ஸ்ரீ நாகசாயி மந்திர் கும்பாபிஷேகப் பெருவிழா!

ஸ்ரீ நாகசாயி மந்திர் கும்பாபிஷேகப் பெருவிழா!

கோவை மாவட்டத்தில் அமைந்த, ‘ஸ்ரீ நாகசாயி மந்திர்’ பிரசித்தி பெற்ற ஒரு ஷீரடி பாபா கோயில் ஆகும். 1939ல் பி.வி.நரசிம்ம ஸ்வாமிஜியால் சி.வி.ராஜன் மற்றும் சி.வரதராஜ அய்யா அவர்களுடன் சேர்ந்து  ஷீரடி சாயி பாபாவுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஷீரடி சாயி பாபாவின் ஓவியம் ஒன்றை மட்டுமே வைத்து பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் பூஜை, ஆரத்தி, பஜன் முதலியவற்றை செய்து வந்தனர். பிறகு இது ஸ்ரீ சாயி பாபா மடம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 1943ல் மேட்டுப்பாளையம் சாலையில் சி.வரதராஜ அய்யா அவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் சாயி பாபா காலனி என்னும் இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது.

1943ம் வருடம் ஜனவரி 7ம் தேதி, ஒரு வியாழக்கிழமை இந்தக் கோயிலில் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதம் நடைபெற்றது. வியாழக்கிழமை ஆதலால் பாபாவுக்கு பஜனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாபாவுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட மலர்கள் அவர் படத்தின் முன்பு குவிந்திருந்தன. அப்பொழுது ஒரு நாகம் படமெடுத்த நிலையில் பாபாவின் படத்துக்கருகே அந்தப் பூக்குவியலில் காட்சியளித்தது. பக்தர்கள் பரவசத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பாம்பு அங்கேயே சில மணி நேரம் இருந்து பஜனைப் பாடல்களைக் கேட்டது. கூடியிருந்த மக்கள் பாபாவே அங்கு நாகமாக எழுந்தருளியிருக்கிறார் என்று பக்தியோடு கிண்ணத்தில் பாலை ஊற்றி அருகில் வைக்க, அதை அருந்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும் புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது. பிறகு தானாகவே அந்தப் பாம்பு அந்த இடத்தை விட்டு அகன்று மறைந்தது. இந்த அற்புத நிகழ்வு ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் 35ஆவது அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாயிசுதா பத்திரிகையிலும் இதைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாபா நாகர் ரூபத்தில் வந்ததன் அடையாளமாக இந்தக் கோயில், 'ஸ்ரீ நாகசாயி மந்திர்' என்றே அழைக்கப்படுகிறது.

1961ல் ஸ்ரீ ஷீரடி பாபாவின் பளிங்கு சிலை வடிவமைக்கப்பட்டு ஸ்ரீ சத்ய சாயி பாபாவால் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாபாவுக்கென்று தென்னகத்தில் முதன் முதலில் அமைந்த கோயில் இதுவென்பதால் இந்தக் கோயில், ‘தென் ஷீரடி சாயி பாபா கோயில்’ என்றே வழங்கப்பட்டது.

இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 'துனி' என்னும் அகண்ட நெருப்பு ஷீரடியிலிருந்து கொண்டு வந்து இங்கே ஏற்றப்பட்டது. ஷீரடியில் ஸ்ரீ பாபா கையில் ஒரு தடி அல்லது தண்டம் 'சட்கா' என்னும் பெயரில் வைத்திருந்தார். அதைப் போலவே இங்கேயும் ஒரு தண்டம் செய்து பாபா அருகே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவின் பாதம் பிரதிட்ஷை செய்யப்பட்ட இடத்தில் நமஸ்காரம் செய்யும்போது அந்த தண்டத்தால் பக்தரின் முதுகில் லேசாகத் தட்டுகிறார்கள். பாபாவின் ஆசி தண்டத்தின் மூலம் பக்தர்களுக்குக் கிடைகிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் தங்கத்தேரில் கோயில் பிராகாரத்தைச் சுற்றி ஸ்ரீ பாபா பிரதட்சணம் செய்யும் வைபவமும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று இக்கோயிலில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ ராமநவமி, கோகுலாஷ்டமி, குருபூர்ணிமா விஜயதசமி போன்ற தினங்கள் ஷீரடியைப் போலவே இங்கேயும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பாபா நாகமாகக் காட்சியளித்த ஜனவரி 7ஆம் தேதியை, 'தரிசன தினம்' என்று ஒவ்வொரு வருடமும் பூஜை, ஆரத்தி, பஜனை, அன்னதானம் என விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த 'தரிசன தினத்தன்று' ஸ்ரீ பாபாவை தரிசிக்கிறார்கள்.

இக்கோயிலுக்கான அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பெருவிழா இருபத்தியொரு வருடங்கள் கழித்து நாளை (01.02.2023) நடைபெற உள்ளது. இப்பெருவிழாவை ஒட்டி கோயில் முழுவதும் சீரமைக்கப்பட்டு பளீரென்று ஜொலிக்கிறது. யாகசாலை பூஜைகள் 28ஆம் தேதி முதலே ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. அன்றிலிருந்தே கலை நிகழ்ச்சிகள், உபன்யாஸங்கள் போன்றவை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. நாளை காலை 09.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். கோலாகலமாக நடைபெறவிருக்கும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவின் அருளைப் பெறக் காத்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com