தயிர் சாதம்  நைவேத்தியம் வைத்து, வெள்ளை மல்லிகை மலர்களால் மகாலட்சுமி போற்றிகள் சொல்லி அர்ச்சித்து  வழிபட வேண்டும். வீட்டில் பூஜை செய்வதோடல்லாமல், கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்யலாம். புனிதத் தலங்களுக்குச் செல்லலாம், புனித நதிகளில் நீராடலாம். அன்று செய்யும் எல்லா புனிதமான காரியங்களுமே செழித்து வளரும்.

வங்காளத்தில் அட்சய திருதியை நாளில், 'அல்கதா' என்னும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். இந்த நாள், ‘ஜாட்’ எனப்படும் விவசாய சமூகத்துக்கு மிக மங்கலகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்திலுள்ள ஆண் மகன் விவசாயம் செய்ய நிலத்துக்கு மண்வெட்டியுடன் செல்வார்.

பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் நெல் விதைப்பை அட்சய திருதியை அன்றுதான் தொடங்குகிறார்கள். ஒடிசாவில் கிணறு வெட்டுதல், வீடு கட்டுதல் போன்ற வேலைகளைத் தொடங்க அட்சய திருதியையே விசேஷமான நாளாகக் கருதுகிறார்கள். அட்சய திருதியை ஒரு சிறந்த முகூர்த்த நாளானதால் அன்று திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

சமணர்கள் அட்சய திருதியை நாளை, 'அட்சய தீஜ்' என்று சொல்கிறார்கள். தீர்த்தங்கரரான ரிஷப தேவரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

அட்சய திருதியையோடு ரோஹிணி நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அந்த நாள் மிக மங்கலகரமான நாளாகக்  கருதப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வரும் அட்சய திருதியை அன்று ரோஹிணி நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. இந்த நன்னாளில் நாமும் திருமாலையும் மகாலட்சுமியையும் வழிபட்டு, வீட்டுக்குத் தேவையான மங்கலப் பொருட்ளை வாங்கி, நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com