‘கடலைக் காய்’ திருவிழா தெரியுமா?

‘கடலைக் காய்’ திருவிழா தெரியுமா?

பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்துக் கடைசி திங்கட்கிழமையன்று ‘கடலைத் திருவிழா’ மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வேர்க்கடலை விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் முதல் கடலைகளை பசவங்குடியில் உள்ள ‘தொட்ட பசவங்குடி’ கோயில் நந்திக்கு அர்ப்பணிக்கும் நாளை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். 1537ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழா இன்றுவரை தொடர்கிறது. திருவிழா நடைபெறுவதற்கான கதையும் கூறப்படுகிறது.

கடலை பயிரிடும் விவசாயிகள் தங்கள் விளைச்சலை நடுஇரவில் யாரோ நாசப்படுத்துவதை அறிந்து, இரவு ரோந்து வந்தபோது சலசலவென்று சத்தம் கேட்டு, அவர்கள் கையில் உள்ள கல் மற்றும் கடற்பாறையை வீசி எறிய, ஒரு காளை இறந்து அது கல்லாக மாறிவிட்டதைக் கண்டு திகைத்தார்கள். காளை சிவனின் அம்சம் என்பதால் அந்தக் காளைக்கு பசவங்குடியில் கோயில் கட்ட முடிவு எடுத்தார்கள்.

கல்லான காளையைச் சுற்றிக் கோயில் கட்டியபின் கல்லாக இருந்த காளை வளர்ந்து வருவதைப் பார்த்துப் பயந்தார்கள். ஒரு நாள் காளையின் மீது கடற்பாறையை வீசிய விவசாயியின் கனவில் சிவபெருமான் தோன்றி காளையின் நெற்றியில் சூலத்தை வைக்கச் சொன்னதாகவும், மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் தங்கள் நிலத்தில் விளைந்த முதல் கடலையை அந்தக் காளைக்கு அர்ப்பணிக்குமாறும் கூறியதாக அறியப் படுகிறது. அப்படிச் செய்ததும் கல்காளை வளர்வது நின்றுவிட்டது.

கோவிட்’ காலக்கட்டத்தில் 2 வருடங்களாக இத்திருவிழா தடைபட்டு, இவ்வருடம் நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும். பெங்களூரு அக்கம், பக்கம் உள்ள ஊர்களிலிருந்து பெரும் அளவு விவசாயிகள் இங்கு வந்து கடலையை காளைக்கு அர்ப்பணித்து பிறகு, விற்பனை செய்வர். குவியல் குவியலாக ‘கடலை’ எங்கெங்கும் காணப்படும். பல வகையான உணவுப் பொருட்களின் ஸ்டால்கள் மற்றும் பொம்மை, வளையல் என்று பல கடைகளும் காணப்படும். கடலைத் திருவிழாவின் மூன்று நாட்களும் பெங்களூரு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com