சீரும் சிறப்புடன் சிங்காரமாய் வரும் சித்திரை!

சீரும் சிறப்புடன் சிங்காரமாய் வரும் சித்திரை!

‘பூங்குயில் இசை பாட

பூஞ்சிட்டென வரும் தமிழ்ப்

புத்தாண்டு சோபன-சோபகிருதுவை

மலர் தூவி வணங்கி வரவேற்போம்!’

‘சோபன-சோபகிருது’ என்பது தமிழ் வருடங்கள் அறுபதில் முதலாவதாக வரும் ஆண்டு. தமிழ் மாத முதல் நாளான ஏப்ரல் 14 அன்று முதல் ராசியான மேஷத்தில் சூரிய பகவான் பிரவேசிக்க, தமிழ்ப் புத்தாண்டான சித்திரை பிறக்க, வசந்த காலமும் ஆரம்பமாகிறது. பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரையே முதல் மாதமாகும். பிரம்மா உலகைப் படைக்கத் தொடங்கியது சித்திரை முதல் நாள் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

வாசனை வீசும் மலர்கள், இளம் தளிர்களின் மணம், குளிர்ந்த தென்றல் காற்று, தானிங்கள் நிறைவாக இருப்பது, மங்கல நிகழ்வுகள் நடைபெறுவது போன்றவற்றைத் தன்னுள்ளே கொண்ட உத்தமமான காலமென்பதால், வசந்த காலம் முதலாவது மாதமான சித்திரையில் வைக்கப்பட்டுள்ளது.

காலம் - இது ஆதி அந்தமில்லாத ஒன்று எனினும், சூரிய, சந்திரர்களின் போக்கை வைத்து வருடம், மாதம் போன்ற பிரிவுகளை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சூரியனைக் கொண்டு கணக்கிடப்படுவது, ‘சௌரமான’மென்றும், சந்திரனை வைத்துக் கணக்கிடப்படுவது, ‘சந்திராயனம்’ என்றும் கூறப்படுகிறது. சௌரமானத்தை வைத்தே, பல கர்மாக்கள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுப் பஞ்சாங்கமும்; படித்தலும்: புதுப் பஞ்சாங்கம் ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கு முன்பாக வந்துவிடும். ‘புதுப் பஞ்சாங்கம் வந்தாச்சா? வாங்கியாச்சா?’ என ஒவ்வொருவரும் பேசிக்கொள்வது வழக்கம். பஞ்சாங்கங்களில் ஸ்ரீரங்கம், பாம்பு, திருநெல்வேலி என பல இருப்பினும் ஒருசில மாற்றங்களால் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் சற்றே வேறுபடும். திதி, வார, நட்சத்திர, யோக, கரண எனும் ஐந்து அங்கங்களை விளக்குவது பஞ்சாங்கம்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று அதிகாலை நீராடி, தூய ஆடைகளணிந்து, வீட்டிலுள்ள பெரியவர் பூஜை செய்ய ஆரம்பிக்கும் முன், புதுப் பஞ்சாங்கத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜையில் வைத்து, அனைத்து பூஜைகளும் முடிந்த பின்னர் தீப, தூபம் காட்டி, பின் புதுப் பஞ்சாங்கத்தை எடுத்து அதிலுள்ள பலன்களைப் படிப்பது வழக்கம். பஞ்சாங்கம் படிப்பதும், கேட்பதும் விசேஷமாகும். வாரம், திதி, நட்சத்திரம் குறித்துப் படிக்கையில் முறையே ஆயுள், ஐஸ்வர்யம் மற்றும் நினைத்த காரியங்கள் நடைபெறுமென கூறப்படுகிறது. மேலும், ஜோதிட சாஸ்திர ரீதியாக பின்னால் நடப்பவைகளைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கேற்ப பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன.

சித்திரை சிறப்பு எதுவென்றால் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணமாகும். அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவம் மதுரை மாநகருக்கும், சித்திரை மாதத்துக்கும் சிறப்பென்பதால் சித்திரைத் திருவிழா அங்கே பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கேரள மாநிலத்தில் தமிழ் சித்திரை வருடப் பிறப்பு தினம் அல்லது மறுநாள் (வருடத்துக்கு வருடம் மாறுபடும்) விஷு புண்ணிய காலமாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாளிரவே பூஜையறையை சுத்தம் செய்து, திருவிளக்கின் முன்பு கோலமிட்டு, கொன்றைப்பூ, பழங்கள், காய்கறிகள், வெற்றிலைப் பாக்கு அணிகலன்கள், மங்கலப் பொருட்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை வைப்பது வழக்கம்.

மறுநாள், அதாவது விஷுக்கனியன்று வீட்டுப் பெரியவர்களில் ஒருவர் எழுந்து முதலில் நீராடி, புத்தாடை அணிந்து திருவிளக்கினை ஏற்றி வழிபாடு செய்த பின்பு, மற்றவர்களை எழுப்பி பூஜையறைக்குள் அழைத்துச் செல்கையில் கண்களை மூடிய வண்ணம் வந்து, பிறகு திறந்து மங்கலப் பொருட்களைக் காண்பர். அன்று சிறியோர்கள், பெரியோர்களைப் பணிந்து வணங்கி கை நீட்ட, அவர்கள் கைகளில் காசு கொடுத்து ஆசீர்வதிப்பார்கள் பெரியோர்கள். இதுவே கை நீட்டமாகும்.

இதனைக் கூறும் பிரசித்தமான விஷுக்கனிப் பாடல் இதே…

‘கனி காணும் நேரம் கமல நேத்ரண்டே

நிறமேரும் மஞ்சத்துகில் சார்த்தி

கனக கிங்கிணி வளகல் மோதிரம் அணிஞ்சு காணேனம் பகவானே’

என்பதாகும்.

Picasa 3.0

சித்திரை ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி: நெய்யில் வறுத்தெடுத்த வேப்பம்பூவை, வெல்லப் பாகுடன் சேர்த்து செய்யப்படும் வேப்பம்பூ பச்சடி, சாப்பாட்டில் முக்கியமான ஒரு வகையாகும். உடலிலுள்ள கிருமிகளை அழிக்கவும், பித்தம் போன்ற வியாதிகளை நீக்கவும் இது உதவும்.

பச்சடி தத்துவம்: பகல்-இரவு எப்படி மாறி மாறி வருகிறதோ, அதுபோல மனித வாழ்க்கையில் இன்பமும், துன்பமும், நல்லதும் கெட்டதும் மாறி மாறி வருமே தவிர, நிலையானது என்று எதுவும் கிடையாது என்கிற தத்துவத்தை வேப்பம்பூ பச்சடி தன்னுள்ளே கொண்டுள்ளது.

சித்திரை நிகழ்வுகள் பல வகைப்படும். அவை அட்சய திருதியை, சித்திரா பௌர்ணமி, சித்ர குப்த பூஜை, அன்னை மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகையாற்றில் இறங்கல், விஷுக்கனி, திருச்சூர் பூர விழா போன்றவைகளாகும். சீர்மிகு சித்திரையை அன்புடன் வணங்கி வரவேற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com