அருள் பெருக்கும் அருணை கிரிவலம்!

அருள் பெருக்கும் அருணை கிரிவலம்!

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. ஆனால், திருவண்ணாமலையை மனதால் நினைத்தாலே, முக்தி தரும் தலமாக விளங்குகிறது. நம் பாரதத் திருநாட்டில் எண்ணற்ற திருத்தலங்கள் உள்ளன. முக்கியமாக பஞ்சபூதங்களுக்கும் தனித்தனி சிவாலயங்கள் உள்ளன. நிலத்துக்குக் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், நீருக்கு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், வாயுவுக்கு திருக்காளத்தி காளத்தீஸ்வரர் திருக்கோயில், ஆகாயத்திற்கு சிதம்பரம் நடராஜப்பெருமான் திருக்கோயில், அக்னிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய பஞ்சபூத சிவஸ்தலங்கள் நம் திருநாட்டில் உள்ளன.

இதில் அக்னி தலமாகிய திருவண்ணாமலை பலவிதங்களிலும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. கைலாசத்தில் சிவன் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால், திருவண்ணாமலையிலோ அந்த மலையே, 'பார்வதி பரமேஸ்வர' ஸ்வரூபமாக காட்சியளிக்கிறது என்பதுதான் இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், தற்போது கலியுகத்தில் கல் மலையாக மாறி காட்சியளிக்கிறது. சித்த புருஷர்கள் நிறைந்த தலம் திருவண்ணாமலை. இன்றும் கூட இந்த மலை மேல் எண்ணற்ற சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்களாம். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார் போன்ற மகான்கள் வாழ்ந்து மக்களுக்கு அருள்பாலித்த திருத்தலம் திருவண்ணாமலை. சித்தர்கள் உருவமற்ற அரூப நிலையில் மலையை வலப்புறமாக எப்போதும் வலம் வந்தபடி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பொதுமக்கள் அவர்கள் வழியில் குறிக்கிடாமல் இருப்பதற்காக இடப்புறமாக மட்டுமே கிரிவலம் வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மையான திருவண்ணாமலை திருக்கோயிலுக்குச் சென்று அருள்மிகு அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும். மகான் ரமணர் பால பருவத்தில் தவம் செய்த பாதாள லிங்க குகை இந்தக் கோயிலுக்குள்தான் உள்ளது. கம்பத்து இளையனார் சன்னிதியருகே அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்து ஆட்கொண்ட இடத்தை தரிசிக்கலாம். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் வெளியே வந்து கோயிலின் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கை கூப்பி வணங்க வேண்டும். பின்பு பூத நாராயணர் கோயிலில் பெருமாளை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு ரெட்டைப் பிள்ளையார் கோயிலில் கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும். இந்தப் புனித மலையைச் சுற்றி 14 கி.மீ. தொலைவு நடந்து செல்வதுதான் கிரிவலம். அனைத்து நாட்களிலும் பக்தர்களால் கிரிவலம் செய்யப்பட்டாலும், லௌகீக வாழ்க்கைக்கு அருள்பாலிக்கும் பௌர்ணமி கிரிவலமும், கர்ம வினைகளைத் தீர்க்கும் அமாவாசை கிரிவலமும்தான் சிறப்பானது.

கிரிவலப்பாதையில் ரமண மகரிஷி ஆசிரமம், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் ஆசிரமம் முதலியவை உள்ளன. கிரிவலப்பாதையில் திசைக்கொன்றாக அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் முதலிய அஷ்ட லிங்கங்களையும் வணங்கிச் செல்வது மரபு. முடிவில் ஈசான லிங்கத்துக்கருகில் அமைந்துள்ள அம்மையப்பன் கோயிலில் வணங்கி, பிறகு ஈசான லிங்கத்தை தரிசிக்க வேண்டும். இறுதியில் உலக வாழ்க்கையின் முடிவு இதுதான் என்பதை ஆணித்தரமாக அறிவுறுத்தும் வகையில் ஈசான லிங்கம் மயானத்தில் அமைந்துள்ளது. பிறகு பூதநாராயணர் கோயிலில் பெருமாளை தசிரித்து கிரிவலத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

த்தகைய சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை கிரிவலம் உலகப் புகழ் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்தும் பலரும் ஆன்மிக உணர்வோடு திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கிறார்கள். திருவண்ணாமலையில் உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீப உத்ஸவம் நடைபெறுகிறது. கார்த்திகை பௌர்ணமியன்று மட்டும் பத்து லட்சம் பேருக்குக் குறையாமல் கிரிவலம் செய்கிறார்கள். அன்று கிரிவலம் செய்தால் அந்த ஆண்டு முழுமைக்குமான பன்னிரண்டு பௌர்ணமிகளிலும் கிரிவலம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலிருந்தும் கார்த்திகை பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வருகின்றனர்.

கிரிவலம் எனும் வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும் என்று ரமண மகரிஷிகள் சொல்லியிருக்கிறார். ஒரு நிறைமாத கர்ப்பிணி எப்படி அடி அடியாக எடுத்து வைத்து நடப்பாளோ, அதேபோல கிரிவலமும் மிக மெதுவாகச் செய்ய வேண்டும். மனதில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்தபடி, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே செல்ல வேண்டும். அவ்வப்போது மலையை ஏறிட்டுப் பார்த்து கை கூப்பி தொழுதபடி நடக்க வேண்டும். முழு முதற்கடவுளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடி, கொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுகிறது.  மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகள் நம் வாழ்வைச் சிறப்பானதாக மாற்றும்.

www.aanmeegam.in

கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாட்களுமே உகந்த தினங்கள்தான். ஆனாலும், பௌர்ணமி தினத்தில் செய்யும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விட அதிக சிறப்பு உண்டு. ஊழ்வினையை நீக்கும் அண்ணாமலையாரை நினைத்தாலே பாவங்கள் தீரும். 'கிரிவலம் வர வேண்டும்' என்று நினைத்த மாத்திரத்தில் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். வார நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரிவலப் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை: ஞாயிற்றுக்கிழமை: சிவலோக பதவி கிடைக்கும். திங்கட்கிழமை: இந்திர பதவி வாய்க்கும். செவ்வாய்க்கிழமை: கடன் தொல்லை ஒழியும். புதன்கிழமை: கலைகளில் தேர்ச்சி பெறலாம். வியாழக்கிழமை: ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை: வைகுண்டப் பதவியை அனுபவிக்கலாம். சனிக்கிழமை: பிறவிப் பிணி அகலும்.

இந்த கார்த்திகை தீபத் திருநாளன்று, 'அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ அருண சிவோம்' என்று துதித்தபடி பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகவே விளங்கும் திருவண்ணாமலையை கிரிவலம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com