ஆயிரம் கரங்கள் நீட்டும் ஆதவனைத் தொழும் சப்தமி!

ஆயிரம் கரங்கள் நீட்டும் ஆதவனைத் தொழும் சப்தமி!

யிரம் கரங்கள் நீட்டி அன்போடு இந்த உலகை அரவணைக்கும் சூரியனை வழிபடும் நாளே, 'ரத சப்தமி'. சூரிய வழிபாடு என்பது நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆதி காலத்தில் பிரத்யட்ச தெய்வங்களாக சூரியன், சந்திரன், அக்னி முதலியவற்றை மனிதன் வழிபட்டு வந்திருக்கிறான். கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து இந்த உலகில் சகல உயிர்களின் இயக்கத்துக்கும் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரிய பகவான்.

வேத காலத்திலிருந்தே சூரிய வழிபாடு பிரசித்தி பெற்று இருக்கிறது. இந்து மதத்தை ஆறு பாகங்களாகப் பிரித்து சூரிய வழிபாட்டை சௌரவம், சிவ வழிபாட்டை சைவம், விஷ்ணு வழிபாட்டை வைஷ்ணவம், சக்தி வழிபாட்டை சாக்தம், விநாயகர் வழிபாட்டை கணாபத்யம், முருக வழிபாட்டை கௌமாரம் என்று பெயரிட்டு வழிபட்டனர். வைஷ்ணவர்களும் சூரியனை சூர்யநாராயணர் என்ற பெயரில்   வழிபட்டனர்.

தமிழக கோயில்களில் நவகிரகங்களில் சூரியன் இடம் பெற்றிருப்பதால், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் 'ரத சப்தமி' விழா கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் நவகிரகங்களில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து. சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தான தர்மங்களுக்கு பன்மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பல்கிப் பெருகி வளர்ச்சியடையும்.

அதேபோல, வடக்கே ஒரிசாவில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயிலிலும் மற்றும் இந்தியாவில் எங்கெங்கு சூரியனுக்கு தனிக் கோயில்கள் அமைந்துள்ளனவோ, அங்கெல்லாம் ரத சப்தமி கொண்டாட்டங்கள், விசேஷ பூஜைகள் நடைபெறும். திருமலை, ஸ்ரீரங்கம் போன்ற வைஷ்ணவ கோயில்களிலும் ரத சப்தமி விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.

உயிரினங்கள் இவ்வுலகில் வாழ சூரியனே காரணம். அந்த சூரிய பகவானின் அருளைப் பெற உகந்த நாளாக ரத சப்தமி நாள் அமைந்திருக்கிறது. தை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி'யாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் சூரியன் தன் ரதத்தில் வடக்கு நோக்கிப் பயணம் ஆரம்பிக்கும் நாளே ரத சப்தமி நாளாகும். அன்று சூரியனை வழிபடுவதன் மூலம் நோய்கள் அகலும், ஆரோக்கியம் சிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த வருடம் ரத சப்தமி தினம் நாளை ஜனவரி 28ஆம் தேதி வருகிறது.

ரத சப்தமி அன்று சூரியன் உதயமானதும் கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.  ஏழு எருக்க இலைகளை எடுத்துக் கொண்டு.  ஆண்கள் அதில் அட்சதையையும், பெண்கள் அத்துடன் சிறிது மஞ்சள் தூளையும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று இலைகளை தலை மீதும், இரண்டு இலைகளை வலது தோள்பட்டை மீதும், இரண்டு இலைகளை இடது தோள்பட்டை மீதும் வைத்து சூரியனை வணங்கி,

’ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி!

ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸூ ஜன்மஸூ

தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமி நௌமி ஸப்தமி!

தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தார்க்க பத்ர

ஸ்நாநேன மம பாபம் வ்யபோஹய!’

எனும் மந்திரத்தைச் சொல்லி நீராட வேண்டும். ரத சப்தமி அன்று எருக்க இலை வைத்து நீராடி சூரியனை வழிபடுவதன் மூலம் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும். எருக்க இலைகளை தலை மேல் வைத்து நீராடுவதன் மூலம் மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் கதிர்கள் எருக்கம் இலை வழியே இழுக்கப்பட்டு நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளை நீக்குகிறது.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்கு அருளியவர் பீஷ்மர். குருக்ஷேத்ர யுத்தத்தில் அர்ச்சுனனால் வீழ்த்தப்பட்ட பீஷ்மர், உத்தராயண புண்ணியகாலம் வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். பீஷ்மர் ஒரு புண்ணிய புருஷரான போதிலும் துரியோதனனுக்கு ஆதரவாக நின்று, அவன் அளித்த உணவை உண்டு வாழ்ந்ததால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக்கொள்ளவே இவ்வாறு அம்புப் படுக்கையில் வீழ்ந்தார் என்று சொல்லப்படுக்கிறது. சாமானியர்களும் எளிதில் கடைபிடித்து உலக வாழ்க்கையில் மேன்மையுற விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்களையும் அப்போது எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் உரைக்க, அர்ச்சுனன் கேட்டது கீதை என்றால், பீஷ்மர் உரைக்க ஸ்ரீகிருஷ்ணர் கேட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உரைத்த காரணத்தால் தன் பாவங்கள் நீங்கப்பெற்ற பீஷ்மரின் மேனியை வியாச மகரிஷி சூரிய தேவனுக்குரிய எருக்கம் இலைகளால் அலங்கரித்தார். அந்த நிலையிலேயே சூரிய தேவனை வணங்கி பீஷ்மர் தியானத்தில் ஆழ்ந்து முக்தியும் பெற்றார். பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரத சப்தமி.

ரத சப்தமி திருநாள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு சிறிய பிரம்மோத்ஸவமாகவே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஏழு வாகனங்களில் காலை முதல் இரவு வரை நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருவீதி உலா வருவார். காலை 05.30 மணிக்கு சூரிய பிரபை வாகனம், பிறகு 09.00 மணிக்கு சின்ன சேஷ வாகனம், காலை 11.00 மணிக்கு கருட வாகனம், பிற்பகல் 01.00 மணிக்கு ஹனுமந்த வாகனம், மாலை 04.00 மணிக்கு கல்ப விருட்ச வாகனம், மாலை 06.00 மணிக்கு சர்வ பூபாள வாகனம் கடைசியாக இரவு 08.00 மணிக்கு சந்திர பிரபா வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார் ஸ்ரீ ஏழுமலையான். ஒரே நாளில் மலையப்ப சுவாமியின் ஏழு வாகனங்களின் சேவைகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காரணத்தால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள். இந்த ரத சப்தமி விழாவை, ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதை தரிசிப்பவர்களுக்கு சூரிய கிரக தோஷம் மற்றும் நவகிரக தோஷம் எதுவும் தாக்காது என்று நம்பப்படுகிறது.

சூரிய பகவான் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் ரத சப்தமி நன்னாள் சூரிய ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. ரத சப்தமியன்று சூரிய பகவானை வழிபடுவோருக்கு சிறந்த ஆரோக்கியம் கிடைப்பதால் இது, 'ஆரோக்கிய சப்தமி' என்றும் வழங்கப்படுகிறது. இந்த ரத சப்தமி அன்று எருக்கம் இலைகளை வைத்து நீராடி சூரியனை வணங்கி நாமும் நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com