மாசி மகம் தேரோட்டமும் தெப்போத்ஸவமும்!

மாசி மகம் தேரோட்டமும் தெப்போத்ஸவமும்!

வ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் மாசி மாத பௌர்ணமிக்கு தனிச் சிறப்பு உண்டு. மகம் நட்சத்திரத்தில் சந்திரனும், கும்பம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் தினமே மாசி மக தினமாக அனுசரிக்கப்படுகிறது. கோலாகலமாக நடைபெறும் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்கள் மற்றும் வைணவ கோயில்களில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாசி மக திருவிழாவுக்காக கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் வருகின்ற 8ம் தேதி கொடியேற்றம் தொடங்குகிறது. வரும் 15ம் தேதி தேரோட்டமும், 17ம் தேதி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவமும் நடைபெற உள்ளன.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 11ம் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 12ம் தேதி ஓலைச்சப்பரமும், 15ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 17ம் தேதி மகா மகக் குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதேபோல் அபிமுகேஸ்வரர், காசி விஸ்வநாதர், கவுதமேஸ்வரர் கோயில்களின் சார்பில் வருகிற 16ம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

மாசி மகம் திருநாளன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய பன்னிரெண்டு சிவன் கோயில்களில் இருந்து உத்ஸவ மூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளுவார்கள். அப்போது கோயிலின் அஸ்திர தேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெறும். அஸ்திர தேவர்கள் மகாமகக் குளத்தில் நீராடிய பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்வார்கள்.

இதைப்போலவே, கும்பகோணத்தில் உள்ள வைணவ கோயில்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சக்கரபாணி கோயில், ராஜகோபால சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வரும் 9ம் தேதி பத்து நாள் உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12ம் தேதி கருட வாகனத்தில் ஓலைச்சப்பரமும் நடைபெறும். 17ம் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோயில் தேரோட்டமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 12 மணியளவில் காவிரிக்கரை சக்கர படித்துறையில் வைணவ கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறுகிறது. மாசி மகத்தையொட்டி சாரங்கபாணி கோயிலில் வரும் 17ம் தேதி தெப்போத்ஸவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com