இன்று சனி மகாபிரதோஷம்!

இன்று சனி மகாபிரதோஷம்!

பிரதோஷம் என்றதும் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது சிவாலய வழிபாடுதான். இன்று பிரதோஷ தினம். அதிலும் சிறப்பு மிக்க சனி மகாபிரதோஷம். சனிக்கிழமையோடு திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்கிறோம். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளியான ஆலகால விஷத்தை அருந்திய ஈசன், அந்த விஷயத்தின் நச்சுத்தன்மை தீர்ந்ததும் ஆனந்தத் தாண்டம் ஆடி, தேவர்களுக்கு அருள்புரிந்த வேளை ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி என்பதால் சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் சிறப்புடையது.

சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமைவதாகும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது. சிவபெருமானை குறிக்கும் சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளை குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவு பெறும் பிரதோஷ பூஜைகளால் மகாலட்சுமி தாயாரின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால் சனி மகா பிரதோஷம் மிகச் சிறந்ததாக போற்றப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று நந்தி பகவானையும் சிவபெருமானையும் ஒருசேர வணங்கினால் இந்த ஜன்மத்தில் செய்த பாவங்கள் மட்டுமின்றி, முந்தைய பிறவியில் செய்த பாவங்களும் தீர்ந்துவிடும் என்பதை நம்பிக்கை.

பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி, சிவனை நினைத்து விபூதி அணிந்து, ஐந்து எழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். அதன் பிறகு சிவ ஸ்தோத்திரம் மற்றும் மாலைகளைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் மிகவும் முக்கியமானது. சிவபுராணம் பாராயணம் செய்தால் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து, மாலையில் சிவ பூஜை செய்ய வேண்டும்.

சிவபெருமானின் திருவுருவப்படம் அல்லது லிங்கத்துக்கு போற்றி திருத்தாண்டகம் வாசித்து அர்ச்சனை செய்யலாம். மேலும், லிங்காஷ்டகம் கோளறு பதிகம் பாடி சிவனை துதிக்க வேண்டும். சுவாமிக்கு வீட்டிலேயே செய்த ஒரு பிரசாதத்தை நிவேதனம் செய்யலாம். இவ்வாறு எளிமையாக சிவ பூஜை செய்து பிரதோஷ விரதத்தை பூர்த்தி செய்யலாம். பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வணங்கி ஆசி பெறுவதாகக் கூறப்படுகிறது. எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலை கொண்டு சிவனையும் நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம கர்ம வினைகளும், செய்த பாவங்களும் நீக்கி சிறப்பான பலன்களைப் பெறலாம். பிரதோஷ காலத்தில் பார்வதி தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைக் காணலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும் இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமறை பாராயணத்தையும் மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பது சிறந்த பலனைத் தரவல்லது.

சனி பிரதோஷத்தில் சிவபெருமானை முறையாக வழிபட, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டம சனியின் தாக்கம் வெகுவாகக் குறையும். இப்படி தொடர்ந்து 11 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம். ஒரு சனி பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபடுவது ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த பலனைப் பெற்றுத் தரும். பிரதோஷ விரதம் இருந்தால் தடைப்பட்ட திருமணம் கைகூடும். வறுமை விலகும். நோய்கள் நீங்கும். சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சனி பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும் புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான, தர்மங்கள் அளவற்ற பலன்களைப் பெற்றுத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் வல்லமை சனி மகாபிரதோஷத்துக்கு உண்டு என்று சிவபுராணங்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com